June 7, 2023 7:30 am

இராவண கோட்டம் | திரைவிமர்சனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தயாரிப்பு: திட்டக்குடி கண்ணன் ரவி

நடிகர்கள்: சாந்தனு பாக்கியராஜ், ‘கயல்’ ஆனந்தி, பிரபு, இளவரசு, சஞ்சய் கண்ணன் மற்றும் பலர்.

இயக்கம்: விக்ரம் சுகுமாரன்

மதிப்பீடு: 2/5

ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் தென் பகுதிகளில் நடைபெறும் சாதி கலவரத்தின் சர்வதேச பின்னணி குறித்து விவரிப்பது தான் ‘இராவண கோட்டம்’ படத்தின் கதை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏனாதி எனும் சிறு கிராமத்தில் மேலத்தெரு பகுதிக்கு பிரபு செல்வாக்கு மிக்கவராகவும், கீழத்தெரு பகுதிக்கு இளவரசு செல்வாக்கு மிக்கவராகவும், இருவரும் உற்ற நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் எந்த அரசியல்வாதிகளும் நுழைய முடியாது. பிரபுக்கு சாந்தனு வாரிசாகவும், இளவரசுக்கு புதுமுகம் சஞ்சய் மகனாகவும், இவர்கள் இருவரும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த ஊருக்கு அருள் தாஸ் சுயேச்சை வேட்பாளராக பிரபுவால் நியமிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுகிறார். இவர் அரசியல் ஆதாயத்திற்காக ஆளுங்கட்சியில் இணைந்து விடுகிறார்.

இவர் ஏனாதி எனும் கிராமத்திற்குள் அரசியல் கொடிகளையும், சாதி அரசியலையும் திணிக்க முயற்சிக்கிறார். இதற்கு தடைக்கல்லாக பிரபு இருக்கிறார். இந்நிலையில் இந்த ஊரில் மழை பொய்த்துப் போனதால் தண்ணீர் பிரச்சினை ஏற்படுகிறது.

இவ்விடயமாக மாவட்ட ஆட்சியரை பிரபுவும், இளவரசும் சந்திக்கிறார்கள். அப்போது மாவட்ட ஆட்சியர், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தை திட்டமிடப்பட்டு ஏற்படுத்த சர்வதேச அளவில் சதி நடைபெறுகிறது. இதற்கு அங்கு வளர்க்கப்படும் கருவேல மரங்கள் தான் காரணம்.

கருவேல மரங்கள் இப்பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இதனால் இங்கு தண்ணீர் பஞ்சம் உருவாக்கப்படுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, இதன் காரணமாக மக்கள் வெளியேறிவிட்டால். இப்பகுதியிலுள்ள கனிம வளத்தை கொர்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க தயாராகிவிடும். இதனை உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவும், அரசாங்கத்தின் மறைமுகமான ஆதரவும் உள்ளது. இதன் காரணமாக நீங்கள் முதலில் கருவேல மரங்களை அகற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள்’ என அறிவுரை கூறுகிறார். இதனை ஒட்டு கேட்கும் அரசு இயந்திரம், அமைச்சர் மற்றும் அரசியல்வாதிகள், பிரபு மற்றும் இளவரசை விபத்தில் மரணம் அடையச் செய்து, அந்த மரணத்தில் சாதி அரசியலையும், சிலை அரசியலையும் புகுத்தி மக்களை பிரித்தாளுகிறது. இதனை சாந்தனு மற்றும் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கருவேல மர அரசியல் குறித்து பேசி இருக்கும் இயக்குநர், இது தொடர்பான விழிப்புணர்வை இராவண கோட்டம் படத்தின் மூலம் ஏற்படுத்தியதற்காக அவருக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம். இருப்பினும் திரைக்கதை பல வெற்றி பெற்ற திரைப்படங்களின் சாயலை நினைவுபடுத்துவதால் சோர்வு ஏற்படுகிறது. விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்க வேண்டிய இரண்டாம் பாதி மற்றும் உச்சகட்ட காட்சி பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கும் வகையில் அமைந்திருப்பதால் சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஏனாதியில் செல்வாக்கு மிக்க தலைவர் என பிரபு மற்றும் இளவரசுவை காண்பித்து விட்டு, அவர்களை சடல அரசியலுக்குள் திணித்து இடுகாடு காட்சிகளை அமைத்திருப்பது பொருந்தவில்லை. கயல் ஆனந்தி இளமையை தொலைத்து திருமணமான பெண்மணி போல் இருப்பதால், அவரை பார்த்தவுடன் பற்றிக் கொள்ள வேண்டிய ‘பக்கத்து வீட்டு பெண்’ எனும் உணர்வு ஏற்படவில்லை. ‘அத்தனை பேர் மத்தியிலே..’ பாடல் தனித்துவமான கவனத்தை பெறுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக கடினமாக உழைத்தோம் என இப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது தெரிவித்திருந்தனர். அவர்களது உழைப்பு உண்மையாக இருந்தாலும், படைப்பு ரீதியாக சுவாரசியமானதாக இல்லை என்பதால் அனைத்தும் வீண்.

இராவண கோட்டம் – சாந்தனுவிற்கான பிரத்யேக வட்டம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்