ஈரானின் முக்கியமான அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கின் அமைந்துள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான கட்டாரில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தின் மீது ஈரான், இன்று திங்கட்கிழமை இராணுவத் தாக்குதலை நடத்தியது.
இதனையடுத்து, தனது வான் பாதுகாப்பு கட்டமைப்பானது ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், ஈரானிய தாக்குதலை கண்டித்ததாகவும் கட்டார் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் ஈரானுடனான மோதல் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளதுடன், அல் உதெய்த் என்ற இந்த தளம், அமெரிக்க மத்திய கட்டளையின் முக்கிய தலைமையகமாக செயல்படுகிறது.
வார இறுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானிய பழிவாங்கலுக்கான முக்கிய சாத்தியமான இலக்காக இந்த தளம் கருதப்படுகின்றது.
உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாக, தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்டார் அதிகாரிகளுக்கு ஈரான் முன்கூட்டியே அறிவித்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவும் இங்கிலாந்தும் கட்டாரில் தாக்குதலுக்குத் தயாராகி, அங்குள்ள தங்கள் குடிமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரித்தன.
கட்டார் பின்னர் அதன் வான்வெளியை மூடிவிட்டதாக அறிவித்தது, தாக்குதலுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான்வெளியை மூடியது.
வான்வெளி மூடல்கள் காரணமாக சர்வதேச விமானப் பயணத்தின் இரண்டு முக்கிய மையங்களான தோஹா மற்றும் டுபாயிலிருந்து விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
Live Updates
கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் "சிதைத்தாலும்", இந்த தாக்குதல் கட்டாருக்கோ அல்லது அதன் மக்களுக்கோ எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனின் சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டதுடன், குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது.
"ஆபத்து கடந்து செல்லும் வரை" குடியிருப்பாளர்கள் ஒரு கட்டிடத்திலோ அல்லது பிற மூடப்பட்ட பகுதிகளிலோ தஞ்சம் அடைய வேண்டும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
"பிராந்தியத்தில் எங்கள் பணியாளர்களைப் பாதுகாக்க நாங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், எங்கள் ஆயுதப்படை வீரர்களைப் பாதுகாக்க எங்களிடம் வலுவான நடவடிக்கைகள் உள்ளன" என, இங்கிலாந்து இராணுவ தளங்களைப் பாதுகாப்பது குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு படைகளின் அமைச்சர் லூக் போலார்ட் கூறினார்.