இங்கிலாந்தில் எதிர்வரும் வாரம் நடைபெறவிருந்த வதிவிட மருத்துவர்களின் வேலைநிறுத்தம், அமைச்சர்கள் மற்றும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்திற்கு (BMA) இடையிலான புதிய ஒப்பந்தத்தின் மூலம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சலுகையை எதிர்வரும் நாட்களில் உறுப்பினர்களின் பரிசீலனைக்கு வைக்க மருத்துவர்களின் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை உறுப்பினர்கள் ஆதரித்தால், டிசெம்பர் 17ஆம் திகதி புதன்கிழமை தொடங்கவிருந்த 05 நாட்கள் வேலைநிறுத்தம் இரத்து செய்யப்படலாம்.
புதிய ஒப்பந்தத்தில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நிபுணத்துவ பயிற்சிப் பதவிகளை விரைவாக விரிவுபடுத்துவது இதில் அடங்கும். இந்த நிபுணத்துவப் பதவிகளின் எண்ணிக்கை 2028ஆம் ஆண்டுக்குள் 4,000ஆக அதிகரிக்கப்படும். ஏற்கெனவே அரசாங்கம் 2,000 பதவிகள் அதிகரிக்கப்படும் என்று உறுதியளித்த நிலையில், தற்போது இது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 1,000 பதவிகள் கிடைக்கும்.
அத்துடன், தேர்வு கட்டணம் போன்ற out of pocket செலவினங்களை ஈடுசெய்வதும் ஒப்பந்தத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்தில் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மருத்துவர்கள்; 5 நாட்கள் தொடரலாம்!
மேலும், வதிவிட மருத்துவர்கள் தங்கள் பயிற்சியின் மூன்றாம் ஆண்டில் நுழையும் சிறப்புப் பயிற்சிப் பதவிகளுக்கு, இங்கிலாந்தில் படித்த மற்றும் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அவசர சட்டம் அறிமுகப்படுத்தப்படும் அம்சமும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் கூடுதல் சம்பளம் குறித்த எந்த வாக்குறுதிகளும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் வதிவிட மருத்துவர்களுக்கு கிட்டத்தட்ட 30% சம்பளஉயர்வு வழங்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, சம்பளத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்பதில் சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் உறுதியாக உள்ளார்.
இந்த சலுகை போதுமானதா என்று தீர்மானிக்க, BMA இப்போது வதிவிட மருத்துவர் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து வருகிறது.
உறுப்பினர்களின் கணக்கெடுப்பு ஆன்லைனில் நடத்தப்படும். வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது டிசெம்பர் 15ஆம் திகதி திங்கட்கிழமை இந்த வாக்கெடுப்பு முடிவடையும்.