புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: அரசியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: அரசியலில் புதிய அத்தியாயம் தொடக்கம்

1 minutes read

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணத்தையும் ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் செய்து வைத்தார். கருப்பு நிற பிளேஸர் அணிந்து மேடையேறிய விஜய், “ச. ஜோசப் விஜய் என்னும் நான்…” என்று உறுதிமொழி எடுத்த தருணத்தில் அரங்கம் முழுவதும் கைதட்டல்களும் உற்சாக முழக்கங்களும் ஒலித்தன.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். விஜயுடன் இணைந்து ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர். என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் எந்த கூட்டணியும் இன்றி 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. மொத்தம் பதிவான 4.9 கோடி வாக்குகளில் சுமார் 1.7 கோடி வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவதற்காக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மே 13ஆம் திகதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழக அரசியலில், விஜயின் எழுச்சி புதிய அரசியல் மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஊழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக செயல்படுவோம் என்ற வாக்குறுதியுடன் 2024ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த விஜய், தற்போது மாநிலத்தின் உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

சினிமாவில் வெற்றிகரமான நடிகராக திகழ்ந்த விஜய், தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பது, தமிழ்நாட்டில் சினிமா மற்றும் அரசியல் இடையேயான உறவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அவரது அரசியல் வருகை, குறிப்பாக இளைஞர்களிடையே அரசியலின் மீது புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.