இங்கிலாந்தில் இந்த ஆண்டின் மூன்றாவது வெப்ப அலை தொடர்ந்து நீடித்து வருவதால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இன்று (09) சில பகுதிகளில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக ஆம்புலன்ஸ் சேவைகள் தொடர்ச்சியான அழுத்தத்துக்கு உள்ளாகும் என்று இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை (NHS) எச்சரித்துள்ளது. இந்த வெப்பம் சிலருக்கு ஆபத்தானதாக அமையலாம் என்பதால், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர உயிராபத்து நிலைகளில் 999 எண்ணையும், ஏனைய அவசரமில்லாத மருத்துவ உதவிகளுக்கு 111 எண்ணையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஆம்பர் (Amber) எச்சரிக்கையும், வடக்குப் பகுதிகளில் மஞ்சள் (Yellow) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையுடன் சேர்த்து, புற ஊதாக் கதிர்வீச்சு (UV) அளவுகளும் மிக அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதிகளில் வீசும் குளிர்ந்த காற்று சூரியனின் உண்மையான வீரியத்தை மறைக்கக்கூடும் என்பதால், மக்கள் போதிய பாதுகாப்பு இன்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக தண்டவாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. East Midlands Railway, South Western Railway, Great Western Railway உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது சேவைகளை ரத்து செய்துள்ளன அல்லது மாற்றியமைத்துள்ளன. பயணிகள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வெப்ப அலை முந்தைய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பில்லை என்றாலும், இது 1976ஆம் ஆண்டு நிலவிய மிக நீண்ட கால வெப்ப அலையைப் போலவே நீண்ட நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1976இல் இங்கிலாந்தின் பல இடங்களில் தொடர்ந்து 16 நாட்கள் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.