சிறுகதை | தவிப்பு | விமல் பரம்

sa

மணிக்கூட்டை  நிமிர்ந்து பார்த்தேன். மணி நாலரையாகிவிட்டது. எல்லாவேலைகளையும் முடித்து விட்டு நடப்பதற்கு ஆயத்தமானேன்.

சிட்னிக்கு வந்ததிலிருந்து நடப்பது அவசியமாகி விட்டது. வீட்டுக்குள் இருப்பதால் உடலும் மனமும் களைத்துப் போகிறது. சிறிது நேரம் வெளியில் போய் வெளிக்காற்று சுவாசிப்பது மனதுக்கு இதமாகயிருக்கிறது.

வேலைக்குப் போன பிள்ளைகள் ஆறு மணிக்குப் பிறகு தான்  திரும்பி வருவார்கள். அதற்குள் என் நடையை முடித்துவிட்டு  திரும்பி விடுவேன்.  கதவைப்  பூட்டிக்கொண்டு வீதியில் இறங்கி நடந்தேன்.

வேலையால் வீடு திரும்பி வருபவர்களும், நடக்க வருபவர்களுமாக ஒரே இரைச்சலாகயிருந்தது. வேடிக்கை பார்த்தபடியே நடைபாதை ஓரமாக நடந்து  பக்கத்திலுள்ள  பூங்காவிற்கு அருகில் வந்தேன். பூங்காவின்  நடைபாதை பெஞ்சுகளில் நடந்து களைத்தவர்களும், வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பவர்களுமாக சிலர் இருந்தனர். அதில் ஒரு வயோதிப தம்பதிகளும் இருந்தனர். அவர்கள் தங்களுக்குள் சுற்றுச் சூழல்  மறந்து மும்முரமாகக்  கதைத்துக்கொண்டு  இருந்தார்கள். அவர்களைக் கடந்து நான் நடந்து போய் திரும்பி வரும்போதும்  அவர்கள் கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான்   வரும்பொழுது, அவர்களும் எழுந்து முன்னால் நடக்கத்தொடங்கி,
சிறிது தூரம் நடந்தபின் பாதையில்  நின்று திரும்பவும் கதைக்கத் தொடங்கினார்கள். ஆறுமணியாகிவிடவே நான் அவசர அவசரமாக என் வீடு இருக்கும் திசையில் திரும்பி நடந்தேன்.

அடுத்த நாளும் நான் நடக்கப் போகும்போது அவர்களை அதேயிடத்தில் மீண்டும் பார்த்தேன். அவர்களைக்கடந்து போகும் போது கதைத்துகொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து நான் கவனிப்பதைக் கண்டு  என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு கதையில் மும்முரமானார்கள். நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு தொடர்ந்து நடந்தேன். திரும்பும் போது  அவர்களும் எழுந்து சிறிது தூரம் சென்று  நேற்று நின்ற அதே இடத்தில் நின்று கதைக்க தொடங்கினார்கள்.
ஒரு கிழமையில் நலம் விசாரித்து கதைக்குமளவிற்கு அறிமுகமாகிவிட்டது.   அன்பான பாசமான தம்பதிகள். மென்மையான அவர்களின் கதையில் என்னையறியாமலே அவர்கள் மீது எனக்கும் அன்பு ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு அவர்களுடன் பத்து பதினைந்து நிமிடமாவது கதைத்து விட்டுத்தான் நடையைத்  தொடருவேன். நாள் போக போக அவர்களுடன் கதைப்பதற்காகவே    மணிக்கூட்டைப் பார்க்கத் தொடங்கிவிடுவேன் .
நானும் அப்பா அம்மாவை விட்டு இங்கு வந்தபின் அவர்களின் ஏக்கம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. இவர்களோடு பழகிய பின் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கிறது.  பிள்ளைகளின் வேலைகள் பற்றியும், பேரப்பிள்ளைகளின் படிப்புகள், விளையாட்டுகள் பற்றியும் மாறி மாறி இருவரும் சொல்லுவார்கள்.

“ஊரிலிருக்கும் போது கோயில்களுக்கும் பஜனைகளுக்கும் அடிக்கடி போவம். இங்கு நாம்  நினைத்தவுடன் ஒரு இடமும்  போக முடியாது. எல்லாத்துக்கும் பிள்ளைகளைத்தான் எதிர்பார்க்க  வேணும். அவர்களுக்கும் நேரமிருக்கும் போது காரில் தான் போகவேணும். வீட்டிலும் அடைபட்டு இருக்க முடியவில்லை. அதனால ஒவ்வொரு நாளும் இங்க வந்து வெளிக்காத்தை சுவாசிக்கிறம். ஆறுதலாக இருந்து கதைச்சிட்டும் போறம் பிள்ளை” என்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி சொன்னார்கள்.

s2

இவர்களைப் போல் வயது போன பெற்றோரை நான் இங்கே சந்தித்து இருக்கிறேன். பெஞ்சுகளில் ஜோடிகளாக இருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். சில ஆண்கள் தங்கள் வயதொத்தவர்களுடன் அரசியல், கோயில் பற்றி  கதைத்துக்கொண்டிருப்பார்கள். இங்கே பிள்ளைகளுடன் வந்திருக்கும் வயது போன பெற்றோருக்கு இதுதான் பிரச்சனை. வீட்டில் நேரமிருக்கிறதில்லை இப்படி வெளியில் வந்துதான் ஆறுதலாக இருக்க முடிகிறது.
எனக்கு இந்த பெரியவரையும் அந்த அம்மாவையும் பார்க்கும் போது சில சமயம் வியப்பாகயிருக்கும். இவர்கள் நடைக்காக வந்தவர்கள் போல் தெரியவில்லை. சில சமயங்களில் அம்மாவின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு சிரிக்க வைப்பதற்கு கதைகள் சொல்லி தானும் சிரிப்பார். என்னைக் கண்டதும் “இதை நீயும் கேளம்மா”  என்று சொல்லி என்னையும் சிரிக்க வைப்பார். எனக்கும் அவர்களுடன் கதைத்துவிட்டு வீட்டுக்கு வருவது மனதுக்கு பெரும் சந்தோஷமாகயிருக்கும். நானும் வீடு திரும்பும் போது அவர்களும் தங்கள் பாதையில் திரும்பி தங்கள் வீடு நோக்கி நடப்பார்கள். சிறிது தூரம் சென்றதும் நின்று மீண்டும் கதைப்பார்கள். அதைப்பார்த்ததும் என் மனதுக்குள் அவர்கள் அப்படி என்ன தான் கதைக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றியது. மனதுக்குள் சிரித்துக் கொண்டே நானும் வீடு திரும்புவேன்.
பின்னேரங்களில் சிலவேளை  ஏதாவது முக்கிய வேலைகள் இருந்தாலோ உறவினர் வீட்டுக்குப் போனாலோ அல்லது அவர்கள் வந்தாலோ நடப்பதற்கு போகமுடியாமல் போய்விடும். நடக்கப் போக முடியவில்லையே என்ற கவலையை விட அவர்களைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலை தான் எனக்கு பெரிதாக தோன்றும். அவர்களைப் பற்றி பிள்ளைகளுடனும்    கதைப்பதனால்,   நான் கவலைப்படுவதைப் பார்த்து பகிடி பண்ணி  பிள்ளைகளும்   சிரிப்பார்கள். பெற்ற தாய் தந்தையைப் போல் நினைக்கும் அளவுக்கு அவர்கள் மீது எனக்கு அன்பு ஏற்பட்டதால் அவர்களை வீட்டுக்கு அழைத்து என் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஆவலும் எனக்குள் ஏற்பட்டது.
ஆறுமாதங்களுக்கு மேலாக அவர்களுடன் ஏற்பட்ட நட்பில் இன்று அவர்களை எனது வீட்டுக்கு அழைக்கும் விருப்பத்தில் அவர்கள் இருந்து கதைக்கும் இடத்தை நோக்கி நடந்தபோது பெரியவர் அம்மாவின் கையை ஆதரவுடன் தடவிக் கொடுத்து   ஏதோ   சொல்லிக்கொண்டிருந்தார். வழமையாக அவர்கள் இருவரின் முகங்களிலும் தெரியும் சந்தோஷம் மலர்ச்சி  இன்று தெரியவில்லை. மாறாக கவலையும் ஆதங்கமும் தெரிந்தது. விரைந்து அவர்கள் அருகில் சென்றேன்.
“இரண்டு பேரும்   நல்லாய் இருக்கிறீங்கள் தானே. எதாவது பிரச்சனையா? ”
என்று கேட்டேன்.

நிமிர்ந்து பார்த்த அம்மாவின் கண்களில்  நிறைய கண்ணீர்.

“என்னம்மா” என்று ஆதரவாக தோளில் கை வைத்துக் கேட்டேன்.

என் கையில் முகத்தை வைத்து தன் கண்ணீரை மறைத்த அம்மா பெரியவரிடம் சொல்லும் படி கண்களைக் காட்டினார்.
“என்னப்பா நீங்களாவது சொல்லுங்கோ” என்று அவசரமாக கேட்டேன்.

என்னவாகயிருக்கும், என் மனம் பட படத்தது. அப்பா நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.
“பிள்ளை இனி நாங்கள் உன்னை சந்திக்கமாட்டோம்” என்றார். பின் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
“ஏன் நாங்களும் இனி இப்படி சந்திக்கமாட்டோம்” என்றார் குரல் நடுங்க.

எனக்கு திக்கென்றது.

“ஏன் எங்கையாவது போறீங்களா?      நீங்கள் போனால் என்னைச்சந்திக்க மாட்டீங்கள் சரி, நீங்கள் இரண்டு பேரும் ஏன் சந்திக்க மாட்டீங்கள் சொல்லுங்கப்பா” என்றேன்.
அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கைகளால் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார். சொல்ல வார்த்தைகள் வரவில்லை உதடுகள் நடுங்கின. அப்பா அம்மாவின் தோளில் கைவைத்து ஆதரவாக அணைத்தபடி என்னைப்பார்த்தார்.

“பிள்ளை நான் மகன் வீட்டிலும் அம்மா மகள் வீட்டிலும் இருக்கிறம். பிள்ளைகள் இருவரும் வேலைக்குப் போவதால பேரப்பிள்ளைகளை நாங்கள் தான் பார்க்கிறம். இப்படி நாங்கள்   பாக்கிறதால பிள்ளைகளுக்கும் உதவி தானே. இதுக்காகத்தானே  ஊரிலயிருந்து.  வந்திருக்கிறம். அவர்கள் வேலையால  வந்த பிறகு பிள்ளைகளை அவர்களிடம் விட்டிட்டு  நாங்கள் இங்க வந்து கொஞ்ச நேரம் கதைச்சிட்டுப் போறம். இப்படி ஒவ்வொரு நாளும் சந்திக்கிறதால  எங்களுக்கு தனிமை வந்ததில்லை. ஆனால் இந்தக் கிழமைக்குள் மகன் மாற்றலாகி மெல்போர்ன் போகயிருக்கிறதால நானும் அவனோட  போறன். இனிமேல் அடிக்கடி எப்படிச் சந்திக்கிறது,  நாம்  சந்திக்காமல் எப்படி இருக்கப்போறம் என்று தெரியவில்லை” குரல் உடைய  அவர் சொல்லவதைக் கேட்டு திடுக்கிட்டு நின்றேன்.

s1

ஒவ்வொரு நாளும் அவர்கள் தவறாமல் வருவதும், சுற்றுச் சூழல் மறந்து தங்களுக்குள் கதைப்பதும் போகும் போதும் பாதையில் நின்று கதைப்பதும், நினைக்க தாங்க முடியாத கவலையாக இருந்தது.

எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றேன். சிறிது நேரம் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லித் தேறி பெஞ்சை விட்டு எழுந்தார்கள்.
“போயிட்டு வாறம் பிள்ளை இனி எப்ப சந்திக்கப் போறமோ தெரியேல” என்று என்னை அணைத்து விடைபெற்றார்கள். அவர்கள் போவதையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். போனவர்கள் பாதையில் வழமையான அதே இடத்தில் நின்று கதைத்துக் கொண்டு நின்றார்கள். நானும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். சிறிது நேரத்தில் தங்களுக்குள் விடை பெற்றுக் கொண்டு பிரிந்து போன பாதையில் தனித்தனியாக நடக்கத்தொடங்கினார்கள்.

– விமல் பரம் | அவுஸ்திரேலியா –

ஓவியங்கள் : இந்து | கனடா

ஆசிரியர்