Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி

அகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி

10 minutes read

மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது! ‘டீச்சர்.. டீச்சர்… தொண்டை அடைத்தது. என்ன தெரியுதா? இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க’

“மதுரத்தின் கண்கள் விரிந்தன வார்த்தை வராமல் நாக்கு குழறியது.

‘க.. கு.. குமார்.. குமரேசன்..’

‘டீச்சர், என்ன ஞாபகம் வச்சிருக்கீங்களே. எனக்கு அது போதும் டீச்சர். நான் உங்கள கொஞ்சமாவா படுத்தி வச்சிருக்கேன். இன்னிக்கு ஒரு மனுஷனா நான் நிக்கிறதுக்கு காரணம் நீங்கதானே. மதுரம் அவனை பக்கத்தில் உட்காருமாறு சைகை காட்டினாள். அவன் தலையை வருடி கொடுத்தாள்.

“நீ…நீ..” கம்பீர குரலில் ஒரு மணிநேரம் வகுப்பறையைக் கட்டிப்போட்ட மதுரம் டீச்சரா இது?

மதுரம்.  அவளைப்பற்றி நினைத்தால் ‘ஹ்ருதயம் மதுரம். கமனம் மதுரம்” என்கிற மதுராக்ஷ்டகம் நினைவுக்கு வந்தால் தப்பேயில்லை. அவளுக்காகவே எழுதி வைத்த மாதிரி அழகு, அறிவு, அதிர்ஷ்டம் எல்லாமே ஒருத்தரிடம் சேர்ந்து இருக்குமா? இருந்ததே! அப்பா சாம்பசிவம் பெரிய business man! அம்மா பொறுப்பான குடும்ப தலைவி. தம்பி ஆனந்த்.

அவளுக்கு பதிமூன்று வயது இருக்கும் போது தான் அப்பாவின் சுயரூபம் தெரிந்தது. அதிர்ஷ்டம் விடை பெற்றுக் கொண்டது. Business என்றதெல்லாம் சுத்த ஹம்பக். நாலு பக்கமும் கடனை வாங்கி கண்டபடி செலவழித்து குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். தினமும் வாசலில் கடன்காரர்கள். தலைமறைவாய் கொஞ்ச நாள். ஜெயிலில் கொஞ்ச நாள். அங்கேயே மாரடைப்பில் இறந்து விட்டதாய் செய்தி வந்தபோது அம்மாவுக்கு விடுதலை கிடைத்த மாதிரி தான் தோன்றியது மதுரத்துக்கு.

ஆனால் ஆனந்த் வாழ்க்கைதான் திசைமாறி போனது. கார், பங்களா, கைநிறைய பணம் என்று பழகிய அவனால் ‘இல்லை’ என்ற வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை. வேண்டாத பழக்கங்கள் அவனை பல கெட்ட செயல்கள் செய்ய தூண்டியது. ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடிவிட்டான்.

மதுரம் இப்போது அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. Average ஐ விட சிறிது கூடுதல் உயரம். மெலிந்த உடல். வெள்ளையில் சிறுபூக்கள் போட்ட Sari. இளம் மஞ்சள், ரோஸ் அல்லது நீல blouse. கண்ணாடி. குரலில் மட்டும் ஒரு கண்டிப்பு. கம்பீரம்.

அப்பா போனதும் டாக்டராகும் தன் கனவையெல்லாம் குழிதோண்டி புதைத்து விட்டு Open University யில் B.A. பொருளாதாரம், B.Ed., Teacher’s training, அப்புறம் M.Ed . என்று மளமளவென்று படிப்பை முடித்து அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியை, பின்னர் உதவி தலைமை ஆசிரியை, இதோ இப்போது தலைமை ஆசிரியை. முப்பத்தைந்து வயதுக்குள் அசுர வளர்ச்சி! தாய் கல்யாணி இல்லையென்றால் இது ஒன்றும் சாத்தியமில்லை.

நாலு வீட்டில் சமைக்கிறேன் என்று கிளம்பிய அம்மாவைத் தடுத்து விட்டாள். செல்வாக்காய் இருந்து அம்மாவை யாரும் ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டாள். Part time வேலை பார்த்து முதலில் ஒரு தையல் மிஷின் வாங்கி விட்டாள். அவளுடைய அறிவுக்கும் கடின உழைப்புக்கும் college professor ஆகும் தகுதி இருந்தும் ஏன் அரசு பள்ளியைத் தேர்ந்தெடுத்தாள்? அதற்கு ஒரு காரணம் இருந்தது.

கான்வென்ட் பள்ளியில் காரில் சென்று படித்தவர்கள், தடம் புரண்ட வாழ்க்கையில், அரசு பள்ளிக்கு மாறிய சூழ்நிலையில், மதுரம் சமாளித்து எழுந்து நின்று விட்டாள். ஆனந்த் குப்புற விழுந்தவன் எழுந்திருக்கவே இல்லை.

அப்போதே மதுரம் நினைத்ததுண்டு ”எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி பள்ளிக்கூடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வளர வளர அவளுக்குள் ஒரு வெறியாகவே மாறியது. இது போன்ற ஒரு பள்ளிக்குத் தான், தன்னுடைய சேவையை அர்ப்பணிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தாள். தரமான ஆசிரியர்கள் தனியார் பள்ளியை நோக்கி படையெடுக்கும் நிலை மாறி அரசு பள்ளியில் சேர ஒரு முன்னுதாரணமாய் தான் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனந்தின் நிலை யாருக்கும் வரக்கூடாதென்று சபதம் எடுத்துக் கொண்டாள்!

”yes! I remember very well! உனக்கு drawing competition ல் முதல் பரிசு கிடைத்த படமில்லையா என்று தட்டு தடுமாறி பேசி முடித்தாள் மதுரம்.

“ஆமாம் teacher! இதன் copy என் பூஜை அறையில். நான் கும்பிடும் ஒரே கடவுள் நீங்கதான்.”

மதுரம் பள்ளியில் ஆசிரியராய் சேர்ந்த புதிது! அவளுக்கு ஆறாம் வகுப்பு ஆங்கிலமும், சமூகவியலும் பாடம் நடத்தும் பொறுப்பு! குமரேசன் வகுப்பில் மூத்தவன். எட்டாவது படிக்க வேண்டியவன் ஏற்கனவே தலைமை ஆசிரியை குமரேசனைப்பற்றி எச்சரித்து இருந்தார். பள்ளியில் அடங்காத மாணவர்கள் என்று ஆறு பேரை எல்லா ஆசிரியர்களும் சேர்ந்து தேர்ந்தேடுத்து அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு headmistress கேட்டுக் கொண்டிருந்தார். அதில் குமரேசன் முதலிடம். பிஞ்சில் பழுத்தவன். வகுப்பை நடத்தவே விடமாட்டான். கடைசி bench ல் உட்கார்ந்து கொண்டு மற்ற மாணவர்களை சீண்டிக்கொண்டே இருப்பான். நடுவில் jokes வேறே. சீட்டுக்கட்டை பரப்பி வைத்துக் கொள்வான். ஆயிரம் சந்தேகங்கள்.

ஆரம்பத்தில் மதுரம் திணறித்தான் போனாள். அவனைப் பார்த்து பயந்தாள் என்று கூட சொல்லலாம் இதில் என்ன வேடிக்கை என்றால் ஆசிரியர்களின் கோபத்தை தூண்டுபவன் மற்ற மாணவர்களின் செல்லப் பிள்ளை யாருக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் ஒடி ஒடி செய்வான்.

இந்த ஒரு குணம்போதுமே. அவனை நிச்சயம் திருத்தி விட. மதுரம் அவனைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்தாள்.

மாதம் ஒரு முறை அவளுடைய ஆங்கில வகுப்பை மாணவர்களையே நடத்த வைத்தாள். அந்த மாதம், பிறருக்கு உதவி செய்வதைப் பற்றி பேச மாணவர்கள் தீர்மானம் செய்ததும் மதுரத்துக்கு மிகவும் மகிழ்ச்சியானது.

‘மிஸ்! போன வாரம் அம்மா முடியாம கிடந்தாங்க. நான்தா சமயல் செஞ்சேன் மிஸ்.

‘என்னோட தங்கச்சிக்கு home work செய்ய உதவி செஞ்சேன்!’

‘ஆத்தாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போனேன்! ‘

‘நாய்க்குட்டி அடிபட்டு கிடந்திச்சு. வீட்டுக்கு எடுத்திட்டு வந்து மருந்து போட்டேன்” ”இப்போ எப்படி இருக்கு கஸ்தூரி?”

‘ நல்லா விளையாடுது teacher!’

குமரேசன் வாயே திறக்கவில்லை ”குமார் ! நீ சொல்லு”

‘சொல்ல என்ன இருக்குது??’

”மிஸ்! குமாருக்கு தான் செய்த உதவி பத்தி பேசினாலே பிடிக்காது! அவன் தினம் ஒரு பாட்டிக்கு பூக்கூடய தூக்கிட்டு போய், ரோட்ட கிராஸ் பண்ணி விட்டு, திரும்பவும் இருட்டுக்கு முன்ன வீட்ல கொண்டு விடுவான். ஒரு வருஷமா பண்ணிட்டிருக்கான்!’ ‘அப்புறம், அவனுக்கு படுத்த படுக்கையா ஒரு தம்பி இருக்கான்.’ ‘ டேய்….. எதுக்குடா??..’

” குமார்! கதிர் சொல்லட்டும்! ”

‘காலைல schoolக்கு வர முந்தி, அவன மேலுக்கு ஊத்தி, சாப்பாடெல்லாம் ஊட்டி விட்டுப் போட்டுத்தான் வருவான் teacher! ‘குமரேசன் கண்களைத் துடைத்துக் கொண்டான்! ” குமரேசா! முன்னப்பின்ன தெரியாத பாட்டிக்கு உதவி செய்வதை நினைத்து பெருமையா இருக்கு. ”

‘இதில என்ன பெருமை இருக்கு? செய்யாம இருந்தாத்தான் பாவம்! ‘

மதுரம் மதிப்பில் அவன் உயர்ந்து கொண்டே போனான். என்னவோ ஆனந்தின் நினைவு அடிக்கடி வர ஆரம்பித்தது!

ஆனால் எப்போதும் அவனிடம் ஒரு கோபம் நிரந்தமாய் குடிகொண்டிருந்தது.

அடுத்த நாள் கலையரசி டீச்சருடன் குமரேசன் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

”மதுரம்! இத வச்சு நீ குமரேசன் ரொம்பவும் நல்ல பையன்னு நெனச்சிடாதே. நீ வரதுக்கு முன்ன என்னெல்லாம் அட்டகாசம் பண்ணியிருக்கான் தெரியுமா?

Homework பண்ணவே மாட்டான். பண்ணாம notebook ஐ தைரியமா கொண்டு காமிப்பான். அலுத்துப் போய் ஒரு நாள் கோபத்தில கை ஓங்கிட்டேன். அப்படியே கையை ஒரு முறுக்கு முறுக்கினான் பாரு. வலி உயிர் போயிடுச்சு. Headmistress ஒரு வாரம் suspend பண்ணி warn பண்ணி விட்டாங்க. என் கண்ணாடி வளையெல்லாம் உடஞ்சு விழுந்ததை இப்போ நெனச்சாலும் அவன் மேல் ஆத்திரம் தீரல!” மதுரம் ஒன்றுமே பேசவில்லை.  மதுரம் இப்போது அவனுடைய வகுப்பாசிரியை. ஒரு நாள் அவனைத் தனியே அழைத்தாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டடிருந்தபின் மதுரம் கேட்டாள், குமார், உனக்கு நிறைய கோபம் வரும்னு எல்லா teachers ம் என்னிடம் complaint பண்றாங்களே, ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“என்ன பத்தி என்ன சொன்னாங்க”

மதுரம் மௌனமாய் இருந்தாள்.

”கலையரசி டீச்சர் கைய முறுக்கினேன்னு சொன்னாங்களா?”

” ஆமாம்! அது தப்பில்லையா?” ஆமா! நீ ஏன் ஒழுங்கா homework பண்ணிட்டு வர மாட்டேங்கற? என்ன பிரச்சனை?

” டீச்சர்! எங்கப்பா வேலக்கே போமாட்டாரு! எப்போதுமே குடிதான். அதுவும் ராத்திரி ஓவரா குடிச்சாருன்னா அம்மாவை கண்ணு மண்ணு தெரியாம அடிச்சுப்போடுவாரு. அம்மாவும் சும்மாவே இருக்காது. தினமும் சண்டை.  தினமும் பஞ்சாயத்து. அம்மா என் தம்பியக்கூட பாக்காது. தம்பிக்கு பொறந்ததிலேருந்தே காலு கை வெளங்காது! தங்கச்சி வேற. இதில எனக்கு homework பண்ண எப்படி மனசு போகும் டீச்சர். அதுவும் எல்லார் முன்னாடியும் ‘ஏன் பண்ணல? சொல்லு. சொல்லுன்னா? ‘எங்கப்பன் குடிகாரன். அம்மா எவனையோ வச்சிருக்குன்னு சொல்ல முடியுமா? உங்கள மாதிரி தனியா கூப்பிட்டு ‘என்ன பிரச்சனையின்னு யாராச்சும் அன்பா பொறுமையா கேட்டிருப்பாங்களா? நான் பண்ணினது ரொம்ப தப்புத் தான் டீச்சர்.”

‘அப்பா சின்ன வயசிலேயே என்னை சாராயம் வாங்க வர கடைக்கு அனுப்புவாரு. அவரு மிச்சம் வச்சா நா குடிச்சு கூட பாத்திருக்கேன். எனக்கே குடிச்சால் என்னன்னு சில சமயம் தோணும். அடிக்கிறது, கைய முறுக்குறது இதெல்லாம் தினமும் பாக்குற எனக்கு இதெல்லாம் தப்பாவே தோணல மிஸ். எது தப்பு எது சரின்னு சொல்லி குடுக்கக்கூட யாருமில்லாம பொறுக்கித்தனமா வளந்துட்டேன்“ மதுரத்தின் கையைப் பிடித்துக் கொண்டு விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.

“இதப்பாரு குமார்! உண்மையிலேயே உன் வயசுக்கு இது ரொம்பவே அதிகம் தான். தப்பு உன் மேல இல்லாட்டியும், நீ இதெல்லாம் சமாளிக்க தேர்ந்தேடுத்த வழிதான் தப்பு. உன் தம்பி, தங்கை மேல இத்தனை பாசம் வச்சிருக்கிற உனக்கு முடியாதது ஒண்ணுமில்லை. நாளையிலிருந்து நீ, மணிகண்டன், மணிமாறன், சோமு, கதிர், பாபு ஆறு பேரும் தினம் ஒரு மணிநேரம் என் வீட்டில உக்காந்து homework பண்ணப்போறீங்க. என்ன?” ”நிஜமாலுமா டீச்சர்?“ ”Yes”

அடுத்த ஒரு வருஷத்தில் நம்ப முடியாத மாற்றம். பள்ளி நடத்திய ‘எனது வழிகாட்டி‘ என்ற சித்திரப் போட்டியில் குமரேசனுக்கு முதல் பரிசு. அந்த வருடத்திலிருந்து தொடர்ந்து பள்ளியில் நூறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மூன்று முறை state rank வேறு மதுரம் தலைமை ஆசிரியை ஆனாள். ஜனாதிபதியிடமிருந்து நல்லாசிரியர் விருதும் பெற்றாள். அவளுடைய குடும்பம் பள்ளிதான். மாணவர்கள்தான் குழந்தைகள்.

ஆனால் குமரேசன் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை. அவனுடைய தந்தை தூக்கு மாட்டிக் கொண்டார். அம்மா பெண்ணை மட்டும் கூட்டிக்கொண்டு வேறு ஒருத்தனுடன் கிளம்பி போய் விட்டாள். தம்பியும் அதிக நாள் வாழவில்லை. குமரேசனின் தூரத்து உறவு மாமா ஒருவர் அவனை தன்னுடன் திருச்சிக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டார். அவனை பிரிய மனமில்லாமல் பள்ளிக்கூடமே அழுதது. மதுரமோ கண்டெடுத்த ஆனந்தை மீண்டும் தொலைத்தது போல் மனமொடிந்து போனாள். அப்புறம் குமரேசனை அவள் பார்க்கவே இல்லை.

”குமரேசா! School விட்டு திருச்சி போனன்னு கேள்விப்பட்டேன். அப்புறம் மதுரத்தால் பேசக்கூட முடியவில்லை.

”டீச்சர், திருச்சியில எங்க மாமா ஒரு வீட்ல கார் துடைக்க சேர்த்து விட்டார்.  அவரு ரொம்ப நல்ல மாதிரி! வீட்டில அவங்க வயசான அம்மா முடியாம இருந்தாங்க. அவங்களையும் பாக்குற வேலே. நானில்லாம ஒரு நிமிஷம் இருக்க மாட்டாங்க. பக்கத்து பள்ளிக்கூடத்தில +2 முடிச்சேன். மேல படிக்க இஷ்டமில்லை. பாட்டி இறக்கும் போது எம்பேர்ல bank ல பணம் போட்டுட்டு போயிருந்தாங்க. ஸார் ஒரு mechanic shop வச்சு குடுத்தாரு. அது நல்லா போச்சு. Spare parts agency எடுத்தேன். பணம் நாலுபக்கத்திலிருந்து கொட்டிச்சு. ஆனா எனக்கு கொஞ்ச நாள்ல இதெல்லாம் அலுத்துப் போச்சு.

மத்தவங்களுக்கு உதவாத வாழ்க்கை நிறைக்கல. எல்லா சொத்தையும் ஒரு நாள் வித்துட்டேன். பள்ளிக்கூடம் போக முடியாமல் பாதியில் விட்ட பசங்களுக்கு தங்க இடமும், இலவச படிப்பும், நல்ல சாப்பாடும் குடுத்து வேலையும் வாங்கி குடுக்கிற ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சிட்டேன் டீச்சர். பேரென்ன தெரியுமா? ”மதுரம் மறுமலர்ச்சி கல்வி நிலையம். உங்க பேரை வச்சால் அதுக்கு மதிப்பில்லாமல் இருக்குமா?ஆயிரம் பசங்க படிக்கிறாங்க. நிறைய funds வருது. ஆசியாவிலேயே சிறந்த education trust ன்னு UNESCO இந்த வருஷம் தேர்வு செய்த news முதல்ல உங்க கிட்ட சொல்லத்தான் ஓடி வந்தேன் டீச்சர்!

“சித்ரா! சித்ரா!” என்று யாரையோ சத்தமாய் கூப்பிட்டாள் மதுரம்! உள்ளேயிருந்து ஒரு சின்னப் பெண் வந்தாள். ”சித்ராவும் நம்ப school தான். Nursing படிச்சா. கண்டிப்பா நான்தான் டீச்சரைப் பாத்துப்பேன்னு என்னோடுதான் இருக்கா” ‘சித்ரா, என்னை உட்கார வைக்கிறயா?’

” டீச்சர்! நீங்க…. உங்களுக்கு என்னாச்சு? “

”School ல் என்னுடைய கடைசி வருஷ service. ஒரு functionல் தலைமை தாங்க மேடையேறும்போது படியிலிருந்து விழுந்து முதுகுத்தண்டில் அடிபட்டு விட்டது. ஒரு பக்கம் paralysis. அப்புறம் wheel chair. இப்போது படுக்கையில் தான் எல்லாமே.

” டீச்சர்! உங்களுக்குப்போய்……”

”நான் ரொம்ப lucky குமரேசன். அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் என் students என்னை எப்படி பாத்துக்கறாங்க தெரியுமா? ”

”Sir! Madam wheel chair ல் இருந்து கொண்டே எத்தனை பேருக்கு பாடம் சொல்லிக் குடுத்தாங்க தெரியுமா? ஒரு வருஷமாத்தான் உடம்பு ரொம்பவே முடியாம போயிருச்சு”

“குமரேசா! பக்கத்தில வந்து உக்காரு.” அவனது கைகளை பிடித்துக் கொண்டாள். உன்னை நினைத்து நான் ரொம்ப பெருமைப் படுறேன். என் மனசு ரொம்பவே நிறைவா இருக்கு. உன் குடும்பத்தை பற்றி..”

”இவ்வளவு நாள் அதைப் பத்தி நினைக்கவே நேரமில்லை. பள்ளிக்கூடம் தான் குடும்பம்னு வாழ்ந்திட்டேன் டீச்சர். நீங்க ஒரு விளக்கை ஏத்தி வச்சிருக்கீங்க. அதை அணையாமல் பாத்துக்கிட்டா அதுவே போதும் எனக்கு!”

”அதிலிருந்து ஆயிரம் விளக்கை ஏத்திட்டியே“ ”குமார்! ஒரு தடவை உன்னை ஆனந்துன்னு கூப்பிடலாமா?” அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவனை ஆரத்தழுவி ‘ஆனந்த்! ஆனந்த்! என்று சொல்லிக் கொண்டே உச்சி முகந்தாள்.

”ஆனந்த்? யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

”அடுத்த தடவை நீ என்னைப் பார்க்க வரும்போது, நான் உயிரோடிருந்தால் கண்டிப்பா சொல்றேன். “Wish you all the best my child!”

கடைசி வரை ஆனந்த் யாரென்று குமரேசனுக்கு தெரியாமலே போய்விட்டது. அதனால் என்ன? மதுரம் டீச்சருக்கு மிகவும் பிரியமானவனாய்த்தான் இருக்க வேண்டும்! இதைவிட வேறு பாக்கியம் என்ன இருக்கமுடியும்? எந்த விருதும் இதற்கு இணையாகுமா?

நிறைவு…

– சரசா சூரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More