கவிதை | நிலம் நோக்கி | முல்லை அமுதன்கவிதை | நிலம் நோக்கி | முல்லை அமுதன்

 

மரங்கள்

அசைகின்றன..

அருகில்

நிற்பவற்றுடன்

குசுகுசுக்கின்றன…

ஏதோ

சமிக்ஞை

புரிந்திருக்கிறது…

 

கிளைகளை

ஒடித்துவிட்டு

மொட்டையாய் விட்டனர்..

பின்னர்-

ஆயுதம் செய்யலாம் என்று

தறித்தனர்…

வேர்களோடி

உரம்பெற்று

நிற்கும் என்பதை

கோடரிகள்

மறந்துவிட்டன…

 

கொஞ்சம் கொஞ்சமாக

மனித மரங்களும்

அசைந்து பார்க்கின்றன..

பறவைகள்

குதூகலமாக

வான்பரப்பெங்கும்

பறந்தன…

காலம் தாழ்த்தியாவது-

வல்லூறுகளும் தமக்குள்

பேசுகின்றன..

 

மரங்கள்

மெல்ல மெல்ல

நிலம் நோக்கி

அசைகின்றன…

 

– முல்லை அமுதன் –

ஆசிரியர்