கவிதை | நேற்றுப் போல்…| நிலவுகவிதை | நேற்றுப் போல்…| நிலவு

.
கால் கடுக்க பயணங்கள்
அந்தக் கடற்கரையோரம்.
நேற்றுப் போல் இருக்கிறது
எம் வாழ்வின் வடுக்கள்,
புலரும் பொழுது முற்றத்தில்
உடலங்கள்
புரியாத புதிராய் தொலைத்தோம்
அந்த நாட்களை
காலையில் கஞ்சிக்கு அரிசி
வேண்டப்போன அப்பாவை
காணவில்லை..
அடுத்த பொழுது
எம் காதுக்கு எட்டிய செய்தியாய்
வந்து போனது அப்பாவின்
இறப்பு
எப்படி மறப்பது-எம்
வாழ்வின் கடைசி பொழுதை
.
அம்மாவின் தாலாட்டில் தூங்கிய பிள்ளை
எறிகணையின் தாலாட்டில்
மண்ணுக்குள் மறைந்தது…
எப்படி எம்வாழ்வு?
அந்த பனை மரத்தடியில்;
எத்தனை எண்ணங்கள் நினைவுகளுடன்
காலையில் கதை பேசிய காதல் ஜோடிகள்
கூவி வந்த சன்னங்கள் அவர்களை
மாலையில் தூங்கச் செய்தன…
அம்மாவின் கடைசிக் கஞ்சி
ருசிக்க முன்பு அவர்
கொத்து மழையில்
என்முன்னே முத்தமிட்டா….
.
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை…
.
.
என்றும்
நீங்கா நினைவுடன் | உங்கள் நிலவு

 

ஆசிரியர்