Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் போதையின் கோரம் | விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘கழுமரம்’ நாடகம்

போதையின் கோரம் | விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘கழுமரம்’ நாடகம்

6 minutes read

போதைப் பொருளின் தாக்கத்தில் இருந்து மக்களை, இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழுமரம் நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போராட்ட காலத்தைப் போன்று வீதி நாடகப் பாணியில் வெளி அரங்கச் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் கவனக் குவிப்பை ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் தற்போது  சட்ட விரோத போதைப் பாவனை பரவலாக  அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இதன் தாக்கம் கட்டுப்பாட்டினை மீறி செல்வாக்கு செலுத்தியுள்ளமையை வெளிப்படையாகவே அவதானிக்க முடியும். இதன் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பவர்களாக பாடசாலை மாணவர்களும் இளைஞர் யுவதிகளும்  அதிகம் காணப்படுகின்றனர். மேலும் மாணவர்களை இலக்கு வைத்தே போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையும் தெட்டத்தெளிவாக இனங்காண முடிகிறது.

இவ்வகையான ஆபத்துக்குள் தமிழ் சமூகத்தின் இளையவர்கள் ஏற்கனவே அகப்பட்டுவிட்ட சூழ்நிலையை அவதானிக்க முடிகிறது.  இதிலிருந்து இளையவர்களை மீட்டெடுக்கவும் ஏனையவர்களை பாதுகாத்துக்கொள்ளவும் அவசரமாக செயற்படவேண்டியதை அன்றாடம் வெளிவரும் சம்பவங்களும்  செய்திகளும் உணர்த்துகிறது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி வைத்தியர்கள் சங்கம், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களினதும் ஆலோசனைகளுடனும் வழிகாட்டலுடனும்  சமூக ஆர்வலர்களின் பங்களிப்பிலும் அரங்க கலைஞர்கள் ஒன்றிணைந்து  ” சுயாதீன அரங்க செயாலாளிகள்” எனும்  குழுவாக்கத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி திட்டமொன்றை கடந்த 13.12.2022  லிருந்து செயற்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கு பண்பு விருத்தியினை  மேலோங்க செய்வதும், சமூக பொறுப்புடைமையை வலுப்படுத்துவதுமான  பயிற்சி பட்டறைகளை நடத்துவதுடன்    “கழுமரம்” எனும் நாடக  ஆற்றுகையினை கிராமங்களில் நிகழ்த்தி அதன் மூலம் மக்களிடத்தில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை நடாத்தி இவ் விழிப்புணர்ச்சி செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரையிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 கிராமங்களில் இவ் விழிப்புணர்ச்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆற்றுகையூடான விழிப்புணர்ச்சி திட்டம் தொடர்பில் ” சுயாதீன அரங்கக் செயலாளிகள்”  தமது அனுபவங்களையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

“சட்டவிரோத போதை பாவனைக்கு எதிரான எண்ணக்கருவை மக்களிடத்தில் ஏற்படுத்தவல்ல சிறந்த கருவியாக அரங்கக் கலையை  நாம் நம்புகிறோம் . அரங்க செயற்றிட்டத்தின் ஊடாக மக்களை நெருங்கவும் , அவர்களின் மன வெளிப்பாட்டை தூண்டவும், போதைக்கு எதிரான குரலாக அவர்களை ஒன்றிணைக்கவும் எங்களால் முடிகிறது. பொது வெளியில் மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி தங்கள் உள்ளக்கிடக்கைகளை  உணர்ச்சி ததும்ப வெளிப்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உறவுகள் கண்ணீர் மல்கி உருகுகிறார்கள் . பாதிக்கப்பட்ட இளையவர்கள் பலர் அதிலிருந்து மீள வழி தேடுகின்றனர். ஆகவே எங்களால் சமூகத்தின் மனநிலையை மாற்றவும் ஒன்றிணைக்கவும் முடிகிறது என நம்புகிறோம். இவ்வாறான பிரயத்தனம் மிக்க பணிக்கு சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகளுக்கு செல்லவும் போதைக்கு அடிமையாகி மீண்டுவர நினைப்பவர்களை மீட்டெடுக்கவும்  பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள், அரச இயந்திரங்களின் பங்களிப்பு அவசியமாகிறது.”

இதுபோன்ற கலை, அரங்கச் செயற்பாடுகளின் வழி சமூகத்திற்கு விழிப்பூட்டி தலைமுறைகளை காக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More