March 31, 2023 7:40 am

ஆஸியின் அணுச்சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் | சீனாவிற்கு பெருஞ் சவாலாக அமையுமா | ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ஆக்கஸ் -AUKUS உடன்படிக்கை: ஆஸியின் அணுச்சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்! சீனாவிற்கு பெருஞ் சவாலாக அமையுமா ?
கட்டுரை – ஐங்கரன் விக்கினேஸ்வரா
அவுஸ்திரேலியா அமெரிக்காவிடமிருந்து வாங்கவிருக்கும் அணுச்சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவுக்கு பெருஞ் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டின் கடற்படைக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் மிக முக்கியமாக பங்காக கருதப்படுகிறது. உலக
கடற்படைகள் வரலாற்றில் நீர்மூழ்கிகளின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய வரலாற்றில் உலகில் உள்ள அனைத்து கடற்படை கொண்ட நாடுகளும் தங்கள் படையில் நீர்மூழ்கிகளை அதிக அளவில் இணைக்க தொடங்கி விட்டனர். காரணம் நாசி படையினர் நீர்மூழ்களின் திறனை உணர்ந்து அதை கொடூர போர் இயந்திரமாக உருவாக்கி பல வெற்றிகளை குவித்திருந்தனர்.
இன்று பல வகை நீர்மூழ்கிகள் பல நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பொருட்டு அவுஸ்திரேலியாவும் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட புதிய கடற்படையை உருவாக்கவுள்ளது.

சீனாவின் அச்சுறுத்தல்:

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதி கரித்து வரும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான திட்டத்துக்கு அமெரிக்கா-பிரிட்டன்- அவுஸ்திரேலியா இடையேயான ‘ஆக்கஸ்’ கூட்டணி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் உரிமை கோரும் மலேசியா, புருணை, பிலிப்பின்ஸ். தைவான், வியத்நாம் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக் கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
தென் சீனக் கடல் பகுதியில் தனது உரிமையை நிலைநாட்டும் வகையில், அங்குள்ள தீவுகளை சீனா படைத்துறை மையமாக்கியுள்ளது. மேலும், செயற்கைத் தீவுகளையும் அந்த நாடு அமைத்துள்ளது. சர்வதேச கடல்வணிக வழித்தடமாகத் திகழும் தென் சீனக் கடல் பகுதியை சீனா இவ்வாறு ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதன் விளைவே ‘ஆக்கஸ்’ உடன்படிக்கையின்படி அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான திட்டத்துக்கு அமெரிக்கா-பிரிட்டன்- அவுஸ்திரேலியா இடையேயான கூட்டணி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி ஆகிய மூவருக்கும் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுக்குப் பிறகு அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆஸி கடலில் அணுசக்தி கப்பல்கள்:

2033 ஆம் ஆண்டிற்குள் அவுஸ்திரேலியா 368 பில்லியன் டொலர்கள் வரை செலவழித்து, வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பாதுகாப்புத் திட்டத்தின் கீழ். எட்டு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட புதிய கடற்படையை அடிலெய்டில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
‘ஆக்கஸ்’ (AUKUS) எனப்படும் மூன்று நாடுகளின் உடன்படிக்கையைச் சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இது வளர்ந்து வரும் ஆசிய வல்லரசைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான முயற்சியாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவுடன் அமெரிக்கா உருவாக்கியுள்ள முன்னைய ஒப்பந்தத்தை மீறுவதாகச் சீனா தரப்பு கூறியிருந்தது. மேலும் நீர் மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தியை உருவாக்கும், அணு ஆயுதங்கள் அல்ல” என்று பைடன் வலியுறுத்தியுள்ளார்.
படகுகளில் அணு ஆயுதங்கள் இருக்காது
சான் டியாகோவிலுள்ள கடற் தளமான
லோமாவில் நடந்த விழாவில் பேசிய ஜோ பைடன் “ இந்த படகுகளில் எந்தவிதமான அணு ஆயுதங்களும் இருக்காது” எனக் கூறியுள்ளார்.
அவ்விழாவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங், மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது பேசிய உரையில், தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், இராணுவத்தை ஒரு “பாரிய இரும்புச் சுவராக” உருவாக்குவதாகவும் கூறியிருந்தார்.
தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைத் திறம்படப் பாதுகாக்கும் இரும்பு சுவராக மக்கள் விடுதலை இராணுவத்தை கட்டமைக்க வேண்டும்,” என்று ஜி ஜின்பிங் தேசிய மக்கள் காங்கிரஸில் (NPC) மாநாட்டில் கூறியுள்ளார்.
இதற்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவிற்கு
செய்தியில் ‘ஆக்கஸ்’ (AUKUS) என்பது அவுஸ்திரேலியா அணு ஆயுதங்களைப் பெறுவது பற்றியதல்ல, இதனால் சீனா அச்சப்பட வேண்டியதில்லை என வலியுறுத்தியுள்ளார்.

ஆக்கஸ்‘ ‘AUKUS’ உடன்படிக்கை:

ஆயினும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் சீனாவுக்கு எதிராக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதே உண்மையாகும்.
சான் டியாகோவில் கடந்த 13.03.2023 அன்று மூன்று நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ‘சீன ஆக்கிரமிப்பை’ எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2030-களின் முற்பகுதியில், அமெரிக்கா மூன்று வர்ஜீனியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியாவுக்கு விற்கும், தேவைப்பட்டால் மேலும் இரண்டு வரை விற்கும் திறன் கொண்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அதிநவீன ஆயுதம் தாங்கிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தையும் வடிவமைப்பையும் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் இணைத்து வேலை செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் எதிர்கால
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், மூன்று நாடுகளின் சிறந்த நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன தளமாகவும் இருக்கும்.
பிரித்தானியாவின் அடுத்த தலைமுறை வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட, அதே நேரத்தில் அதிநவீன அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளாலும் கட்டப்பட்டு பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
“இது எங்கள் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திறனில் மிகப்பெரிய முதலீட்டைப் பிரதிபலிக்கிறது” என அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஒவுக்குஸ் ஒப்பந்தம் பற்றி சான் டியாகோவில் உறுதிப்படுத்தி கூறியுள்ளார்.

பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு;

மேலும் இது குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், “அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் கூடுதலாக 5 பில்லியன் பவுண்டுகளை வழங்குகிறோம், உடனடியாக நமது பாதுகாப்பு பட்ஜெட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.25 சதவீதமாக உயர்த்துகிறோம்.
இது எங்கள் போர் பங்குகளை நிரப்பவும், நமது அணுசக்தி நிறுவனத்தை நவீனமயமாக்கவும், ஒவுக்குஸ் வழங்கவும் மற்றும் நமது தடுப்பை வலுப்படுத்தவும் அனுமதிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆயினும் அமெரிக்காவின் நீண்ட காலத்திட்டமாக இந்தோ பசுபிக் கடலில் தன் கடல் ஆதிக்கத்தை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவை துணைக்குச் சேர்த்துள்ளது என்பதும் உண்மையே.
இதேவேளை அவுஸ்திரேலியா ஊடகங்களிலும் ‘ஆக்கஸ்’ உடன்படிக்கை பற்றி பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்