Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா யாத்திசை | திரைவிமர்சனம்

யாத்திசை | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு: வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் & சிக்ஸ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள்: சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா மற்றும் பலர்.

இயக்கம்: தரணி ராஜேந்திரன்

மதிப்பீடு: 3/5

சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வணிக ரீதியான பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, தமிழக மக்களில் பலருக்கும் சோழர்களுக்கு இணையான வீர வரலாறை கொண்ட பாண்டியர்களை பற்றிய வரலாற்றை படமாக உருவாக்கினால்.. நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை முதலீடாக்கி.., ஆனால் அதனை சிறிய அளவிலான முதலீடாக மாற்றி உருவான திரைப்படம் தான் ‘யாத்திசை’. யாத்திசை என்றால் தென்திசை என்றும், தென் திசை என்றால் தமிழகத்தின் தென் திசை என்றும், தமிழகத்தின் தென் திசை என்றால் அது பாண்டியர்களின் வரலாற்றை குறிக்கிறது என்றும் தலைப்பிலேயே உணர்த்தி இருக்கும் இந்த ‘யாத்திசை’ திரைப்படம், அசலாகவே பாண்டியர்களின் வீர வரலாற்றை பேசி இருக்கிறதா? என்பதை தொடர்ந்து காண்போம்.

வரலாற்றில் மதுரையை ஆண்ட ரணதீர பாண்டியன் அவருடைய ஆட்சி காலத்தில் ஒரு முறை கூட போர்க்களத்தில் தோல்வியை சந்திக்காத வீரர்.மன்னர். பாண்டிய பேரரசர். ஆனால் அவர் எயினர் என்ற தொல்குடி இன வீரர்களின் திடீர் தாக்குதலால், தனது கோட்டையை பறிகொடுத்து தலை மறைவு வாழ்க்கை வாழ்கிறார். பிறகு எயினர் என்ற தொல்குடி இனத்தின் வலிமையை அறிந்து, அவர்களை பெரும்பள்ளி எனும் மற்றொரு தொல்குடி இனத்தினருடன் போரிடச் செய்து, இறுதியில் எயினர் இன கிளர்ச்சி தலைவன் கொதியுடன் நேருக்கு நேர் சண்டையிட்டு, அவனை கொல்துடன், அந்த இனத்தையே அழிக்கும்படி உத்தரவிட்டு, மீண்டும் தனது கோட்டையை கைப்பற்றுகிறார்.  இப்படி பயணிக்கிறது திரைக்கதை.

பாண்டிய மன்னனின் வீர வரலாற்றை பேச வேண்டிய இந்தத் திரைப்படம் பாண்டியர் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதற்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட எயினர் இன தொல்குடிகளை அழித்தார் என திரையில் சொல்லி இருப்பது, பாண்டிய மன்னனையும்… பாண்டியர்களையும்.. பாண்டிய தேசத்து மக்களையும்.. அவர்களது வீர வரலாற்றையும் தெரிந்து கொண்டு சுவைப்பதில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

உண்மை வரலாற்றையும், புனைவுகளையும் கலந்து தான் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறோம் என படக் குழுவினர் சொல்வது உண்மை என்றாலும்.. உள்ளதை உள்ளபடி சொல்வது என்பது வேறு…. உள்ளதை உள்ளம் விரும்பும்படி செல்வது என்பது வேறு. இவ்விரண்டுக்குமான இடைவெளியை படைப்பாளியான தரணி ராஜேந்திரன் உணர்ந்து படைப்பை செழுமைப்படுத்தி தர தவறி இருக்கிறார்.

அதே தருணத்தில் இயக்குநர் ராஜேந்திரனை எயினர் தொல்குடி மக்கள் பேசிய பேச்சு வழக்கை ஆய்வு செய்து மீண்டும் திரையில் உயிர்ப்பித்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஒரு விடயத்திற்காகவே.. படத்தின் அனைத்து குறைகளையும் தவிர்த்து பட மாளிகைக்குச் சென்று இப்படத்தை ஒரு முறை காணலாம். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த எயினர் எனும் இன மக்களின் வாழ்வியலை அணுக்கமாக காட்சிப்படுத்தி இருக்கும் படக்குழுவினரை கைவலிக்க கைகுலுக்கி பாராட்டலாம்.

படத்தில் ரணதீர பாண்டியன் எனும் பேரரசரை எதிர்த்த எயினர் எனும் தொல்குடி தலைவன் தோல்வி அடைந்து வீர மரணம் அடைந்ததை மையப்படுத்திய கதையாக இருப்பதால் ரசிகர்களிடம் மனநிறைவு ஏற்படவில்லை.

தேவரடியார்களின் வாழ்க்கையை பதிவு செய்த விதத்திலும் முழுமை இல்லை என்றாலும், அவர்களின் உடை, நடனம், வாழ்வியல் பற்றுக்கோடு.. அவர்களின் வாழ்வியல் நெருக்கடி ..ஆகியவற்றை பேசி இருப்பதால் இயக்குநரைப் பாராட்டலாம்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, கிராபிக்ஸ், பாடல்கள்.. என அனைத்தும் எதிர்பார்ப்பின்றி செல்பவர்களுக்கு ஓரளவு நன்றாக இருக்கும். நடிகர்களில் ரணதீர பாண்டியனாக நடித்திருக்கும் சக்தி மித்ரன், எயினல் குல தலைவன் கொதியாக நடித்திருக்கும் சேயோன், தேவரடியாராக நடித்திருக்கும் ராஜலக்ஷ்மி ஆகியோரின் நடிப்பு பார்வையாளர்களின் மனதில் தங்குகிறது. பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்ட இசையமைப்பாளர் தவறி இருக்கிறார்.

யாத்திசை-  பட்ஜட் பேரரசன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More