இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா குழுவும் இஸ்ரேலுடன் மோதலை ஆரம்பித்துள்ளது.
லெபனான் – இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் மோதி வருகின்றது.
ஹிஸ்புல்லா என்றால் என்ன?
ஹிஸ்புல்லா என்பது ஒரு குழுவாகும், 1975ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை லெபனானில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த போது, 1982ஆம் ஆண்டு ஈரான் ஹிஸ்புல்லா குழுவை உருவாக்கியது.
ஹிஸ்புல்லாவின் உருவாக்கத்துக்கு என்ன காரணம்?
ஹிஸ்புல்லாவின் உருவாக்கத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் சில முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது.
ஈரானின் 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியை வட்டாரத்தின் ஏனைய நாடுகளுக்குப் பரப்புவது மற்றும் 1982ஆம் ஆண்டு இஸ்ரேல் லெபனான் மீது படையெடுத்த நிலையில் இஸ்ரேலியப் படைகளை எதிர்த்துச் சண்டை போடுவதற்காக ஹிஸ்புல்லா உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இன்று ஹிஸ்புல்லா குழுவுக்கென ராணுவப் படை உள்ள நிலையில், அமெரிக்கா உட்படச் சில மேற்கத்திய அரசாங்கங்கள் அதைப் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகின்றன.
ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம்?
ஹிஸ்புல்லா ஈராக்கில் ஆயுதம் ஏந்திய குழுக்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதுடன், அங்கு சண்டையிலும் ஈடுபட்டுள்ளது. அத்துடன், யேமனிலும் ஈரான் ஆதரிக்கும் ஹவுதிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா சண்டை போட்டதாகச் சவுதி அரேபியா கூறுகிறது.
லெபனானில் ஆதரவு?
லெபனானில் உள்ள பல ஷியா முஸ்லிம்கள் ஹிஸ்புல்லா குழுவுக்கு ஆதரவு அளிப்பதுடன், ஹிஸ்புல்லா லெபனானை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் லெபனான் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும் உள்ள நிலையில், 2005ஆம் ஆண்டு முதல் லெபனான் அரசியலில் ஹிஸ்புல்லாவின் ஈடுபாடு அதிகரித்து அதன் ஆதிக்கம் இன்று வரை தொடர்கிறது.
ஆதாரம் : Reuters