செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வாரண்ட் | இணையத் தொடர் விமர்சனம்

வாரண்ட் | இணையத் தொடர் விமர்சனம்

3 minutes read

வாரண்ட் – இணையத் தொடர் விமர்சனம்

தயாரிப்பு : சிவன் பிக்சர்ஸ் & எஸ் ஸ்டுடியோஸ்

டிஜிட்டல் தளம் : ஜீ 5

வெளியீட்டு திகதி : 22- 05- 2026.

நடிகர்கள் : பிரசாந்த் பாண்டியராஜ் , பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ் ,சாயா தேவி, நம்ரிதா, அருள் ஜோதி, வையாபுரி, ஹலோ கந்தசாமி மற்றும் பலர்

இயக்கம் : விக்னேஷ் நடராஜன்

மதிப்பீடு : 3 / 5

பட மாளிகையில் திரைப்படங்களை கண்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு இணையாக தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் முன்னணி டிஜிட்டல் தளமான ஜீ 5 தளத்தில் வெளியாகி இருக்கும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இணைய தொடர் தான் ‘வாரண்ட்’. இதே டிஜிட்டல் தளத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ‘விலங்கு ‘எனும் இணைய தொடர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. அந்தத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ்- அவருடைய உதவியாளரான விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், அவர் கதையின் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் இணைய தொடர் தான் ‘வாரண்ட்’. தோராயமாக ஐந்து மணி தியாலம் வரை நீடிக்கும் இந்த தொடரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா? அல்லது விட்டு விட்டு பார்க்கலாமா? என்பதை தொடர்ந்து காண்போம்.

முதுகலை பட்டதாரியான கோட்டை கருப்புசாமி ( பிரசாந்த் பாண்டியராஜ்) அரசாங்க ஊழியராக பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவருடைய தந்தை அரசாங்க போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து பங்குபற்ற நிர்பந்தப்படுத்துகிறார். ஆனால் எழுத்துத் தேர்வில் சித்தி அடையாத கோட்டை கருப்புச்சாமி தன் மன வருத்தத்தை உறவினரிடம் பகிர்ந்து கொள்ள.. அவர் கோட்டை கருப்பசாமியின் தந்தையை சந்தித்து, ‘காவல் துறையில் பணியாற்றினாலும் அரசாங்க ஊழியராகி விட முடியும்’ என ஆலோசனை சொல்ல.. அதை தந்தையும் ஏற்க, காவல் துறை உயரதிகாரியின் சாரதியாக பணியாற்றும் அந்த உறவினரின் பரிந்துரையின் பெயரில் கோட்டை கருப்புசாமி அங்கு உள்ள காவல் நிலையம் ஒன்றில் கடை நிலை காவலராக பணியமர்த்தப்படுகிறார். காவல்துறையின் பணி சார்ந்த நடைமுறைகள் ஏதும் அறியாத கோட்டை கருப்புசாமி.. சக காவலர்களாலும், காவல்துறையில் பணியாற்றும் சக மற்றும் மூத்த அதிகாரிகளாலும் அவமானத்தை எதிர்கொள்கிறார். இந்நிலையில் கைதி ஒருவன் அவனுடைய கண்காணிப்பில் இருந்து தப்பிவிட.. அது அவருடைய உடல் நலத்தையும், உளவியல் நலத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இதனால் அவருடைய சொந்த வாழ்க்கையிலும் எதிர்பார்க்காத அவமதிப்பு நிகழ்கிறது. விரக்தியின் உச்சத்தில் காவல்துறை எனும் அரசாங்க பணியே வேண்டாம் என்ற நிலைக்கு கோட்டை கருப்பசாமி செல்லும்போது.. எதிர்பாராத திருப்பம் ஒன்று நடைபெறுகிறது. அந்த தருணத்தில் இருந்து தான் யார்? என்பதையும், தன்னுடைய அடையாளத்தை அந்த காவல் நிலையத்திலும் தனது சக காவலர்களிடத்திலும் பதிவு செய்வதற்காக முடிவு செய்கிறார் . அதனை செயல்படுத்தவும் தொடங்குகிறார். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? சக ஊழியர்களான காவலர்களின் ஆதரவு கிடைத்ததா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இந்த இணைய தொடரின் கதை.

காவலர்கள் என்றால் பொதுமக்கள் மத்தியிலும்.. எளிய மக்கள் மத்தியிலும்.. விளிம்பு நிலை மக்களின் மத்தியிலும்… எதிர்மறையான அடையாளங்களே அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இளம் காவலர் ஒருவரது வாழ்க்கை மூலம் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் அக வாழ்வு மற்றும் தொழில் சார்ந்த வாழ்வு நேர்த்தியாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் இந்த இணையத் தொடரில் விவரிக்கப்பட்டிருப்பது தான் இந்த இணைய தொடரின் தனித்துவமான சிறப்பம்சம்.

எட்டு அத்தியாயங்களில் நான்காவது அத்தியாயத்தில் பெண்மணி ஒருவரை காணவில்லை என்ற விசாரணையைத் தவிர… வேற அனைத்து அத்தியாயங்களிலும் பரபரப்பு ரசிகர்களையும் தொற்றுகிறது. வேறு சில அத்தியாயங்களில் காவலர்களின் அக வாழ்க்கை தொடர்பான சில காட்சிகள் இடம் பிடித்திருப்பது ஒரு பிரிவு ரசிகர்களுக்கு ஆறுதலை தருகிறது.

‘வேலை செய்யற போலீஸ்காரனுக்கு வேலை கொடு. வேலை செய்யாத போலீஸ்காரனுக்கு சம்பளத்த கொடு’ என்ற உரையாடல் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்மணி ஒருவரின் உரையாடலில் ‘சோழா லாட்ஜ்’ என்ற டொயலாக் வெவ்வேறு குரலில் உச்சரிப்பது ரசனை.

உணர்ச்சி மிகுதியில் வாய் தகராறு, கை கலப்பு.. போன்ற சட்டரீதியான குற்றச் செயலில் ஈடுபடும் மக்கள் மீது காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்கு குறித்தும்.. அது தொடர்பான நீதிமன்ற விசாரணை குறித்தும்… இவற்றிற்கு காவல் துறையினரின் எதிர்வினை குறித்தும்.. உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ரசிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இதுவே இணையத் தொடரை வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.

காவல்துறையினர் – சட்டத்தரணிகள் – நீதிமன்ற வளாகம்- நீதிரரசர்கள்-  காவல் துறையின் உயரதிகாரிகள் ஆகியோருக்கு இடையேயான பிணைப்பு யதார்த்தமாக விவரிக்கப்பட்டு இருப்பதும் இதன் தனித்துவம்.

கோட்டை கருப்பசாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அப்பாவியான காவலராக தோன்றி.. அழுத்தமான காவலராக ரசிகர்களின் மனதில் பதிகிறார். தன்னுடைய நடிப்புத்திறனை சீராக வெளிப்படுத்தி, ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். இருப்பினும் சில அத்தியாயங்களில் அவர் உச்சரிக்கும் ஆபாச சொற்களை கட்டாயம் தவிர்த்து இருக்கலாம் அல்லது அத்தகைய சொற்களை மௌனம் ஆக்கி இருக்கலாம்.

எட்டு அத்தியாயங்கள் வரை நீளும் இந்த இணையத் தொடரை உற்சாகம் குறையாமல் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு இயக்குநர் – திரைக்கதை ஆசிரியர் – நடிகர்களுடன்- ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும், பின்னணி இசையமைப்பாளரும் அழுத்தமாக கரம் கோர்த்து பயணித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தாராளமாக பாராட்டை தெரிவிக்கலாம்.

கோட்டை கருப்புசாமி எனும் கதாபாத்திரத்தை கடந்து அந்த காவல் நிலையத்தின் உயரதிகாரியான அருள்தாஸ்-  தன் கடந்த கால அனுபவத்தை சக காவலர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது காவலர்களுக்கு ஏற்படும் மன மாற்றமே ரசிகர்களிடத்திலும் ஏற்படுகிறது.  இந்தக் காட்சியில் அருள்தாசின் நடிப்பு சிறப்பு.

பாலாஜி சக்திவேல்- சாயாதேவி- காளி வெங்கட் -ஆகியோரின் கதாபாத்திரங்கள் .. திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பயனளித்திருக்கிறது.

காவல் துறையினர் – பொதுமக்கள் மீது இரக்கமற்றவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவதில், அவர்களின் பணியிட சூழலும்… அங்கு பணியாற்றும் சக காவலர்களின் உளவியலும் ஒரு காரணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதால்.. இந்த ‘வாரண்ட்’ இணையத் தொடரை பார்த்து ரசிக்கலாம்.

வாரண்ட் –  டோரன்ட்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.