Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் அகம் மலர்ந்து வெளிப்படுவதே அபிநயம் | ‘கலாசூரி’ திவ்யா சுஜேன்

அகம் மலர்ந்து வெளிப்படுவதே அபிநயம் | ‘கலாசூரி’ திவ்யா சுஜேன்

7 minutes read

(மா. உஷாநந்தினி)

லங்கையின் முன்னணி பரதநாட்டிய கலைஞர்களுள் ஒருவரான ‘கலாசூரி’ திவ்யா சுஜேன், ‘அபிநயஷேத்ரா’ நடனப்பள்ளி – ‘உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள்’ சங்கத்தின் அமைப்பாளர் ஆவார். இவர் வீரகேசரி சங்கமம் பகுதிக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் நாட்டியக்கலை பற்றியும் குறித்த நடனப்பள்ளி, நடன அமைப்பின் ஊடாக தாம் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் எம்மோடு பகிர்ந்துகொண்ட சுவையான விடயங்களை வணக்கம் இலண்டன் வாசகர்களுக்காக தருகிறோம்.

நாட்டியத்தில் நட்டுவாங்கத்தின் பங்கு

பரதநாட்டியத்தை எப்படி முறைப்படி பயில்கிறோமோ, அதேபோன்று ஒரு பாட அமைப்பு முறை நட்டுவாங்கத்துக்கும் உள்ளது. நடன ஆசிரியர்களாயினும், நடன கலைஞர்களாயினும், நட்டுவாங்கத்தை முறையாக பயிலவேண்டும்.

ஒரு நடன ஆசிரியராக வரப்போகிறோம், மேடையில் நட்டுவாங்கம் நிகழ்த்தப் போகிறோமெனில், நிச்சயமாக பயிற்சி வேண்டும். அது கடமையும் கூட.

நாம் சிறு வயதிலிருந்தே நாட்டிய வகுப்பில் நடனம் பயில்கிறோம். அப்போதே நட்டுவாங்கத்தையும் கற்று, அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

நட்டுவாங்கத்தில் நிறைய விடயங்கள் உள்ளன.  அது, ஒரு வாத்தியம் போன்றது. அதன் அமைப்பு, சுருதி, அதை எவ்வாறு கையினால் கையாள வேண்டும், நாட்டியத்தில் உள்ள அடவுகளையும் சொற்கட்டுகளையும் எப்படி வாசிக்க வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும். இதில் அழகான விடயம் என்னவென்றால், எமது மிடற்றிசையோடு (குரலிசை) நட்டுவாங்க வாத்தியத்தின் இசையும் சேர வேண்டும். நட்டுவாங்கம் செய்பவரின் மிடற்றிசையில் இருந்து வருகிற சுருதியும், வாத்தியத்தில் இருந்து வருகிற சுருதியும் கூட இணைய வேண்டும்.

நட்டுவாங்கத்தில் நாவன்மை தேவை என்பதால் நாப்பழக்கத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கும் தீவிர பயிற்சிகள் வேண்டும்.

மேடையில் ஒரு முக்கோண வலையமைப்பை  பார்க்கலாம். ஒரு புறத்தில் நட்டுவனார் மற்றும் அணிசேர் கலைஞர்களும், மேடையின் நடுவில் ஆடற்கலைஞரும், முன்னிலையில் ரசிகர்களும் இடம்பெறுவர். இவர்களுக்கு இடையிலான தொடர்பாடல் மொழிக்கு நட்டுவாங்கம் மூலமாக இருக்கும்.

தாள ஞானம் – லய ஞானம் இரண்டும் வெவ்வேறு. லய ஞானத்தை சிறு வயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவர முடியும். ஆனால், தாள ஞானத்தை செயல்முறையாக நாட்டிய வகுப்பில் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது.

அரங்கேற்றம் நிகழ்த்துவதற்கு உகந்த வயது

வயது என்பதை விட ஆர்வம், கடின உழைப்பு, நடனம் கற்பதற்காக செலவழிக்கும் நேரம் என்பனவே அரங்கேற்றத்துக்கு உகந்த தருணத்தை தீர்மானிக்கிறது.

அபிநயஷேத்ராவை பொறுத்தவரையில், 10 – 12 வயதில் அரங்கேற்றம் செய்தவர்களும் உள்ளனர். நானும் 12 வயதில் தான் அரங்கேற்றம் நிகழ்த்தினேன்.

இலங்கையில் முதல் முறையாக இவ்வருடம் தாயும் சேயும் இணைந்து அபிநயஷேத்ரா ஊடாக அரங்கேற்றம் வழங்கியிருந்தனர்.

அந்த சிறுமிக்கு 10 வயது. அவர்கள் ஆடிய மார்க்கம் மிக கடினமானது. ‘தாய்மையை போற்றும்’ கருப்பொருளில் டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயாவின் இசையில், எழுத்தாக்கத்தில் உருவான மார்க்கம்.

இதனை மேடையேற்றுவது பெரும் சவாலானபோதும், ஆர்வம், ஈடுபாடு, அனைத்துக்கும் மேலாக ‘பக்தி’ இருந்ததால், சாத்தியமானது. அதனால் தான் எனது மாணவர்களிடம் அடிக்கடி சொல்கிறேன், “நாட்டியத்துக்கு சரணடையுங்கள்” என்று.

எந்த சஞ்சலமும் இல்லாமல், தெளிந்த மனதோடு மிகப் பெரிய கலைக்கு முன்னால் நாம் சரணடைந்தால், உயர்வு தாமாக வந்தடையும், பாரதி கூறுவது போல…

தன்னை தான் ஆளும் தன்மை பெற்றால் தாமே வெற்றி நிச்சயம்!

‘அபிநயஷேத்ரா’ நடனப்பள்ளியில் அபிநயத்துக்கான இடம்…

அபிநயம் என்பது நாட்டியத்தின் பெரும் பரப்பு. அபிநயம் கற்பதற்கென்றே தனியான வகுப்புகளும் ஆசிரியர்களும் இருப்பதை நாம் காண்கிறோம். அந்த வகையில் நான் மிகச் சிறந்த அபிநய ஆசிரியையான ஸ்ரீமதி பிரகா பேசெல்ஸ் அம்மையாரிடம் அபிநயம் கற்றுக்கொண்டேன்.  

அவரை சந்தித்த முதல் நாளிலேயே அபிநயம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டேன். அபிநயத்தின் ஆழத்தை நான் முழுதாய் உணர்ந்த அந்த நாளில், ‘அபிநயஷேத்ரா’ என்ற பெயரும் எனக்குள் உதித்தது.  

அபிநயம் செய்வதற்கு ஏராளமான அகம் சார்ந்த விடயங்கள் தேவை.

‘எல்லோரும் ஒன்று… எந்த பேதமும் இல்லை’ என்பதை உணர்த்துபவை, கலைகள்.

குறிப்பாக, எல்லாம் ஒன்றென, ‘ஏகம்’ என்றொரு ‘அத்வைத’ நிலையில் எம்மை கொண்டுபோய் நிறுத்துவது பரதநாட்டியம். அதற்காகவே நாம் பரதம் பயில்கிறோம்.  

நாட்டியம் என்பது விரிவான பயணம். அந்த பயணத்தை நோக்கிச் செல்வதற்கான வழியாக, ஊடகமாக திகழ்வது அபிநயம்.

அகம் புகுந்து, அகத்தின் வழியே செல்லச் செல்ல, அகம் மலர்ந்து வெளிப்படுவது தான், அபிநயம். அந்த அபிநயத்தை வெளிப்படுத்தும் புறமாகிறது, இந்த உடல். நாட்டியக் கலைஞர்களுக்கு உடலே வாத்தியம்.

உடலை மெருகேற்றி, அபிநயத்தை வெளிப்படுத்த, நமது உடலும் ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாட்டியத்தின் ஆரம்ப பாடங்களில் உடல் சார்ந்த விடயங்களையும் கற்கிறோம். நாளடைவில் அடவிலும் அபிநயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறோம்.

அதனாலேயே நான் எப்போதும் “பாதத்தில் அபிநயம் உள்ளது” என கூறுவேன்.

நடன கலைஞர்களாயினும் மாணவர்களாயினும், ஒவ்வொருவரும் தம் அபிநயத்தை ஒரே மாதிரியாக அல்லாமல், வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவர். ஏனென்றால், ஒவ்வொருவர் அகமும் வித்தியாசம்.

எம் ஒவ்வொரு அங்கத்திலும் எவ்வாறு அபிநயத்தை வெளிக்கொணரலாம் என்கிற நுண்ணறிவுக்குள் புகவேண்டும் எனும் விழிப்புணர்வு இருந்தாலே போதும்.

அபிநயமானது ஒரு குறிப்பிட்ட அனுபவத்திலும் கற்றுக்கொள்கிற பயணத்திலுமே தங்கியுள்ளது.

சாஸ்திரிய நடனத்தில் புதுமை செய்தலுக்கான எல்லை!?

எல்லை என்பதை கலைக்குள் கொண்டு வருவதோ, ‘எல்லை’ என்ற சொல்லை நாம் பயன்படுத்துவதோ இல்லை. மனம் விரிய வேண்டும், மணம் பரக்க வேண்டும், கலைகளை நுகர வேண்டும், உணர வேண்டும்.

முதலில் அடிப்படை சாஸ்திரிய நடனத்தை சிறந்ததொரு குருவிடம் நன்கு பயின்று, அதனூடாக நடனம் பற்றிய ஆழமான அறிவினை பெற வேண்டும். அவ்வாறு பெற்றதைக் கொண்டு என்ன புதுமை நிகழ்த்தப் போகிறோம், எவ்வளவு புதிய விடயங்களை சேர்க்கப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். புதுமை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடலாம்.

முன்பு நாங்கள் பாரதி மார்க்கம் செய்திருந்தோம். பொதுவாக, அலாரிப்பு உருப்படியில் வார்த்தைகள் சேர்க்கும் சம்பிரதாயம் இல்லை. இருப்பினும், பாரதியின் புதிய ஆத்திசூடியை அலாரிப்பாக அமைக்க வேண்டுமென்ற எண்ணம் திடீரென எனக்கு தோன்றியது.

ஏதோ… பேரருளால் அந்த உருப்படியை அமைத்தோம். அதன் பிறகு, மீண்டும் மீண்டும் பார்த்தபோது, அந்த அலாரிப்பில் அத்தனை அழகு தெரிந்தது! பெருமளவினரை அந்த உருப்படி ஈர்க்கவே, என் குருநாதர் உட்பட பலர் அப்படைப்பினை அங்கீகரித்தனர்.

ஆகவே, புதுமை நிகழ்த்தும் முன் தெளிவும் முறையான சாஸ்திரிய நடன பயிற்சியும் முழுமையாக தேவை.

உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் பிரதான பணிகள்…

எனது குரு பத்மபூஷன் சி.வி. சந்திரசேகர் ஐயாவின் 85ஆவது பிறந்த நாளில்  ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் குறுகிய காலத்துக்குள்ளே மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. அன்பினால் சூழ்ந்த ஒரு பயணமாக விளங்கும் இந்த சங்கத்தில் உலகெங்கும் கிட்டதட்ட 150க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள், ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எனது உறவினரான திருமதி. நிறைஞ்சனா சுரேஷ் இதன் செயலாளர்.

இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் நடன ஆசிரியர்களினதும், நடன கலைஞர்களினதும் கலைப்பயணம், பணிகளை பற்றிய விடயங்கள் இவ்வமைப்பினூடாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதை தவிர மாதந்தோறும் இந்திய கலைஞர்களின் விரிவுரை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றோம்.  

இந்திய கலைஞர்களோடு பணியாற்றிய அனுபவம்  

இலங்கை – இந்திய கலையுறவுக்கான பாலமாக அபிநயஷேத்ரா திகழ்வதையிட்டு மகிழ்கிறேன்.

கலைத்துறையில் பயணிக்கும் மிகச் சிறந்த குருமார்கள், பிரபலங்கள், அணிசேர் கலைஞர்கள், நடன கலைஞர்கள் என 150க்கு மேற்பட்ட இந்திய கலைஞர்களோடு இணைந்து பணியாற்றியதை பேரனுபவமாக கருதுகிறேன். அந்த அனுபவத்தை, அவர்களது கலை நுட்பத்தை இலங்கையில் உள்ள மாணவர்களுக்கும் ஏனைய கலையார்வம் கொண்ட ரசிகர்களுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.  

இந்நாட்டில் நடைபெற்ற ஆண் நடனக் கலைஞர்களுக்கான நர்த்தகா உற்சவங்களில் இந்திய கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். பெருங்களுர் கலைஞர்கள் பலர் எமது நடனப்பள்ளியோடு இணைந்து நடனமாடியுள்ளனர்.

அத்துடன் மதிப்புக்குரிய லால்குடி கிருஷ்ணன் ஐயா, டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயா ஆகியோரும் தமது இசையாக்கத்தினை இலங்கையில் முதல் முறையாக அபிநயஷேத்ராவுக்கே அளித்துள்ளனர் என்பதும் எமக்கான ஒரு வரமாகும்.

குரு தெரிவு

நல்ல குருநாதர் கிடைப்பது, ஜென்ம புண்ணியம். நல்ல கலைஞராவதை தீர்மானிப்பது, ‘படைப்பு’.  

சிறு வயது பிள்ளைகளுக்கு நல்ல குருவை தேர்ந்தெடுப்பது தொடங்கி அவர்களது கலைப்பயணத்தின் ஒவ்வொரு நகர்வுகளிலும் பெற்றோரின் பங்கு அதிகமாகவே உள்ளது.

அனைத்து ஆசிரியர்களுமே அவரவர் பாணியில் மிக திறமையாக நடனம் கற்பிக்கின்றனர்.

எனினும், பெற்றோர்களே தம் பிள்ளைகளுக்கு எந்த கற்பித்தல் முறை ஏதுவானது என்பதை உணர்ந்து, நூறு வீத நம்பிக்கையோடு  குறிப்பிட்ட ஆசிரியரை நாடி, அவர்களோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும். அதற்கு முன் அந்த கற்பித்தல் முறையில் முழு ஈடுபாடும் ஆசிரியர் மீது நம்பிக்கையும், நாட்டியத்துக்கு சரணடையும் நிலையும் தம்மில் இருக்கிறதா என்பதை பெற்றோர்கள் – பிள்ளைகள் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More