Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்திய ஆதரவு தேவை | பேராசிரியர் வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்திய ஆதரவு தேவை | பேராசிரியர் வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை

7 minutes read

(சந்திப்பு: எம்.நியூட்டன்)

லங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்திய ஆதரவு கட்டாயம் தேவை. இந்தியாவின் உதவி இல்லாமல் எதையும் செய்யமுடியாத நிலையே காணப்படுகின்றது  என்று யாழ்ப்பாணம், புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான அணு விஞ்ஞானி பேராசிரியர் கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை தெரிவித்தார்.

துறைசார் நிபுணத்துவம் பெற்ற இவர் அரசியல், சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகையவர் தனது ஆரம்பகால நிலைமைகள் அதன் பின்னரான சூழல்களில் தான் ஆற்றிய பணிகள் சம்பந்தமாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவை வருமாறு:

புத்தூரில் பிறந்தது முதல் அணு விஞ்ஞானி ஆனது வரை

‘ஏழ்மை கல்விக்கு இடையூறு இல்லை; உன்னால் முடியும் என்று நினைத்தால் நீ எதையும் சாதிக்க முடியும்’ இதுவே எனது கொள்கையாக இருந்தது. அதனாலேயே இந்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றேன். 

புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த தமிழ் வித்தியாலயத்தில் படித்து, முதல் முதலாக யாழ். பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவன் என்ற பெருமை எனக்கே உரியது.

1957ஆம் ஆண்டு தமிழ்மொழி மூலம் நடைபெற்ற எஸ்.எஸ்.சி விஞ்ஞானப் பிரிவுப் பரீட்சையில் எமது பாடசாலையில் தோற்றி தேர்ச்சி பெற்ற மாணவனாக உயர்ந்தேன். ஏஸ்.எஸ்.சி. வகுப்பு வரை விஞ்ஞான பாடங்களை தமிழ்மொழியில் படித்ததால் எச்.எஸ்.சி. வகுப்பில் ஆங்கில மொழியில் தான் படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

அதிலும் ஆசிரியர்களின் உதவியை நாடி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றேன். இத்தகைய சூழலில் எமது பாடசாலையில் இருந்து ஒரு மாணவன் கூட பல்கலைக்கழகம் சென்றதில்லை. 

அந்த ஏக்கத்தில் பாடசாலையை மாற்றிப் படித்து பொறியியலாளராக வர எண்ணினேன். அதன்படி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்த பலர் பொறியியல் படிப்பதற்கு தெரிவாகியிருந்தார்கள். அவ்வாறே நானும் செல்லலாம் என்று விரும்பினேன். எனது விருப்பத்தை எனது தாயாரிடம் தெரிவிக்கையில் அவர் எனக்கு சிறந்ததொரு பாடத்தை புகட்டினார். 

முதலில் எங்கள் குடும்ப நிலையை நினைவுபடுத்தி இரண்டு எருது மாடுகள் வைத்துத்தான் எங்கள் தந்தை குடும்பத்தை நடத்தி வருகின்றார். தந்தையின் மாத வருமானம் ஏறக்குறைய 300 ரூபாய். இதில் மாட்டுத் தீவனத்துக்கு 150 ரூபாய், சாப்பாடு மற்றும் ஆடை தேவைகளுக்கு 100 ரூபாய், மிகுதி 50 ரூபாய் தோட்ட வேலைகளுக்கு என பணம் செலவாகிவிடும்.

இந்த செலவில் எனது படிப்புக்காக எவ்வாறு மிச்சம் பிடிக்கலாம் என்பதை எனக்கு தெளிவுபடுத்தியதுடன் “நீ எதனை விரும்புகின்றாய் என்பதை யோசித்து கூறு. நீ படித்து பெரியவனாக வரவேண்டும் என்பது தான் எங்கள் எல்லோரின் ஆசை” என கூறினார்.

பொறியியலாளர், வைத்தியர்கள் அன்றைய காலத்தில் படித்து பட்டதாரிகளாக  வெளிவந்தபோது எனக்கும் பொறியியலாளராக வரவேண்டும் என்றே ஆசையிருந்தது. அதற்கான தகுதிகாண் பரீட்சையையும் நேர்காணலையும் நான் ஆங்கிலத்தில் எதிர்கொண்டேன். 

தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்தில் நேர்காணப்பட்டது தடுமாற்றமாகவே இருந்தது. எனினும், நேர்காணல் செய்தவர் அளித்த வாய்ப்பினால் தமிழில் கேள்விகளுக்கு விடையளித்தேன்.

எனினும், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் நான் அந்த நேர்காணலில் தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் பேராசிரியர்கள் பலர் எனக்கு கல்வி கற்க உதவியதால் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று, இரவு பகலாக கடும் முயற்சி செய்து படித்து உயர்கல்வியை நிறைவு செய்தேன்.

அதன் பின்னர் கனடா அரசாங்கத்தினால் கனடிய பொதுநலவாய புலமைப்பரிசு எனக்கு கிடைக்கப்பெற்றது. அங்கும் எனது கல்வியை நிறைவு செய்துகொண்டேன். 

இவ்வாறான சூழலில் உதவி விரிவுரையாளராக கடமை புரிந்த 1964 – 1966 காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் மன்னார், வவுனியா வீதியிலுள்ள பேராசிரியரின் விவசாயப் பண்ணையில் தங்கியிருந்து, அங்குள்ள குறைகளை முகாமையாளருடன் இணைந்து நிவர்த்தி செய்திருந்தேன்.

இந்நாட்களில் பேராசிரியர் மயில்வாகனம் அவர்களை சந்தித்து இயற்பியல் பற்றிய தத்துவங்களை விவாதித்தேன். இதனால் அறிவியல் தெளிவும் இயற்பியல் சார்ந்த நாட்டமும் எனக்குள் வேரூன்றியது. இந்த காலகட்டத்தில் பேராசிரியரின் ஆலோசனைக்கு அமைய எனது துறையில் ஆராய்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டது.

இதற்கமைய அணுசக்தித்துறையில் ஆராய்ச்சிகளை தொடங்குவதாக தீர்மானித்து, அதனை நிறைவுசெய்து, முதுகலைப் படிப்பில் சிறந்த மாணவன் என்று டொரண்டோ பல்கலைக்கழக பௌதீகப் பிரிவினால் கௌரவிக்கப்பட்டேன்.

உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையில் அணு ஆயுதப்போர் வெடிக்குமா?

அணு ஆயுதப்போர் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது வீதம் நடைபெறமாட்டாது. அவ்வாறு நடந்தாலும் அது பாரதூரமானது. பலமான நாடுகள் இதற்கு அனுமதிக்காது. உக்ரைன் போன்ற பல நாடுகளுக்கு நான் பல முறை விஜயம் செய்திருக்கிறேன். 

அணு உலை வெடிப்பு ஏற்பட்ட காலத்தில் நான் கனடா நாட்டுப் பிரதிநிதியாக ஐம்பது அறுபது விஞ்ஞானிகளுக்கு தலைவராக அதன் பாதிப்புக்கள், நிலவரங்கள் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நடந்த அணு போராட்டத்தை நேரடியாக நான் பார்த்தேன். கனடா அணு ஆயுத உற்பத்தியில் முன்னுக்கு வரக்கூடாது என்பதில் அமெரிக்கா செயற்பட்டது.

இவ்வாறான பல்வேறுபட்ட அனுபவங்கள் என்னிடமுள்ளது. இது மட்டுமன்றி இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமை சந்தித்தேன். அப்போது டாக்டர் சோமுராயு அவர்களும், டாக்டர் அப்துல் கலாமும் இணைந்து மிகச் சிறந்த இருதய உறை குழாயை கண்டுபிடித்திருந்தார்கள். அது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்பாக பேசுவது மட்டுமல்லாமல் கனேடிய அணு சக்திப் பிரிவின் கூட்டு அராய்ச்சி பங்களிப்பு பற்றியும் நான் பேசினேன்.

அது மட்டுமன்றி, இந்தியாவின் அணு ஆராய்ச்சி பற்றிய விடயங்களையும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு சக்தி கூட்டுறவு பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். 

இந்திய அணு மின் நிலையமான கூடங்குளம் அணு உலையில் பிரச்சினை இருப்பதாகவும் அதனை சீர் செய்ய உதவுமாறும் அப்துல் கலாம் என்னை கேட்டுக்கொண்டார். அதற்கமைய, அணு உலை பற்றிய செயற்றிட்டங்களை ஆராய்ந்து எனது பரிந்துரைகளையும் வழங்கியுள்ளேன். 

அதுமட்டுமன்றி என்னை மாதம் ஒரு முறையாவது அங்கு சென்று நிலைமைகளை ஆராயுமாறும் கோரியிருந்தார். அதன்படி, கூடங்குளம் செல்வது எனது நிகழ்ச்சி நிரலில் அடங்கும் ஒரு விடயமாக உள்ளது. இது இந்திய நாட்டுக்கு நான் செய்யும் கடமை. 

அப்துல் கலாமின் மறைவுக்குப் பின்னரும் நான் தொடர்ந்து கூடங்குளம் சென்று எனது அறிக்கைகளை இந்திய அணுசக்தித்துறைக்கு அனுப்பி வருகின்றேன்.

இனம் சார்ந்த சிந்தனைகள்

நான் படித்த துறையால் கனடாவில் அரசியல் செல்வாக்கு எனக்கு இருந்தது. இதனால் கனடாவில் எம்.பிக்கள், அமைச்சர்கள், பிரதமர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து எமது மக்களின் பிரச்சினைகளை பற்றி எடுத்துக்கூறினேன்.

இலங்கையில் எமது மக்கள் படுகின்ற துன்ப, துயரங்கள் இடப்பெயர்வுகள் போன்றவற்றால் எமது மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றி கனடிய அரசாங்கத்தை அணுகினேன்.

அன்று கனடிய பிரதமராக இருந்தவர் மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் அம்மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவது இலகுவாக இருக்கும். அது மட்டுமன்றி மக்கள் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தையும் அவரே ஏற்படுத்தினார். இதனால் கனடாவில் அரசியலில் இருக்கின்ற அனைத்து துறையினரையும் நான் சந்திப்பதுடன் அவர்களது கூட்டங்களிலும் கலந்துகொண்டேன்.

நான் எமது மக்கள் பிரச்சினையை எப்படித்தான் கூறினாலும், அந்த நாட்டில் அரசியல் பிரதிநிதியாக வருவதன் மூலம் தான் எதையாவது செய்யமுடியும். அதற்காக மக்கள் பிரதிநிதியாக வருவதற்கான முயற்சியை மேற்கொண்டதுடன் அரசியல் நிதிப்பங்களிப்பை வழங்கி எமது மக்களின் பிரச்சினைகள் தேவைகள் குறித்து கதைப்பதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கினேன்.

இதனால் புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டு வாக்காளர்களாக மாறுகின்ற நிலை உருவானது. அன்றைய காலத்தில் புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் வசதி குறைந்தவர்களாகவும் குறைந்தளவு எண்ணிக்கையிலுமே இருந்தார்கள்.

எனினும், இருக்கின்ற மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டும். அவர்களை பயன்படுத்தி அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்கவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டேன். 

பேராசிரியராக இருந்துகொண்டே மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த காலத்தில் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டேன்.  இந்நிலையில் அரசியலுக்கு வியாபாரமும் முக்கியம். அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்தபோதும் அது வெற்றியடையவில்லை.

பின்னர், வியாபாரத்தை 7 பேருடன் ஆரம்பித்து ஐந்து வருட காலத்தில் 124 பேரை கொண்ட பெரிய நிறுவனமாக வளர்த்தேன். அதன் மூலம் அரசியல் செல்வாக்கு இன்னும் பல மடங்காக அதிகரித்தது. இத்தகைய சூழலில் அரசியலுக்குள் இறங்கி தேர்தலுக்கு முகங்கொடுத்தேன்.

இந்த காலத்தில் எமது மக்கள் அரசியல் என்றாலே ஓடி ஒளிபவர்களாக இருந்தார்கள். இந்தப் பயத்தை நீக்குவதற்காக தேர்தலில் நின்று எமது மக்களின் வீடுகளுக்கு சென்று நிலைமைகளை எடுத்துரைத்து வழிப்படுத்தினேன்.

எனினும் அந்தத் தேர்தலில் தோல்வியையே சந்தித்தேன். எனக்கு அதுவும் சந்தோஷம் தான். அரசியலில் எவரையும் திருப்திப்படுத்த முடியாது. எனினும், மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.

இன்று எமது சமுகத்தை மற்றவர்கள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எம்மவர் முன்னேறியிருக்கின்றார்கள். இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் எமது சமூகம் வலிமை மிக்க சமூகமாக முன்னேறும். இதுவே எனது ஆசையாக இருந்தது. 

இன்று அந்த ஆசையை இந்த சமூகம் கொண்டு வருகின்றது. இதற்கு விதை போட்டவன் நான் என்பதில் திருப்தியளிக்கிறது.

எமது நாட்டின் எதிர்காலம்

எமது நாட்டின் அரசியலை பொறுத்தவரையில் அரசியல் தலைவர்கள் தூர நோக்கு சிந்தனையுடையவர்களாக இருக்கவேண்டும். மாற்றவேண்டும். 

அரசியல் தீர்வினை பொறுத்தவரையில், இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை. அவர்களுடன் இராஜ தந்திர ரீதியில் அணுகவேண்டும். சிங்கள மக்களும் வாழவேண்டும். தமிழ் மக்களும் வாழவேண்டும். இரு தரப்பு மக்களும் சேர்ந்துதான் இந்த நாட்டை முன்கொண்டு செல்லவேண்டும். இன்னொருவரின் வாழ்க்கையை நடத்த முன்நிற்பதுதான் இங்குள்ள பிரச்சினையாக உள்ளது. 

அரசியலில் இளந்தலைமுறைகள் உள்வாங்கப்பட்டு, அவர்களை அதில் பங்கேற்க வைப்பதன் மூலம்தான் புரையோடிப்போயுள்ள நாட்டின் பிரச்சினையை தீர்க்கமுடியும்.

புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களிடம் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இதனை முன்கொண்டு செல்லவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் தாய்நாட்டில் வாழ்கின்ற எமது உறவுகளுக்கு கல்வித்தரம், வாழ்வாதாரம், வியாபாரம் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் பங்களிப்பு செய்வதற்கு முழு முயற்சிகளும் எடுக்கவேண்டும். 

குறிப்பாக, கல்வியில் முன்னேற்றகரமாக மிளிர்வதற்கு அவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டும். வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு தற்சார்பு பொருளாதாரம் குடிசை கைத்தொழில்களை உருவாக்கவேண்டும். இவற்றுக்காக மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது பொருளல்ல.  சிறிய இடங்களிலும் குறிப்பாக கிராமங்களை இலக்கு வைத்து அங்குள்ளவர்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து தொழில் முயற்சிக்கான உற்பத்திகளை உருவாக்கவேண்டும். அது மட்டுமன்றி, அந்த உற்பத்திகளை கொள்முதல் செய்வதற்கு ஏற்ப திட்டங்களையும் உருவாக்கவேண்டும். சிறிய வட்டத்தை விருத்தி செய்வதன் மூலம் அதனை பெரிய வட்டமாக உருவாக்கமுடியும். 

எத்தகைய விடயம் என்றாலும் கல்விதான் முக்கியம். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தத்தக்க வகையில் முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழகம் துறை சார்ந்த ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அரசாங்கத்தை மற்றும் துறை சார்ந்தவர்களை அணுகி மாணவர்களை ஊக்கப்படுத்தி, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More