புரோ கபடி லீக் போட்டியின் அரை இறுதி: பாட்னா, உ.பி.யோதா இன்று பலப்பரீட்சை!

12 அணிகள் பங்கேற்ற புரோ கபடி லீக் போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ந் தேதி முடிவடைந்தன.

இதன் முடிவில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகிய 6 அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அரியானா, ஜெய்ப்பூர், பெங்கால், மும்பை, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.

பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. எலிமினேட்டர்-1 ஆட்டத்தில் உ.பி.யோதா 42-31 என்ற கணக்கில் புனேயையும், பெங்களூர் 49-29 என்ற கணக்கில் குஜராத்தையும் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றன.

முதல் 2 இடங்களை பிடித்ததால் பாட்னாவும், டெல்லியும் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறின.

நேற்றைய ஓய்வுக்கு பிறகு 2 அரை இறுதி ஆட்டங்களும் இன்று நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியன் ஆன பாட்னா அணி லீக் சுற்றில் 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தது. 5 ஆட்டங்களில் தோற்றது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. பாட்னா அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் 35-36 என்ற கணக்கில் உ.பி.யிடம் தோற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் 37-35 என்ற கணக்கில் வென்று இருந்தது.

புரோ கபடி லீக் தொடர்களில் இரு அணிகளும் இதுவரை 10 முறை மோதியுள்ளன. இதில் பாட்னா 5-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி லீக் சுற்றில் 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 6 போட்டியில் தோற்றது. 4 ஆட்டம் டையில் முடிந்தது.

பெங்களூர் அணி லீக் சுற்றில் 11-ல் வெற்றி பெற்றது. 9 போட்டிகளில் தோற்றது. 2 போட்டி டையானது.

புரோ கபடி லீக் தொடரில் 2 அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. இதில் டெல்லி 8-ல், பெங்களூர் 6-ல் வெற்றிபெற்றுள்ளன. 2 ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் பெங்களூர் வெற்றிபெற்றது. 2-வது ஆட்டம் 36-36 என்ற கணக்கில் டையில் முடிந்தது.

ஆசிரியர்