யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இம்மாதம் மூன்றாம் திகதியிலிருந்து பதினோராம் திகதி வரை ஓர் ஒளிப்படக் காட்சியோடு ஒரு விவரணப்படமும் திரையிடப்பட்டது. ஒளிப்படங்கள் ஸ்டீபன் சாம்பியனுடையவை. விவரணப்படத்தின் பெயர் குடில். தயாரித்தவர் கண்ணன் அருணாசலம்.

இப்படம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பினால் தற்காலிகமாக கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குடிலில் கிட்டத்தட்ட மூன்று பெண்கள் இருக்கிறார்கள். ஒரு மேசை இருக்கிறது. தவிர குடிலின் உட்சுவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஒளிப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கமரா குடிலின் உட்பகுதிக்குள் இருந்து வீதியை பார்க்கிறது. இதன் மூலம் அம்மூன்று பெண்களின் அன்றாட அசைவுகளையும் குடிலுக்கு வெளியே பிரதான வீதியில் நிகழும் போக்குவரத்தையும் கமரா ஒரே நேரத்தில் கவனிக்கிறது. சில சமயங்களில் கமரா குடிலுக்கு வெளியே வருகிறது. அதில் அமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் தேநீர் தயாரிப்பதற்காக விறகு கொத்துவது, குடிலின் சுற்றுப்புறத்தைக் கூட்டுவது போன்ற காட்சிகளும் வருகின்றன. மூன்று பெண்களும் குடிலுக்குள் அதிகாலையிலிருந்து இரவு வரையிலும் என்ன செய்கிறார்கள் என்பதனை படம் வெளிக்கொண்டு வருகிறது. அவர்கள் தேநீர் தயாரிக்கிறார்கள். பத்திரிகை வாசிக்கிறார்கள். மேசையைச் சுற்றி இருந்து கதைக்கிறார்கள். இரவில் குடிலுக்குள் உறங்குகிறார்கள்.

குடிலுக்குள் இம்மூன்று முதிய பெண்களும் என்ன செய்கிறார்கள்? எதற்காக காத்திருக்கிறார்கள்? அவர்கள் ஏன் தமது வீடுகளில் தங்களுடைய குடும்பங்களோடு சேர்ந்து இருக்காமல் இப்படி வீதியோரமாக பாதுகாப்பற்ற ஒரு குடிலுக்குள் நாள் முழுக்க இருக்கிறார்கள்? போன்ற கேள்விகள் எதனாலும் தீண்டப்படாத ஒரு வாழ்க்கை குடிலுக்கு வெளியே பிரதான சாலையில் தன்பாட்டில் அசைகிறது.

கண்ணன் அருணாச்சலம் படத்தின் திரையை இரண்டாக பிரித்திருக்கிறார். ஒரு பகுதியில் கமரா குடிலுக்குள் நடப்பவற்றை காட்டுகிறது. இன்னொரு பகுதி பெருமளவுக்கு இருட்டாகவே காணப்படுகிறது. இடைக்கிடை அப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் எழுச்சிகள் காட்டப்படுகின்றன. அவ்வாறான எழுச்சிகளின் போது தொகையான மக்கள் அங்கே பங்கு பற்றுகிறார்கள். ஊடங்கள் அவர்களை மொய்த்து நிற்கின்றன. ஆனால் அது ஒருநாள் போராட்டம் அல்லது சில நாட் போராட்டங்கள். மற்றும்படி மேற்படி பாதித்திரை இருளாகவே காணப்படுகிறது.

இதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஏறக்குறைய சோர்ந்து போய்விட்டதை கண்ணன் வெளிக்கொண்டு வருகிறார். சில நாட்களில் நடக்கும் எழுச்சிகளை தவிர எல்லா நாட்களிலும் குடில் தனித்து விடப்பட்டிருக்கிறது. மூன்று புதிய பெண்களே அதற்குள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். குடிலை ஊடகங்களும் கவனிப்பதில்லை. காலவரையறையற்ற அவர்களுடைய காத்திருப்புக்கும் குடிலுக்கு வெளியே அக்காத்திருப்பினால் தீண்டப்படாத ஒரு சகஜ வாழ்க்கைக்கும் இடையேயான முரண்பாட்டில் காணப்படும் அபத்தத்தை கண்ணன் வெளிக் கொண்டு வருகிறார்.

அந்தப் பெண்கள் அரசாங்கத்தால் மட்டுமல்ல அனைத்துலக நிறுவனங்களால் மட்டுமல்ல மனித உரிமை நிறுவனங்களால் மட்டுமல்ல ஊடகங்களால் மட்டுமல்ல தமது சொந்த கட்சிகளால் மட்டுமல்ல தமது சொந்த மக்களாலும் கைவிடப்பட்டு விடடார்களா ? என்ற ஒரு கேள்வி படத்தைப் பார்த்து முடிக்கும் போது எழுகிறது.

அக் கேள்வியில் நியாயம் உண்டு.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 900 நாட்களை கடந்து விட்டது. ஆனால் உருப்படியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிய பெற்றோர்களின் 54 பேர் இதுவரை இறந்து விட்டார்கள். குறிப்பிட்ட தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து போராட்டங்கள் எழுச்சிகள் ஒழுங்கு செய்யப்படும். ஆனால் அதற்குப் பின் கண்ணன் அருணாச்சலத்தின் படத்தில் காட்டப்படுவது போல குடிலில் குந்தி யிருப்பது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது.

அது ஏன் ஒரு சடங்காக மாறியது ? இதுபோன்ற போராட்டங்களை ஏன் மக்கள் மயப்படுத்த முடியவில்லை? இதுபோன்ற போராட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. போராட்டத்தை அரசறிவியல் ஒழுக்கமாக விளங்கிக் கொண்ட செயற்பாட்டு இயக்கங்களும் மக்கள் அமைப்புகளும் ஏன் இதுபோன்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியவில்லை? குறிப்பாகத் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புகள் ஏன் இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியவில்லை? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் மட்டுமல்ல காணிக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம், மகாவலி எல் வலையத்துக்கு எதிரான போராட்டம், மரபுரிமைச் சொத்துக்களை கவரும் நகர்வுகளுக்கு எதிரான போராட்டம், பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் போன்ற எல்லா போராட்டங்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்து ஒரு பொது வழி வரைபடத்தின் படி அவற்றை முன்னெடுக்கவல்ல ஒரு அமைப்புக் கூட தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா?

இதுபோன்ற பல கேள்விகளின் மத்தியில்தான் நாளை எழுத தமிழ் நடக்கவிருக்கிறது. இக்கேள்விகளுக்கு ஒருநாள் எழுக தமிழ் பதில் அல்ல. ஆனால் இக்கேள்விகளை முன்வைத்து பொருத்தமான ஒரு போராட்ட வடிவத்தை கண்டுபிடிப்பதற்கு அது ஒரு தொடக்கமாக இருக்கும். இக்கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கத் தேவையான ஒரு வளர்ச்சியை பேரவை பெறவேண்டும், அல்லது பேரவையின் இடத்தில் ஒரு புதிய மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதும் அனைத்து தரப்புக்களும் எழுக தமிழை ஆதரிக்க வேண்டும்.

ஏனெனில் எழுக தமிழ் பேரவைக்குரியதல்ல. ஒரு கட்சிக்கு மட்டும் உரியதல்ல. அது தமிழ் மக்களுக்கு உரியது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் நிற்கும் கட்சிகள் எழுக தமிழின் கனிகளை அறுவடை செய்யக்கூடும். அது தவிர்க்க முடியாதது. அதற்காக எழுக தமிழ் இரு கட்சிகளுக்குரியதாக இருக்கக்கூடாது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அப்படித்தான் முடிவெடுத்திருக்கிறார்கள். அதேசமயம் பேரவையை புனரமைப்பது என்பதனை எழுக தமிழை ஆதரிப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கவில்லை. இது மிகவும் முதிர்ச்சியான ஓர் அணுகுமுறை. மக்கள் நேய அணுகுமுறை.

இதுபோலவே மக்கள் மைய நோக்கு நிலையிலிருந்து எழுக தமிழை அணுகும் ஒரு போக்கை கிளிநொச்சியிலும் காணமுடிகிறது. கடந்த வாரம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அதிபர்களோடு எழுக தமிழ் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த இருவரை சந்திக்க வைத்திருக்கிறார். அது எழுத தமிழுக்கான ஒரு சந்திப்பாக முன்னறிவிக்கப்படவில்லை. எனினும் நடைமுறையில் எழுக தமிழுக்கு பலம் சேர்க்கும் ஒரு சந்திப்பு அது.

நாளை நடக்கவிருக்கும் எழுக தமிழில் ரெலோ பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளுமா? சிறீதரனைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் எழுக தமிழை மக்கள் மைய நோக்கு நிலையில் இருந்து பார்க்க வேண்டிய தேவை உண்டு.

பல்கலைக்கழக மாணவர்களே பேரணியை ஒழுங்கமைப்பார்களாக இருந்தால் அது கட்சி அடையாளங்களைக் குறைத்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு அதிக தொகை மக்களைத் திரட்டப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது பேரணியில் ஆகக் கூடிய பட்சம் கட்சி அடையாளங்களைப் பின்தள்ள வேண்டும் என்பதும்.

இது விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்குமா? ஏனெனில் அது ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் மக்களுக்கு மட்டும் உரியது அல்ல. அது கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குரியது.

ஓர் அரசியல் கைதியின் பெற்றோர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம். ஆனால் அரசியல் கைதிகளுக்கான போராட்டம் என்பது பொதுவானது. கட்சி கடந்தது. அதைப்போலவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும் கட்சிகளுக்கு உரியதல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எந்தக் கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உறவினர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் என்பது பொதுவானது. அப்படித்தான் மகாவலி எல் வலையத்துக்கு எதிரான போராட்டம், கன்னியா போராட்டம், செம்மலை பிள்ளையாருக்கான போராட்டம் போன்றவையும். இப்போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக இருக்கலாம். ஆனால் போராட்டம் ஒரு கட்சிக்குரியதல்ல. அது தமிழ் மக்களின் நீண்ட எதிர் காலத்துக்குரியது.

அப்படித்தான் எழுக தமிழும். அது முன்வைக்கும் கோரிக்கைகள் பொதுவானவை. அக் கோரிக்கைகள் தமிழ் மக்கள் பேரவைக்கு மட்டும் உரியவை அல்ல. விக்னேஸ்வரனின் கட்சிக்கு மட்டும் உரியவை அல்ல. பிரதான தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் அவை. சில தமிழ் கட்சிகள் அவற்றை விக்னேஸ்வரனின் கோரிக்கையாக பார்க்கக்கூடும். ஆனால் சிங்களத் தலைவர்களும் கட்சிகளும் சிங்கள ஊடகங்களும் அவற்றை தமிழ் மக்களின் கோரிக்கைகளாகவே பார்க்கும். எழுக தமிழ் பொருத்தமான வெற்றிகளைப் பெறத் தவறினால் தமிழ் கட்சிகள் அதைப் பேரவையின் தோல்வியாக அல்லது விக்னேஸ்வரனின் வீழ்ச்சியாக கருதக்கூடும். ஆனால் தென்னிலங்கையில் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே பார்க்கப்படும். அனைத்துலக அளவிலும் அது அப்படித்தான் பார்க்கப்படும்.

2009க்கு பின் தமிழ் மக்களை ஒரு பெருந் திரளாக திரட்டுவதில் சவால்கள் அதிகம். பொங்கு தமிழ்களை நடத்திய ஒரு மக்கள் கூட்டம் சிறிய அளவில் எழுக தமிழ்களை நடத்த வேண்டி இருப்பது என்பது ஒருவிதத்தில் வீழ்ச்சி. தென்னிலங்கையில் கோத்தபாயவும் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசநாயக்கவும் திரட்டும் பெரும் கூட்டத்தோடு ஒப்பிடுகையில் எழுக தமிழ் மிகவும் சிறியது. ஆனால் 2009 க்குப் பின்னரான வெற்றிடத்தில் வைத்துப்பார்த்தால் எழுக தமிழ் ஒரு முன்னேற்றம்

அது தமிழ் மக்களைத் திரள் ஆக்குகிறது. தேசியம் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் மக்களைப் பெருந் திரள் ஆக்குவதுதான். ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது தமிழ் மக்களைப் பெருந்திரள் ஆக்குவதுதான்.

தேசம் என்றால் ஒரு பெரிய மக்கள் திரள் என்று பொருள். ஒரு மக்கள் கூட்டத்தை நிலம், இனம், மொழி, பண்பாடு, பொதுப் பொருளாதாரம் போன்றவை திரள் ஆக்குகின்றன. இவ்வாறு மக்கள் ஒரு திரளாக இருப்பதை அதாவது தேசமாக வாழ்வதை அழிப்பதுதான் இனப்படுகொலை. ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் அடிப்படை மூலக்கூறுகளான நிலத்தை அபகரித்து சனங்களை, பண்பாட்டைச் சிதைத்து அந்த மக்களைக் கூறுபோடும் எல்லா அம்சங்களும் திரளாகத்துக்கு எதிரானவை. அதாவது தேசமாக வாழ்வதற்கு எதிரானவை.

இப்படிப் பார்த்தால் எழுக தமிழ் ஆனது தமிழ் மக்களைத் திரள் ஆக்குகிறது. அது பொங்கு தமிழ் போல மிகப்பெரும் திரள் இல்லைத்தான். ஆனாலும் 2009 க்குப் பின்னரான கூட்டுச் சோர்வு மனப்பான்மை, கூட்டுத் தோல்வி உணர்வு, கூட்டுக் காயங்கள், கூட்டு மனவடுக்கள் என்பவற்றின் பின்னணியில் கூறின் எழுக தமிழ் ஒரு முன்னோக்கிய அடிவைப்பு.

No photo description available.

இனப் படுகொலையின் சாம்பலிலிருந்தும், எஞ்சியிருப்பவர்களின் கூட்டுக் காயங்கள், கூட்டு மனவடுகள், கூட்டு அவமானம் என்பவற்றிலிருத்து தமிழ் மக்கள் திரும்பத் திரும்ப எழுவார்கள் என்பதை அது உலகத்திற்குக் காட்டும்.

அதில் எவ்வளவுக்கு எவ்வளவு ஜனங்கள் திரள்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அது கூறும் அரசியல் செய்தியின் தாக்கமும் அதிகரிக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் உட்பட பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்துப் போராட்டங்களும் அவற்றின் அடுத்த கட்டக் கூர்ப்பை அடைவதற்கு அது உந்து விசையாக அமையும்.

நிலாந்தன். கட்டுரையாளர் ஓர் அரசியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.