Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை வரும்காலம் ஈழத் தமிழர் தீர்க்கமான காலகட்டமாய் அமையும்: மு. திருநாவுக்கரசு

வரும்காலம் ஈழத் தமிழர் தீர்க்கமான காலகட்டமாய் அமையும்: மு. திருநாவுக்கரசு

8 minutes read

கடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கடந்தவாரம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் சென்னைக்கு  பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் தெரிவித்திருந்த கருத்துக்களும், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச  வெளியிட்டுள்ள கருத்துக்களும்  இவை.

இரண்டுக்கும் மத்தியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட  சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி   தெரிவித்துள்ள கருத்துக்களும் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை தெளிவுற எடுத்துக்காட்ட  வல்லவைகளாய்க்  காணப்படுகின்றன.

“”  இலங்கையில் எந்த அளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப் படுகின்றார்களோ,  எந்த அளவுக்கு அவர்களின் பூர்வீக வடக்கு -கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப் படுகின்றதோ  அந்த அளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

 “”அதாவது இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதிற்தான் தங்கியுள்ளது.  இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எமது நாட்டின் (இலங்கையின்) சிங்களத் தலைவர்களுக்கு இந்தியாவின் மீது    பற்றோ   பரிவோ  இல்லை  .””

இவ்வாறு   கடந்த 11ஆம் தேதி  சனிக்கிழமை சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில் வடமாகாண  முன்னாள்  முதலமைச்சர் சி.வீ.  விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இச்செய்தி இந்திய-இலங்கை ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.  இதன்பின்பு செவ்வாய்க்கிழமை 14ஆம் தேதி இலங்கை பிரதமர்  திரு. மகிந்த ராஜபக்ச   தமிழ் ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போது பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“”   வடக்கு -கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு –   தமிழர் பிரச்சினைக்கு-  தீர்வை இந்தியா தரவேண்டும்  என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை.  தீர்வு எம்மிடமே உள்ளது. அதைவிடுத்து தீர்வை  வெளியில் தேடுவதில்  அர்த்தம் இல்லை. நாம் எமது பிரச்சனைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை அன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவையும் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து உரையாடிய சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி    தெரிவித்த கருத்தும் இங்கே கவனத்துக்குரியது.

“”  இலங்கையின் இறையாண்மையை  சீனா  எப்போதும் மதிக்கின்றது. அதன் உள்நாட்டு விவகாரங்களில்   எந்த ஒரு   வெளியாரின் தலையீட்டையும்  அது ஒரு போதும் அனுமதிக்காது (China would always respect  Sri Lanka”s sovereignty and  not allow any  ” outside interference ”  in its internal affairs “”).

அதேவேளை சீன வெளிவிவகார அமைச்சர்  வாங்ஜி  கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ள இருந்த தருணத்தில் இந்திய  பிரதமர்  திரு. நரேந்திர மோடியின் விசேட தூதுவராக  பாஜகவின் தேசிய செயலாளர் ராம் மாதவ்  திடீரென  ஞாயிற்றுக்கிழமை  கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவையும் பிரதமர்  மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து இரகசியமாக உரையாடியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

எப்படியோ சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பனிப்போர் தற்போது ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மையம் கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

 தனது உலகளாவிய ஆதிக்கத்திற்கான  ” ஒரு தடம் ஒரு  வீதி “( “One belt one road”) என்ற  கொள்கையை நிறைவேற்றுவதற்கான  அச்சாணியாக  இலங்கையை ஆக்கிக்கொள்ளப்  பெரும்பாடுபட்டு   சீனா  “விடாக்கண்டன் கொடாக்கண்டன் “நிலைப்பாட்டில்  நின்று  செயற்படும் நிலை காணப்படுகின்றது.

ஆசியாவில் மட்டுமல்ல   உலகளாவிய ரீதியிலும்    பெரும்  வல்லரசாய் விளங்கவல்ல    “சீன  ட்ரகன் ” தனது முற்றமும் வாசற்படியுமாய்   விளங்கும்  இலங்கையில்   காலடி  பதிப்பதை இந்தியா அச்சத்துடனும்  வெறுப்புடனுமே  பார்க்கின்றது.

சீனா இவ்வாறு உலகளாவிய ஏகாதிபத்தியப்  பெரு வல்லரசாக வளர்வது என்பது  இந்தியாவிற்கு மட்டுமல்ல அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும்  கூடவே  ஜப்பானுக்கும்  அது பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இப்பின்னணியில் சீனா – இந்தியா-  அமெரிக்கா தலைமையிலான  நாடுகளைக் கொண்ட ஒரு முக்கோண முரண்பாடும் போட்டியும் உலகலாவிய அரசியலில் எழுந்துள்ள   காலமாய்  இது காணப்படுகின்றது.

இத்தகைய முப்பெரும் தரப்புக்களுக்கு  இடையே ஏற்படக்கூடிய “கூடலிலும், மோதலிலும் ” திருவிழா பார்க்கப்போன தவழையின் கதையாய் இலங்கைத்தீவின் பரிதாப நிலை காணப்படுகின்றது.

உள்நாட்டில் தனது சொந்த மக்களென அவர்களே கூறிக்கொள்ளும்  தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகவும், அழிப்பதற்காகவும் , இனக்கபளீகரம்   செய்வதற்காகவும்   அந்நிய அரசர்களை நாடி   அத்தகைய அந்நிய அரசுகளின் ஆபத்தான கனரக ஆயுதங்கள் கொண்டு

ஈழத்தமிழர்களை  அழிக்கும்  கைங்கரியத்தைச்  செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள்  தமிழ் மக்களுக்கு தாமே உள்நாட்டில் தீர்வு கொடுக்கப் போவதாக விசித்திரமாய் பேசுகின்றனர்.

அவர்கள் சொந்த மக்களெனக் கூறும் அந்த சொந்த மக்களுக்குரிய  உரிமைகளை  வழங்கி அவர்களுடன் இணைந்து  அமைதியும் ,சமாதானமும், சுபீட்சமும் நிறைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு  மாறாக அந்நிய   அரசுகளின்  அரசியல் , இராணுவ ” ஆயுத ,  இராஜதந்திர உதவிகளைப் பெற்று  தம் சொந்த தமிழ் மக்களை   அழித்தவரும் செயலை செய்துகொண்டு   அவர்களுக்கான  தீர்வைப்பெற  வெளிநாடுகளின்  உதவிகளை  அவர்கள் கோரக்கூடாது என்று  இப்போது சிங்கள ஆட்சியாளர்கள் வேதம் ஓதுகிறார்கள்.

“”  இனப்பிரச்சினை என்பது ஒருபோதும் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல அது எப்போதும் சர்வதேசப் பிரச்சினை””

இன அழிப்பை மேற்கொள்வதற்கும் அதனை நியாயப்படுத்துவதற்குமாக   அப்பிரச்சினையை உள்நாட்டுப் பிரச்சினை என்றும் ,  அத்தகைய நாட்டின்  உள்விவகாரங்களிலும்   இறைமையிலும் வெளியார்  தலையிடக்கூடாது என்று கூறிக்கொண்டு அன்னிய நாடுகளின் உதவிகளைப் பெற்று அந்த தமிழ் மக்களை அழிக்கும் பணியை இலங்கை அரசு செய்து வருகிறது.

சீனாவின்  “”  பட்டுப் பாதைக்கு”” இலங்கை அரசு  அச்சாணியாய் இருப்பதன் பின்னணியில்  தமிழினத்தை அழித்தொழிக்கும் இலங்கை அரசின் செயலை நியாயப்படுத்துவதற்காக ஈழத் தமிழர்களின் தேசிய பிரச்சினையை உள்நாட்டுப் பிரச்சினை என்றும் அதனை  இலங்கை  அரசே  பர்த்துக்கொள்ளும் என்றும்   சீனா உறுதிபடக்கூறி  அதற்கான  அனைத்துவகை  ஆக்கமும், ஊக்கமும் ,உதவியும் ,ஒத்தாசையும்   சீனா புரிந்து வருகின்றது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவை தாமாக முதலில் நாடவில்லை.  ஈழத்தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு  சிங்கள  மக்களுடன் இணைந்து வாழவே உண்மையில் விரும்பினார்கள்.  அதற்கான முயற்சிகளைதான் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து அவர்கள் 20 நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எடுத்தாளர்கள்.

தமிழும் சிங்களமும் உத்தியோக மொழிகளாக வேண்டும் என்கின்ற மசோதாவை  1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  டாக்டர்.   என். எம். பெரேரா    நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்காக வாதிட்டார்.  அதற்கு மறுப்பு தெரிவித்து உரையாற்றிய  எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா  இந்தியா பற்றிய அச்சத்தை எழுப்பி , இந்தியாவில் தமிழர்கள் வாழ்வதை காரணம் காட்டி  அத்தகைய  பின்னணியில் தமிழையும் உத்தியோக மொழியாக ஆக்கமுடியாது என்று கூறினார்.

அப்போது தமிழ் மக்கள்   அதனை   ஒரு உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதாகவே பார்த்தார்கள்.  அவர்கள் இந்தியாவை நாடவில்லை. அப்போது ஈழத் தமிழர்களை இந்தியாவுடன் சம்பந்தப்படுத்தி தமிழருக்கான உரிமையை மறுத்தது சிங்கள ஆட்சியாளர்கள்தான்.

1958 ஆம் ஆண்டு இனப்படுகொலை கலவரத்தை பண்டாரநாயக்க அரசாங்கம் நடத்தியபோது அன்றைய இந்திய பிரதமர்  நேருவின்  தலையீட்டின் பெயரில் அந்தப் படுகொலையை இலங்கை அரசு  தொடரமுடியாது நிறுத்த வேண்டி ஏற்பட்டது.

1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலையின்  போது  அதனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்திற்கு எதிராக அன்றைய இந்திய பிரதமர் திருமதி . இந்திரா காந்தி  மேற்கொண்ட  காட்டமான  அரசியல் –  இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமே அதை நிறுத்த   முடிந்தது.

எப்படியோ தற்போது ஈழத் தமிழர்களின் விவகாரம்   இந்தியா – சீனா – அமெரிக்கா உள்ளிட்ட அரசுகளின் நலன்களோடும் அவர்களின் பிரச்சினைகளோடும்  பின்னிப்  பிணைந்துவிட்டது.  ஆதலால் இதனை   அத்தகைய அரசுகளோடு தொடர்பு படுத்தாமல்  இனிமேல் ஒருபோதும்  அணுகமுடியாது.

இத்தகைய பின்னணியிற்தான்  திரு. விக்கினேஸ்வரனின்  கருத்தும் நிலைப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது.

 சென்னைக்கு அவர் மேற்கொண்ட பயணம் அவர் எதிர்பார்த்திருக்க கூடியதையும்விட  அதிக  முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. அவரின் பயணத்திற்கு இந்திய ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் கொடுத்த முக்கியத்துவம் பெரிதும் கவனத்துக்குரியது.

அவர் தெரிவித்திருந்த  கருத்துக்கள் இந்தியத் தரப்பில் குறிப்பாக மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் அதிகம் சிரத்தைக்கு உரியவையாக காணப்பட்டன.

ஈழத் தமிழரின் நலனுக்காகத்தான்   இந்தியா   ஈழத் தமிழருக்கு  உதவ வேண்டும் என்ற ஒரு பொதுவான கருத்துநிலையும் கண்ணோட்டம் இந்திய மக்களிடம் பரவலாக உண்டு.

ஆனால் அதற்கும் அப்பால்  இந்தியாவின் நலன் ஈழத் தமிழரின் நலனோடு பின்னிப்பிணைந்து இருக்கின்றது என்ற  கருதை   இந்திய மக்கள் மத்தியில்  உணர்த்தும் வகையில்  திரு. விக்கினேஸ்வரனின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தனவாய் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட    சாத்வீகமான ஒரு தலைவர் என்கின்ற வகையில்   திரு. விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அதிகம் இந்திய ஊடகங்களாலும்  மக்களாலும் கவனத்தில்  எடுத்துக்கொள்ளப்படும்  நிலை  காணப்படுகிறது.

அவர் தெரிவித்திருக்கும் அந்தக் கருத்துக்கள்  அன்றோடு முடிந்திருக்க கூடியவையல்ல .  அவை நின்று நிலைத்து மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும்  , அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை அரசியலும் ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையும் தெளிவாக சர்வதேச அரசியலின் எரிதணலுள் பிரவேசித்து விட்டன. இனி அதனை சர்வதேச உலைக் களத்தில் இருந்து  சிறிதும்  பிரித்துப் பார்க்க முடியாது.

இத்தகைய நிலையில் சர்வதேச உலைக் களத்தில் இருந்து தமிழின விடுதலையை   வார்ப்புச்  செய்யவல்ல திறனையும் ஆற்றலையும் காட்டவல்ல தமிழ் தலைவர்கள்  யார் ?

திரு . விக்கினேஸ்வரனின்   கருத்து  ஒரு  நொதியத்தை( Catalyst)   ஊக்கியை  ஏற்படுத்தியிருக்கிறது.  திருவாளர்கள் விக்கினேஸ்வரன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  உள்ளிட்ட தமிழ் தலைவர்கள்  இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டும்   நிலமை  வளர்ந்து செல்வதை  அவர்களின் அண்மைக்கால    கருத்துக்கள்  வாயிலாகக்  காணலாம் .

திரு .சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட மற்றும் தலைவர்களும் இந்தியாவுக்கு  நெருக்கமானவர்கள்  என்ற கருத்து  ஏற்கனவே இருப்பதும் இத்துடன் இணைத்துப் பார்க்கப்பட்டத்தக்கது.

“” China stands for the country’s  sovereignty, territorial integrity and independence. We will not allow any outside influences to interfere with the matters that are essentially internal  concerns of Sri Lanka””   என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி   மேலும் கூறியதை ஆழ்ந்து நோக்க வேண்டியது அவசியம்.

இனப்பிரச்சினையை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று வரையறை செய்யும் சீனா,   மேற்படி கூறியுள்ள  “”teritorial intergrity””   என்ற பதத்தின்  வாயிலாக  தமிழ் மக்களுக்கு “சமஸ்டி முறையிலான தீர்வு கிடையாது”  என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை  ஆதரித்து  வலியுறுத்துவதாய் அமைந்திருக்கிறது.

மேலும்   இங்கு  சீனா தெரிவித்துள்ளது  இலங்கை  அரசின் “” sovereignty”” ,  என்ற வார்த்தையாலும்,  “” outdise influences”  ஐ   சீனா அனுமதிக்காது என்ற  வார்த்தையாலும்   தமிழினத்தின் மீது இலங்கை அரசு மேற்கொள்ளவல்ல  இன ஒடுக்குமுறை, இன அழிப்புக்களை   சீனா ஆதரித்து நிற்கின்றது என்பதுமே பொருளாகும்.

அத்துடன் இங்கு “”outside influences””  என்று   சீனா கூறுவதன் முதல் பொருள்  இந்தியாவை நோக்கியதாகவும்  அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை நோக்கியதாகவும் அமைந்துள்ளது.

சீனாவின் மேற்படி  கருத்தில்  இலங்கை தொடர்பான  அதன் நிலைப்பாடு ,   தமிழின அழிப்பு தொடர்பான  அதன் நிலைப்பாடு,  சர்வதேச அரசியல் தொடர்பான  அதன் நிலைப்பாடு என்பன  தெளிவாக உள்ளன.

“இறைமை” (sovereignty) ,  “உள்நாட்டு விவகாரம்” (internal matters )  என்ற பதங்களுக்கு இலங்கை அரசின் அரசியல் அகராதியில் இருக்கும்  அர்த்தம்  தமிழினத்தை இனப்படுகொலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டு ,  அதில் எந்தொரு வெளிநாடும் தலையிட முடியாது,  தலையிடக் கூடாது என்பதாகும்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில்   ஹாங்காங் துறைமுக நகரை  99 வருட குத்தகைக்கு பிரித்தானியா எழுதிக் கொண்டது.  அதனை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு என்று கூறி அதற்கெதிராச் செயற்பட்டுவந்த சீன  நாடானது இன்று இலங்கையில்  அம்பாந்தோட்டை துறைமுக நகரை  99 வருட குத்தகைக்கு எழுதி வைத்துக்கொண்டு  இலங்கை அரசுடன் கைகோர்த்து   அதன்  தமிழின அழிப்பு   கொள்கையை ஆதரித்து உதவுவதான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இந்த இன அழிப்புக் கொள்கையில் மையம் கொண்டுதான் சீன அரசு இலங்கை அரசுடன் தனது உள்நாட்டு வெளிநாட்டு ரீதியான உறவுகளை  வடிவமைத்துள்ளது.

இத்தகைய கண்ணோட்டத்துடன்தான் இனி வரப்போகும் காலங்களில் காணப்படக்கூடிய இலங்கை –  இந்திய –  சீன – அமெரிக்க   உறவுகளையும் தமிழர்களின் இனப்பிரச்சினையையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆதலால்  உள்நாட்டு , வெளிநாட்டு  அர்த்தத்தில்   வரப்போகும் சில ஆண்டுகள்  இலங்கை அரசியலிலும்,  ஈழத் தமிழர் விவகாரத்திலும் தீர்க்கமான காலகட்டமாய் அமையும் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை.

இதனை  எதிர்கொள்ளவும்  கையாளவும்வல்ல அறிவையும்,  ஆற்றலையும், ஆளுமையையும் , திறனையும்,   புத்திசாதுரியத்தையும்  தமிழ் தலைவர்கள் காட்டுவார்களா என்பதிலேயே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

மு. திருநாவுக்கரசு. கட்டுரையாளர், ஈழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More