Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை வைரஸா? தேர்தலா? – நிலாந்தன்

வைரஸா? தேர்தலா? – நிலாந்தன்

6 minutes read

ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும்  கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக பட்டினி கிடக்கும் எவரும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.  அதன்மூலம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு உதவிகள் கிடைக்கும் என்றுமிருந்தது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை ஊடகவியலாளர்களிடம் விசாரித்தேன். யாழ் மாவட்ட செயலர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் அப்படி ஒரு  இலக்கத்தை கொடுத்ததாகச் சொன்னார்கள்.

இப்போது உள்ள நிலைமைகளை பொறுத்தவரை அது ஒரு நல்ல செயல். உதவி தேவைப்படுவோர் நேரடியாக மாவட்ட  செயலககத்தோடு தொடர்பு கொள்ளலாம். ஆனால் இங்கு ஒரு அடிப்படைக் கேள்வியைக்  கேட்க வேண்டும.; இப்படி எத்தனை பேர் அந்த ஒரு தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலாம்? எத்தனை தடவைகள் தொடர்பு கொள்ளலாம்? இவ்வாறு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறுவது என்பது ஒரு பொருத்தமான பொறிமுறையயா?;

வடக்கில் மட்டுமல்ல இலங்கை முழுவதிலுமே அப்படி ஒரு பொறிமுறை இருப்பதாக தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிவாரணப் பொறிமுறை இல்லாத வெற்றிடத்தில்தான் பாலித தேவபெரும போன்ற அரசியல்வாதிகள் கதாநாயக அரசியலை முன்னெடுக்கிறார்கள். ஏழைகளுக்காக அடிமட்டம் வரையிலும் இறங்கிவரும் இரக்கம் மிகுந்த தலைவர்களாக காட்சியளிக்கிறார்கள்.

ஏற்கெனவே அரச செயலகங்கள் சமூர்த்திக் கொடுப்பனவோடு  முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள்,சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கான கொடுப்பனவுகளை மாதாந்தம் வழங்கிவருகின்றன. ஊரடங்கு சட்டத்தின்பின் மேற்படி கொடுப்பனவுகள் ஒழுங்காக வழங்கப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்த போதிலும் பின்னர் நிலைமை ஓரளவிற்கு   சீராகியது.ஆனால்கோவிட்-19க்கு பின்னரான ஊரடங்கு சட்டத்தின்கீழ்  நாளாந்தச்  சம்பளம் பெறுவோர் நிலையான தொழில் அற்றவர்கள் என்ற ஒரு பெரும் தொகுதியினர் வருமானத்தை இழந்து விட்டார்கள். அவர்கள்சேமிப்பில் மட்டும் தங்கியிருக்கும் ஒரு நிலைமை தோன்றியுள்ளது.இது மேற்கண்ட அரசாங்க கொடுப்பனவுகளைப்  பெறும் தொகையை விட மிக அதிகம். இது தொடர்பில் தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் யாரிடமாவது உண்டா?அவர்களுக்கு இப்பொழுது அரசாங்கம் வழங்கத் தொடங்கியிருக்கும் 5000 ரூபாய் எந்த மூலைக்கு காணும் ?

கடந்த சில வாரங்களாக அரசாங்கம் அறிவித்துவரும் அனைத்து சலுகைகளினதும் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக நுகர முடியாது இருக்கிறார்கள.; அரசாங்கம் விலைக்குறைப்பு செய்த பொருட்கள் பெரும்பாலானவை பதுக்கப்பட்டு விட்டன. பொருட்களின் வழமையான சந்தை விலையைக் குறைக்கும் பொழுது லாபத்தை இழப்பதற்கு வணிகர்கள் தயங்குகிறார்கள.; எனவே  விலையைக்  குறைத்து விட்டு வழமையான சந்தை நடவடிக்கைகளுக்கு ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாது.அது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும.; நோய் எதிர்ப்பு சக்தி உயர்வாக இருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் முட்டையின் விலையைக் குறைத்ததால் முட்டை பருப்பு போன்ற பொருட்கள்  பதுக்கப்பட்டு விட்டன. எனினும் முட்டையை ஒரு கட்டத்துக்கு மேல் பதுக்க முடியவில்லை. பதுக்கினால் அது அழுகிவிடும் எனவே விலை இறங்கிய முட்டை வீதிக்கு வந்துவிட்டது.எனினும் பருப்பையும் டின் மீனையும் காணமுடியவில்லை. எனவே பொருட்களின் விலையைக் குறைத்துவிட்டு வழமையான சந்தை நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாது. மாறாக அதற்கென்று தனியான ஒரு நிவாரணப் பொறி முறை வேண்டும்.

அரசாங்கம் பசில் ராஜபக்சவின் தலைமையில் ஒரு செயலணியை உருவாக்கியது. ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் பொருத்தமான எந்த ஒரு நிவாரணப் பொறிமுறையும் அமலுக்கு வரவில்லை. பெரும்பாலும் இவ்வார இறுதியில் ஏதாவது ஒரு பொறிமுறை அமலுக்கு வரலாம் என்று மனோ கணேசன் கூறுகிறார்.இப்பொழுது நாட்டில் அமுலில் இருப்பது சட்டபூர்வமான ஊரடங்குச்சட்டம் அல்லவென்றும்அவர் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல இப்பொழுது நடைமுறையில் இருப்பது ஊரடங்கு சட்டமா அல்லது லொக்  டவுணா என்ற கேள்வியும் உண்டு. இப்பொழுது நாட்டில்நடைமுறையில் இருப்பது ஒரு முழுமையான ஊரடங்குச் சட்டம் அல்ல. அது ஊரடங்கு சட்டத்திற்கும் லொக் டவுணுக்கும்  இடைப்பட்ட ஏதோ ஒன்று. ஏனெனில் ஊரடங்குச் சட்டம் என்றால் ஊர் முழுமையாக முடக்கப்படும். லொக் டவுண் என்றால் பொது சன நடமாட்டம் முடக்கப்படும். அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் இயங்க அனுமதிக்கப்படும.;  நாட்டில் இப்பொழுது இருப்பது இந்த இரண்டுக்கும் இடைப்பட்டஒன்று.ஒருபுறம் ஊரடங்கு சட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய சேவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  சில கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால்  கடைகளில் போய் கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு அனுமதி இல்லை. அப்படி என்றால் திறக்கப்பட்டிருக்கும் கடைகளில் எப்படிப்  பொருட்களை நுகர்வது ?

வீதிகளில் இறங்கும் மக்களை போலீஸ் பிடிக்கிறது. அப்படி என்றால்மக்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகிப்பதற்கு ஏதாவது ஒரு ஏற்பாடுஇருக்கிறதா? தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த நாடுகளில் அதற்குரிய தொழில்நுட்ப வலையமைப்பு உண்டு. ஒண் லைனில்  பொருட்களை கோரிப் பெறலாம்.ஆனால் இலங்கைத் தீவில்?

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் வடக்கில் ஆளுநரே எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஒரு பொருத்தமான வினைத்திறன் மிக்க நிவாரண பொறிமுறையையும் விநியோகப் பொறிமுறையையும் ஏற்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில்வசிக்கும் ஓய்வுபெற்ற மூத்த சிவில அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ் மாகாணங்களில் உயர்ந்த பொறுப்புக்களை வகித்த திறமைசாலியான அனுபவஸ்தர் அவர்.

சில தரப்புக்கள் கூட்டுறவு சங்கங்களை நிவாரணப் பொறிமுறைக்குப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.நிலைமை இப்படியே போனால் சமூகத்தின் நலிவுற்ற பகுதியினர்மட்டுமல்ல நடுத்தர வர்க்கமும் காற்றையா குடிப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிஇருக்கும்.

ஆனால்இது விடயத்தில் அரசாங்கத்திடம் நீண்டகாலத் திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை. கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்காலிகமானவைகளாகவே  கருதுவதாகத் தெரிகிறது.அந்நடவடிக்கைகளை அரசாங்கம் தேர்தல் கண்கொண்டே பார்க்கிறது.  பாடசாலைகளை அடுத்த மாதம் பதினோராம் திகதி தொடக்கப்  போவதாக அறிவித்திருப்பதும் அந்த அடிப்படையில்தான். கோவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு குறுங்கால நடவடிக்கையாகத் திட்டமிடுவதால்தான்நாட்டில் விநியோகப் பொறிமுறையும் நிவாரணப் பொறிமுறையும் இதுவரையிலும் உருவாக்கப்படல்லையா?

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் அரசியல் கட்சிகளும் தன்னார்வக் குழுக்களும் தொண்டு நிறுவனங்களும்; கோவில்களும் சமய நிறுவனங்களும் தனிநபர்களும் பாலித தேவபெருமாக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றார்கள். இந்த நிவாரணங்களுக்கான  பெருமளவு நிதியை புலம்பெயர்ந்த தமிழ் மக்களே வழங்கி வருகிறார்கள்.அரசாங்கம் இந்த உதவியைப்பெருமளவுக்கு உள்ளே  வர விடுகிறது.  இதன் மூலம் அரச உதவியின்றி தமிழ் மக்கள் எவ்வளவு காலம் நின்று படிப்பார்கள் என்பதையும் எங்கிருந்தெல்லாம் நிதி வருகிறது என்பதையும் கண்டுபிடிக்கலாம் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் சொன்னார்.

இவ்வாறு உதவிகளை வழங்கும் பலரும் உதவி பொதியில் தமது பெயர்களை பதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதில் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள.; ஏனெனில் அரசாங்கம் இக்கால கட்டத்தை ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்குரிய ஒரு காலகட்டமாக பார்ப்பதைப் போலவே அரசியல் கட்சிகளும் பார்க்கும்.  ஊரடங்கு நீக்கப்பட்டு பூட்டப்பட்ட நகரங்களும் கிராமங்களும் திறக்கப்பட்ட உடனடுத்த காலகட்டத்தில் தேர்தல் நடக்குமாக இருந்தால் அது அரசாங்கத்துக்கு அதிகம் சாதகமானது. ஏனைய கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு போதிய கால அவகாசம் இருக்காது. பெருங்கூட்டங்களைத் திரட்டுவதும் சவாலாக இருக்கலாம். கோவிட்-19உம்  இலங்கைத் தீவின் யாப்பும் மோதும் ஒரு கால கட்டம் வருகிறது.

எனவே கோவிட்-19இற்கு பின்னரான அரசியலைக் குறிவைத்தே கட்சிகள் சிந்திக்கின்றன. அந்த அடிப்படையில் அவர்கள் ஒத்திவைக்கப்பட்ட இக்கால கட்டத்தில் பிரச்சாரத்தை வேறு எப்படி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள். அதற்கு நிவாரண அரசியல்  அல்லது தான தர்ம அரசியல் பொருத்தமானது என்றும் யோசிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் போட்டிக்கூடாகவே நிலைமையை அணுகும.; தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு  நிவாரணப் பொறிமுறைக்குச் சாத்தியமே இல்லை.

நிவாரண மற்றும் வினியோகப் பொறிமுறைகளில் மட்டுமல்ல பாடசாலைகள்  மூடப்பட்டதால்  பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதிலும் அரசாங்கத்திடம் பொருத்தமான தரிசனங்கள் இல்லை. இலத்திரனியல் செயலிகள் மூலம் கல்வியை தொடரலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் அந்த அளவுக்கு  இலங்கைத்தீவு இலத்திரனியல் மயப்படவில்லை. இதில் சமனற்ற வளர்ச்சியே காணப்படுகிறது எல்லாரிடமும் இன்டர்நெட் வசதிகள் இல்லை. எல்லாரும் அரசு தொலைக்காட்சிகளைப்  பார்ப்பதும் இல்லை. எல்லாருக்கும் கைபேசி செய்திகளை வெற்றிகரமாக கையாளத்  தெரியாது. இதனால் கற்பித்தல் நடவடிக்கைகளை இலத்திரனியல் மயப்படுத்தும் பொழுது அது எல்லாருக்குமானதாக இருக்குமா? என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ஓய்வுபெற்ற சிவில் அதிகாரி என்னிடம் கேட்டார.;

ஊரடங்கு வேளையில் பொருட்களை வினியோகிப்பதற்கு  நவீனமான  இலத்திரனியல் வலைப்பின்னல்களை ஏன் உருவாக்க முடியவில்லை என்று யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தின் தலைவரான த.தவரூபன் கேட்டார் “நமது வியாபார நிலையங்கள் இப்பொழுதும் வாட்ஸ்அப்,வைபர் போன்ற செயலிகளைத்தான் வைத்து உருட்டிக் கொண்டிருக்கின்றன அதற்கும் அப்பால் புதிய செயலிகளை குறித்து அவர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.இது தொடர்பில் அவர் முகநூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

இப்பொழுது ஊரடங்கு வேளையில் அவ்வாறான புதிய இலத்திரனியல் செயற்பாடுகளை குறித்து சிந்திக்கப்படுகிறது. ஆனால் கோவிட்-19இற்கு முன்னரானஇயல்பான வாழ்க்கையின் போதும் தமிழ்ப் நகரங்களில் இலத்திரனியல் கட்டமைப்பு பலமாக இருக்கவில்லை.உதாரணமாக போக்குவரத்துக்கான நவீன வலையமைப்போ அதற்குரிய செயலிகளோ வடக்கில் இல்லை. கிழக்கில் அப்படி ஒரு செயலி உருவாக்கப்பட்டது. ஆனால் அது செயற்பட முன் கோவிட்-19 வந்துவிட்டது. கொழும்பில் புழக்கத்தில் உள்ள ஊபர் என்ற செயலியை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த முயற்சித்து அது வெற்றி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முச்சக்கரவண்டிகளையும் வாடகைக் கார்களையும் ஒருங்கிணைத்து ஒரு வலையமைப்பை  உருவாக்கி அப்படி ஒரு போக்குவரத்து ஏற்பாட்டைச் வடக்கில் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்டதொரு  பின்னணியில்தான்  கோவிட்-19 திடீரென்று தாக்கியது.

இதனால்  வீட்டில் இருந்தபடி பொருட்களையும் உணவையும் ஒண் லைன் மூலம்  கோரிப்  பெறும் ஏற்பாடுகள் இப்பொழுதும் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில்தான் அதிகம் புழக்கத்தில் உள்ளன. கடந்த சில கிழமைகளில் அவை அதிகரித்த தேவைகளுக்கேற்ப பரந்தளவிலான  வளர்ச்சியைப் பெறவில்லை.

எனவே தொகுத்துப் பார்த்தால் தமிழ்ப் பகுதிகளில் முன்னெப்பொழுதுமில்லாத மிக நீண்ட சமூக முடக்க காலகட்டத்தில் அரசாங்கமும் ஒரு நிவாரண பொறிமுறையை ஏற்படுத்தவில்லை ; ஒரு விநியோக பொறிமுறையை உருவாக்கவில்லை. அதேசமயம் தமிழ் வணிகர்களும் நுகர்வோரும் கணினித் துறை சார்ந்த நிபுணர்களும் சிவில் அமைப்புகளும் அரசு அலுவலர்களும் அரசியல் வாதிகளும் இணைந்து ஒரு பொருத்தமான விநியோகப் பொறிமுறையைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதைத்தான் கோவிட்-19 இற்கு கீழான அனுபவம் காட்டியிருக்கிறது. ஒருபுறம்  உலகமயமாதலின் விளைவாகவே வைரஸ் விரைவாக உலகம் முழுவதும் பரவியது. இன்னொருபுறம் உலகமயமாதலின் தொழில்நுட்ப  அடிச்சட்டமாக காணப்படும் தகவல் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக கையாண்டு  இப்பொழுது ஏற்பட்டுள்ள  இயல்பற்ற வாழ்க்கைமுறையை உலகின் ஒரு பகுதி மக்கள் வெற்றிகரமாகக் கடந்து வருகிறார்கள.; ஆனால் தமிழ் மக்கள்?

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More