June 7, 2023 5:50 am

நிபோஜனின் மரணம் – சொல்வதென்ன? இளைய ஊடகவியலாளர்களுக்கும் இணையப் பயனர்களுக்குமான அறிவுரை | அ. நிக்சன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஊடகவியலாளர்கள் குறிப்பாகச் செய்தித்துறையில் பணியாற்றுவோர், இதழியல் ஒழுக்க விதிமுறைகளை மாத்திரமல்ல, தொழில் பாதுகாப்பு முறைகளையும் (Occupational safety) அறிந்திருக்க வேண்டும்.

முதலில் உயிர்தான் முக்கியம். அதன் பின்னர்தான் செய்தி.

ஒரு செய்திக்காக அல்லது தான் எடுத்த காணொளியை (Video) ஆபத்தான இடமொன்றில் இருந்து இணையத் தொலைக் காட்சியில் (Youtube Channel) பதிவு செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு விதியும் இதழியல்துறை மற்றும் இணையச் செய்தித்தள விதிகளில் (New Media, Visual Media) இல்லை.

ஏனெனில் செய்தியாளன் ஒருவரின் உயிரும் அவனுடைய பாதுகாப்புமே முக்கியமானது. இந்த இரண்டையும் கடந்து ஒரு செய்தியாளனுக்கு உலகில் வேறெதுவும் பிரதானமாக இருக்கவே முடியாது.

ஆகவே நிபோஜனின் வயதைச் சேர்ந்த அனைத்து இளம் ஊடகவியலாளர்களுக்கும் எனது பணிவான வேண்டுகோள்–

–முதலில் உங்கள் உயிருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்-

செய்தியிடல் பணி என்பது விடுதலைப் போராட்டமல்ல.

விடுதலைப் போராட்டம் ஒன்றில்தான் உயிரைத் துச்சமென மதித்துப் பணியாற்றுவது.

ஆனால் செய்தித்துறையில் அப்படிப் பணியாற்ற வேண்டுமென்ற இதழியல் நடைமுறைக் குறியீடு எதுவும் இல்லை. (Journalism Code of Practice) எதுவும் இல்லை.

உங்கள் உயிரைத் துச்சமென மதித்துச் செய்திகளை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று பிரதம ஆசிரியரோ, செய்தி ஆசிரியரோ எவருமே கட்டளையிடமாட்டார்கள்.

எந்த ஒரு ஊடக நிறுவனமும் அப்படிக் கட்டளையிடாது. அப்படிக் கட்டளையிட்டாலும். ”எனது உயிர்” – ”எனது குடும்பம்“ முக்கியம் என்று கருதி அந்தக் கட்டளையை மறுக்கும் உரிமை செய்தியாளனுக்கு உண்டு.

குறித்த ஒரு இடத்துக்குச் செல்வதற்குத் தனக்குப் பாதுகாப்பு இல்லையென ஒரு செய்தியாளன் உணர்ந்து கொண்டால், அங்கு போவதைத் தவிர்ப்பதற்குரிய இதழியல் உரிமைகள் உள்ளன. (Journalism Profession Rights)

அதற்கொன்று ஒரு பிரகடனமே உண்டு. (Declaration of the Rights and Duties of Journalists- Munich, Germany, on November 23-24,1971)

பாதுகாப்பு ஊடகவியல் (Safety Journalism) ஒழுக்கக் கோவை செய்தியாளனின் அந்த உரிமையை மேலும் உரத்துக் கூறுகின்றது.

            இருந்தாலும் போர்க்காலத்தில் பல தமிழ்ச் செய்தியாளர்கள், காட்சி ஊடகவியலாளர்கள்  (Visual Journalist) உயிரைத் துச்சமென மதித்து கடமையாற்றிய சந்தர்ப்பங்கள் உண்டு. உலகத்துக்கு உண்மையை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியத் தேவை அன்று இருந்தது. ஆனால் இப்போது அப்படியான அவசரத் தேவைகள் இல்லை.

—நிபோஜன் எனது இரண்டு ஊடகப் பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றியவர். 2021இல் இறுதியாகக் கிளிநொச்சி ஹரிட்டாஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில்தான் நான் நிபோஜனைக் கண்டேன்.

வகுப்பு முடிவடைந்ததும் என்னுடன் சில நிமிடங்கள் பேசும்போது, நான் அவனுக்குச் சொன்ன ஒரு அறிவுரை இப்போது என் ஞாபகத்திற்கு வந்து என்னை வேதனைப்படுத்துகின்றது.

அதாவது ”பிரதேசச் செய்தியாளராக மாத்திரம் இருந்துகொண்டு குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது. அதற்காக இணையத் தொலைக்காட்சி ஒன்றைத் தனியாக நடத்திக் கூடுதலாகச் சம்பாதிக்கலாம் என்பதும் இலகுவானதல்ல”

”நீ, காட்சி ஊடகத்தில் (Visual Media) உன்னை நான்றாக வளர்த்துக்கொள். கையில் இருக்கின்ற வேலையைக் கைவிடாதே” என்றுதான் ஓரிரு வார்த்தைகள் கூறியிருந்தேன்.

நிபோஜன் கேட்ட கேள்வி ஒன்றுக்காகவே இந்தப் பதிலை நான் வழங்கியிருந்தேன். அப்போது மற்றொரு ஊடகவியலாளர் சிவகரன் அருகில் நின்றார்.

தகவல் தொழில்நுட்ப அறிவு அவனிடம் தாராளமாக இருந்தது. சமூகப் பற்றும் தமிழ் உணர்வும் அவனுடைய முழு மூச்சாக இருந்தை நான் அறிவேன்.

ஆனால் தன்னையும் தனது இளம் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற பிரதான இலக்கில் இருந்து அவன் தவறிவிட்டான் என்று நினைக்கும்போது, மனம் அதனை ஏற்க மறுக்கின்றது.

ரயில் விபத்தை வெறுமனே விதியாக மாத்திரம் நம்பி மனதை ஆற்றவே முடியாது. விதியைத் தன் ஊடக மதியால் அவன் வென்றிருக்க வேண்டும்.

இறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் முகநூலில் இறுதியாக நிபோஜன் பதிவு செய்த ஒரு படம் பாதுகாப்பற்ற ஆபத்தான இடத்தில் இருந்து எடுத்ததாகவே எனக்குத் தெரிகின்றது.

எதிர்கால வரலாறு ஒன்று வரலாறுகளைச் சொல்ல ஆரம்பித்தபோது, தீயில் சங்கமமாகிவிட்டது. ஆனால் எதிர்கால வரலாற்றைத் தனது அறிவுக்கேற்பச் சொல்ல முற்பட்ட அந்த இளம் செய்தியாளனை, காட்சி ஊடகவியலாளனை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டுகின்றது.

    பத்திரிகையாளன் - இதழியல் வளவாளன் என்ற முறையில் நிபோஜனுடன் தொலைபேசியில் நான் தொடர்ந்து உரையாடியிருந்தால், சில அறிவுரைகளை அவன் கேட்டிருக்கக்கூடும்.

இரண்டு பயிற்சி வகுப்புகளோடு மாத்திரம் தொடர்பை நிறுத்தியிருக்காமல், தொடர்ந்தும் நான் அவனுடன் தொலைபேசியில் கூட உரையாடவில்லையே என்ற ஏக்கம் தற்போது என் மனதை வாட்டுகின்றது.

அ.நிக்ஸன்-

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்