இந்தியா – உத்தரப் பிரதேசம், வாரணாசியில் தன்னை இராணுவ அதிகாரியாகக் காட்டிக் கொண்டு, போலி திருமண சுயவிவரங்களை உருவாக்கி, 25க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய நபரை உத்தரபிரதேச பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சந்தேகநபர், இந்தப் பெண்களிடம் ரூ.40 இலட்சம் மோசடி செய்து, கடந்த ஆறு ஆண்டுகளாக அவர்களை ஏமாற்றி வந்ததாக துணை பொலிஸ் ஆணையர் (குற்றம்) சரவணன் தங்கமணி தெரிவித்தார்.
“குற்றம் சாட்டப்பட்ட தயாலி உப்பல், தெலுங்கானாவின் பெடபள்ளி மாவட்டத்தில் வசிப்பவர். இன்று (13) வாரணாசியின் அவரை நாங்கள் கைது செய்தோம்.
“போலி திருமண சுயவிவரங்களை உருவாக்கி கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, இதுவரை இந்தப் பெண்களிடம் ரூ.40 இலட்சம் வரை மோசடி செய்துள்ளார் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. மேலும், அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார்,” என்று தங்கமணி கூறினார்.
“அவரிடமிருந்து இராணுவ சீருடைகளை மீட்டோம். மேஜர் அமித் மற்றும் மேஜர் ஜோசப் ஆகியோரின் பெயர்களில் போலி பெயர் பலகைகளையும் அவர் வைத்திருந்தார்.
இது தவிர, தேசிய புலனாய்வு அமைப்பு, பிராந்திய இராணுவம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட மத்திய பொலிஸ் அமைப்புகளிடமிருந்து சில போலி அடையாள அட்டைகளையும் பெற்றுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, இந்தப் போலி அடையாள அட்டைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அச்சிடும் ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.