இங்கிலாந்து – கிழக்கு சசெக்ஸில் (East Sussex) உள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து, ஒரு வெறுப்புக் குற்றச் செயலாகவும் தீ வைப்புச் சம்பவமாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 21:50 BST மணியளவில் பீஸ்ஹேவனில் உள்ள ஃபில்லிஸ் அவென்யூவில் (Phyllis Avenue in Peacehaven) அமைந்துள்ள இந்த முஸ்லிம் பள்ளிவாசலுக்கு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரும் சேதமடைந்ததாக சசெக்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர் பள்ளிவாசலின் முன் கதவு வழியாக நுழைய முயன்றதாகவும், அது பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே நுழைய முடியவில்லை என்றும் பெயர் வெளியிட விரும்பாத பள்ளிவாசலிலின் தன்னார்வலர் ஒருவர் கூறினார்.
அதன்பின்னர், அவர்கள் பள்ளிவாசலிலின் நுழைவாயிலிலும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அருகிலும் ஒரு திரவத்தை ஊற்றி, அதற்குத் தீ வைத்ததாக அந்த தன்னார்வலர் தெரிவித்தார்.
அப்போது உள்ளே இருந்த இருவர் தப்பிச் சென்றதாகவும், இல்லாவிடின் இதுவொரு கொலையாக மாறியிருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், முகமூடி அணிந்த இருவர் பள்ளிவாசலிலின் நுழைவாயிலை அணுகுவதையும், பின்னர் பெரிய அளவில் தீ பரவுவதையும் காட்டுகிறது.
தொடர்புடைய செய்தி : மென்செஸ்ட்டர் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு; கொல்லப்பட்ட தாக்குதலாளியின் பெயர் வெளியானது!
இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்த துப்பறியும் கண்காணிப்பாளர் கேரி போஹன்னா (Karrie Bohanna), “இந்தச் செயல் சமூகத்தில் ஏற்படுத்திய கவலைகளையும், இதன் விளைவாக முஸ்லிம் சமூகத்தினர் உணரும் தாக்கத்தையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் ஏனைய வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு அளிப்பதற்காக கூடுதல் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம், மென்செஸ்ட்டர் சம்பவத்தின் எதிரொலியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மென்செஸ்ட்டரில் ஒரு யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே நடந்த தாக்குதலில் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்த கவனம் புதுப்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
