இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா என பல நாடுகளில் வெள்ளம் ஆட்கொண்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் தற்போது மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வலுவான 3 புயல்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவை விட தென்கிழக்காசியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சுமார் 750 பேர் உயிரிழந்துள்ளனர். மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தற்காலிக முகாம்களை அமைக்கும் பணிகளை இந்தோனேசியா முடுக்கிவிட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கு முன் வெள்ளமும், நிலச்சரிவும் புரட்டிப் போட்ட சுமத்ரா தீவில் தொடர்ந்தும் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 550க்கும் அதிகமானோரைக் காணவில்லை.
இயற்கைப் பேரிடரின் பாதிப்பு இதுவரை முழுமையாக மதிப்பிடப்படமுடியாமல் உள்ளது.
இலங்கையில் இன்று (03) காலை 10 மணிவரையான நிலவரத்தின் படி, 474 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 356 பேர் காணாமல் போயுள்ளனர்.
பருவநிலை மாற்றமே மோசமான வெள்ளத்துக்குக் காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காடுகள் அழிக்கப்படுவது வெள்ள நிலவரத்தை மோசமாக்குவதாக அவர்கள் கூறுகின்றனர். பெருமளவு மரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பெருமளவு மழை நீரைத் தடுத்து உறிஞ்சுவதில் காடுகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.