இந்தியத் தலைநகர் புதுடில்லி கடுமையான புகைமூட்டத்தில் சிக்கியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விதிமுறைகளை மீறி அதிக அளவில் புகை வெளியிடும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 30 மில்லியன் மக்கள் வசிக்கும் புதுடில்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. காற்றுத் தரக் குறியீடு தொடர்ந்து ஆபத்தான 450 புள்ளியைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதனுடன் நிலவும் பனிமூட்டம் சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது.
பார்வைத் தூரம் கடுமையாக குறைந்ததால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தற்போது புதுடில்லியில் நான்காம் கட்டம் எனப்படும் மிக உயரிய எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, புதுடில்லிக்குள் பழைய டீசல் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், தினக்கூலிக்காக வேலை செய்யும் பதிவுபெற்ற கட்டுமானத் துறை தொழிலாளர்களுக்கு தலா 10,000 இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க உத்தரவிடப்பட்டுள்ளனர். தனியார் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.