செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விஜய் அரசுக்கு இன்று பலப்பரீட்சை – பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு

விஜய் அரசுக்கு இன்று பலப்பரீட்சை – பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு

1 minutes read

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முக்கிய வாக்கெடுப்பு இன்று (13) தமிழக சட்டப்பேரவையில் நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பு மாநில அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், கட்சித் தலைவர் மற்றும் தற்போதைய முதல்வரான ச.ஜோசப் விஜய், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடினார்.

இதனைத் தொடர்ந்து, 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கியது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தன. இதன்மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 120ஆக உயர்ந்தது.

இதையடுத்து கடந்த 10 ஆம் திகதி ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்றதுடன், 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதற்கிடையில், புதிய அரசு மே 13ஆம் திகதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார். மேலும், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சீனிவாச சேதுபதி, இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால், தமிழக வெற்றிக் கழகம் வென்ற 108 இடங்களில் தற்போது 106 உறுப்பினர்கள் மட்டுமே நேரடியாக உள்ளனர். இருப்பினும், ஆதரவு கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்ததால், மொத்த ஆதரவு எண்ணிக்கை 119 ஆக உள்ளது.

அதுமட்டுமின்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு பிரிவு உறுப்பினர்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். அந்த அணியில் சுமார் 30 உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர் காமராஜும் சட்டப்பேரவையிலேயே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிவித்துள்ளார்.

இதனால், முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு 150 வரை ஆதரவு இருக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. எனவே, இன்றைய பெரும்பான்மை சோதனையில் அரசு எளிதில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.