ஆங்கிலக் கால்வாயை கடந்து சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்தை அடைய முயற்சிக்கும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் இரண்டு புதிய சிறப்பு பாதுகாப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் கீழ், கடற்கரைப் பகுதிகளில் பிரத்யேக கலவரத் தடுப்பு மற்றும் எல்லை கண்காணிப்பு பிரிவுகள் தற்போது செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வடக்கு பிரான்ஸ் பகுதிகளில் இருந்து சிறிய படகுகள் மூலம் நடைபெறும் சட்டவிரோத எல்லைக் கடப்புகளைத் தடுப்பதுடன், மனிதக் கடத்தல் வலையமைப்புகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே, இந்த புதிய படையணியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் ஜெர்மனியில் இருந்து புறப்பட்டதாகக் கூறப்படும் 2,000க்கும் அதிகமானோரின் இங்கிலாந்து நோக்கிய பயண முயற்சிகள் வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் National Crime Agency, German Federal Police மற்றும் French National Police ஆகியவற்றின் மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவுகளின் கூட்டு முயற்சியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சட்டவிரோத குடியேற்றம் என்பது பல நாடுகளை பாதிக்கும் பொதுவான சவாலாக இருப்பதால், அதனை சமாளிக்க நெருங்கிய கூட்டாளி நாடுகளுடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத், பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் அழுத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். படகுகள் கடலுக்குள் செலுத்தப்படுவதற்கு முன்னரே அவற்றைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பங்கள் மூலம் சட்டவிரோத கடத்தல் முயற்சிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன், Compagnie républicaine de sécurité (CRS) எனப்படும் பிரான்ஸின் சிறப்பு கலவரத் தடுப்பு பொலிஸ் பிரிவும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
50 அதிகாரிகள் கொண்ட இந்தப் பிரிவு, சட்டவிரோதமான சூழ்நிலைகள் மற்றும் மனிதக் கடத்தல் வலையமைப்புகளின் புதிய தந்திரங்களை எதிர்கொண்டு, சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.