ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ள இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்க நிகழ்வுகளுக்காக ஈரானிய இராணுவம் அதிஉயர் பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜெனரல் முகமது அக்ரமினியா, பல்வேறு நாடுகளில் இருந்து உயர்மட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஈரானுக்கு வருகை தரவுள்ளதால், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை உள்ளிட்ட அனைத்துப் இராணுவப் பிரிவுகளும் தங்களது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஈரானின் வான் பாதுகாப்புப் படைகள் நாட்டின் வான்வெளியை இடையறாத முறையில் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் முகமது அக்ரமினியா தெரிவித்தார்.
வரும் ஜூலை 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ள இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்க நிகழ்வுகளில் 15 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபாப், நாட்டின் அனைத்து மக்களும் இந்த இறுதி நிகழ்வுகளில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனிக்கிழமை தொடங்கும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு வரலாற்றில் ஒரு முக்கியமான பக்கத்தை எழுதுமாறு அனைத்து ஈரான் மக்களையும் நான் அழைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பழிவாங்கலுக்கான தேசத்தின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டதாகக் கூறப்படும் போரின் முதல் நாளான பெப்ரவரி 28 அன்று, அப்போதைய 86 வயதான உச்ச தலைவர் அலி கமேனி தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு இஸ்லாமியப் புரட்சியை வழிநடத்திய அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பின்னர், 1989ஆம் ஆண்டு முதல் அலி கமேனி ஈரானின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.