செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உலக பாதுகாப்பு வங்கியை உருவாக்கும் முயற்சியில் கனடா; நேட்டோ மாநாட்டில் முக்கிய அறிவிப்பு எதிர்பார்ப்பு

உலக பாதுகாப்பு வங்கியை உருவாக்கும் முயற்சியில் கனடா; நேட்டோ மாநாட்டில் முக்கிய அறிவிப்பு எதிர்பார்ப்பு

1 minutes read

உலகளாவிய பாதுகாப்பு மற்றும் நாடுகளின் நெகிழ்திறனை வலுப்படுத்தும் நோக்கில், புதிய சர்வதேச வங்கி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியில் கனடா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய திட்டம் தொடர்பான முக்கிய நகர்வுகள் அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டின் போது இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா தலைமையிலான பாரம்பரிய உலக ஒழுங்கமைப்பு மாற்றமடைந்து வருவதாக கருதப்படும் சூழ்நிலையில், அதற்கு மாற்றாக நடுத்தர சக்தி நாடுகளின் புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே “பாதுகாப்பு மற்றும் நெகிழ்ச்சி வங்கி” (Defence, Security and Resilience Bank – DSRB) என்ற திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மூலம் நட்பு நாடுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், அவசரகால மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதரவை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கனடாவின் பிசினஸ் டெவலப்மென்ட் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்த பன்னாட்டு முயற்சிக்கான கனடாவின் பிரதான பேச்சுவார்த்தையாளருமான இசபெல் ஹூடான், நேட்டோ உச்சிமாநாட்டை முக்கிய காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நேட்டோ மாநாட்டில் இந்த வங்கியின் நிறுவன உறுப்பு நாடுகளின் பட்டியலை வெளியிடுவதே எங்களின் பிரதான இலக்காகும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறைந்த வட்டியிலான நிதி ஆதரவுகள் மூலம் சுமார் 100 பில்லியன் பவுண்டுகள் அல்லது 133 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியை திரட்டி, கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கமே இந்த வங்கியின் பிரதான இலக்காக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் இந்த திட்டத்தில் இணையும் நாடுகள் கனடாவைத் தவிர பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டாலும், அந்த நாடுகளின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மூலதன பங்களிப்பு மற்றும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளைப் பொறுத்தே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் ஹூடான் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த வங்கிக்கு சர்வதேச அளவில் மிக உயர்ந்த ‘டிரிபிள்-ஏ’ கடன் தரமதிப்பீட்டைப் பெறுவதற்கான முக்கிய நாடுகளின் ஆதரவு இன்னும் முழுமையாக கிடைக்காததால், திட்டத்தின் எதிர்காலம் தொடர்பில் சில சந்தேகங்கள் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.