செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இங்கிலாந்தில் பிரசவத்தின்போது பெண்கள் உயிரிழப்பு 20% அதிகரிப்பு; விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்தில் பிரசவத்தின்போது பெண்கள் உயிரிழப்பு 20% அதிகரிப்பு; விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

1 minutes read

இங்கிலாந்தில் பிரசவத்தின்போது அல்லது பிரசவத்துக்குப் பின்னர் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை கவலைக்கிடமாக அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்திருப்பது மருத்துவத் துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2009 முதல் 2011ஆம் ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில், பிரசவத்துடன் தொடர்புடைய பெண்களின் உயிரிழப்பை பாதியாகக் குறைப்பதற்கான இலக்கை இங்கிலாந்து அரசு நிர்ணயித்திருந்தது. எனினும், அந்த இலக்கு எட்டப்படாததுடன், நிலைமை எதிர்மாறாக மோசமடைந்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து சுகாதாரச் செயலாளராக இருந்த வெஸ் ஸ்ட்ரீட்டிங், நாட்டின் தாய்–சேய் நல மருத்துவ சேவைகளின் செயல்திறன் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வேலரி ஆமோஸ் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், இங்கிலாந்தில் பிரசவத்தின் போது அல்லது அதனைத் தொடர்ந்து உயிரிழக்கும் பெண்களின் விகிதம் 100,000 பேருக்கு 12.8 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 2009–2011 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை இங்கிலாந்திலேயே அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், பிரசவ காலத்தில் பெண்கள் பல்வேறு உடல்நல சிக்கல்கள் மற்றும் மருத்துவப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பிரசவ சேவைகளில் பணிபுரியும் தாதியர் பற்றாக்குறை, மருத்துவப் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக சிக்கல்கள், பணியிடங்களில் காணப்படும் இன அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் சுகாதார சேவைகளில் நிலவும் சமத்துவமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி – மகப்பேறு அவலங்கள்: நோயாளிகளை அவமதித்த ஊழியர்கள், மருத்துவ அலட்சியம் குறித்த அதிர்ச்சிகள்!

மேலும், இயல்பான பிரசவங்களுடன் ஒப்பிடும்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. அதேசமயம், வெள்ளையின மற்றும் பொருளாதார ரீதியாக வசதியான பெண்களை ஒப்பிடுகையில், கருப்பினப் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் பிரசவத்தின்போது அதிகளவில் உயிரிழப்பது கவலைக்குரிய விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாதியர் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு முரண்பாடுகள், மருத்துவத் துறையில் இனவெறி குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இணைந்து, நாட்டின் தாய்–சேய் நல மருத்துவ அமைப்பின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக இந்த விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.