செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானம்

இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானம்

2 minutes read

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிக்க இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட 12 சர்வதேச நாடுகள் தீர்மானித்துள்ளன.

இஸ்ரேலின் தொடர்ச்சியான குடியேற்ற விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான தீவிரவாத குடியேற்றவாசிகளின் வன்முறைகளைக் கண்டித்து, சர்வதேச நாடுகள் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்து வரும் பின்னணியில் இந்த அதிரடித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கரை குடியேற்றப் பொருட்களை இலக்கு வைத்து தேசிய அளவிலான வர்த்தகத் தடைகளை முன்னெடுக்கவுள்ளதாக 12 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளனர். கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, நோர்வே, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, தேசிய ரீதியிலான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவோ அல்லது வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகப் பரிசீலிக்கவோ உறுதியளித்துள்ளன.

மேற்குக் கரையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் E1 குடியேற்றத் திட்டத்திற்கான கேள்விப்பத்திரக் கோரல் மற்றும் தீவிரமடைந்து வரும் குடியேற்றவாசிகளின் வன்முறைகள் காரணமாக அங்கு நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருவதாக குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இரு நாடுகளுக்கான தீர்வு கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், நீதியான மற்றும் நிலையான அமைதியை நிலைநாட்ட உரிய சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, குடியேற்றப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படும் என இங்கிலாந்து வெளிவிவகாரச் செயலாளர் எட் மிலிபான்ட் அந்நாட்டு பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்தத் தடைகள் கட்டுமானம், உட்கட்டமைப்பு, நிதி வழங்கல் மற்றும் காணி-வீடமைப்பு உள்ளிட்ட குடியேற்ற விரிவாக்கத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களையும் இலக்கு வைக்கும் எனவும், இதற்கான சட்டமூலங்கள் அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இஸ்ரேலுக்கு எதிரானது அல்ல எனவும், மாறாக சட்டவிரோதக் குடியேற்றங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத்தை மட்டுமே குறிவைக்கின்றன எனவும் இங்கிலாந்து வெளிவிவகாரச் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுக்குட்பட்ட இஸ்ரேலுடனான வர்த்தகத் தொடர்புகள் வழமை போன்று தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குடியேற்ற விரிவாக்கத்தைக் காரணம் காட்டி, இஸ்ரேலியக் குடியேற்றப் பொருட்களுக்குத் தடை விதிக்கும் நடைமுறைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜோன்-நோயல் பரோ தனியான அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் முன்னெடுக்கும் அனைத்துக் குடியேற்றங்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பெரும்பாலான சர்வதேச நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ள போதிலும், இஸ்ரேல் இக்கருத்தைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

மேற்கத்திய நாடுகளின் இந்த தீர்மானத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், கிழக்கு ஜெருசலேமில் இயங்கி வரும் இங்கிலாந்து துணைத் தூதரகத்தை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டு பதில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் உள்விவகாரங்களில் இங்கிலாந்து தலையிடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார், பல இங்கிலாந்துப் பிரஜைகள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.