செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா குகையில் சிக்கிய அனைவரும் 23 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பாக மீட்பு!

குகையில் சிக்கிய அனைவரும் 23 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பாக மீட்பு!

2 minutes read

 

குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து நாட்டில் சியாங் ராய் மாகாணத்தில் தாம் லுவாங் உள்ள சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக் குகைக்கு ஜூன் 23 ஆம் திகதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2 ஆம் திகதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஒக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஒக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6 ஆம் திகதி உயிரிழந்தார்.

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது.

அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது.

இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது.

மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.

மேற்கண்ட திட்டத்தின்படி நேற்று (09) நான்கு சிறுவர்களும், நேற்று முன்தினம் (08) நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெற்றிகரமாக இந்த 5 பேரும் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

குகைக்குள்ளே இருப்பவர்களை மீட்க ஒரு மாத காலம் வரை கூட ஆகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 நாட்களில் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இவர்களுக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.