இந்திய திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற குறிப்புடன் விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்படுவது குறித்து சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு நாட்டில் இருக்கும் தூதரகத்துக்கு அந்த நாட்டிலிருந்து அனுப்பப்படும் பார்சல்களை சோதனை செய்ய சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. எனவே, சோதனை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கத்தைப் பிடித்துள்ளனர். சோதனை செய்யாமல் வெளியேறும் வாசல் வழியாக தங்கம் வந்த பார்சலை எடுத்துச்செல்ல முயன்ற ஸரித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸரித் இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தில் வேலை செய்திருக்கிறார். அதன் பிறகு பணியிலிருந்து நீக்கப்பட்ட ஸரித், யு.ஏ.இ தூதரக பி.ஆர்.ஓ என்று தன்னைக் கூறிவந்தார். இந்தத் தங்கம் கடத்தலில் யு.ஏ.இ தூதரகத்தில் முன்பு பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்வப்னா சுரேஷ், இப்போது கேரள அரசின் ஐ.டி பிரிவில் ஆபரேஷனல் மேனேஜராகப் பணிபுரிந்துவருகிறார். ஒருமுறை தங்கம் கடத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஸ்வப்னா சுரேஷின் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்வப்னா சுரேஷின் பிசினஸ் வளர்ச்சி அபாரமானதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கேரள அரசின் ஐ.டி துறையில் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது அரசியல் ரீதியாகப் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேரள காங்கிரஸ் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘கேரள தலைமைச் செயலகம் கடத்தல்காரர்களின் கேந்திரமாக மாறிவிட்டது. முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரின் அறிக்கைப்படி குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு மாநில ஐ.டி துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் எனக் கண்டறிய வேண்டும்.
முதல்வரின் செயலருக்கும், ஐ.டி செயலருக்கும் இதில் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க வேண்டும். தங்கம் பிடிக்கப்பட்ட நேரத்தில் தலைமைச் செயலகத்திலிருந்து குற்றவாளியைத் தப்ப வைக்க சிலர் முயற்சி செய்துள்ளார்கள். ஐ.டி துறை செயலருக்கும் தங்கம் கடத்தும் குற்றவாளிக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே தங்கம் கடத்தல் குறித்த முழு விவரங்கள் வெளியே வரவேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.