Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை எதிரொலி: பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு அபாயம்!

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை எதிரொலி: பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு அபாயம்!

4 minutes read

டெல்லி: தொழிற்சாலை மின் நுகர்வு அதிகரிப்பு, மழையால் நிலக்கரி சுரங்கம் மூடல், இறக்குமதி நிலக்கரி விலை அதிகரிப்பு, இருப்பு வைப்பதில் குளறுபடி போன்ற காரணங்களால் பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது, இதையடுத்து நிலக்கரி  ஒதுக்கீட்டை அதிகாரிக்க ஒன்றிய அரசுக்கு பல மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை கடுமையாக இருப்பதால் நாட்டின் பல மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் போன்ற ஆறு மாநிலங்கள் மின்விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தலையீடு செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கடிதம் எழுதினார். இந்நிலையில், மின் நெருக்கடியைச் சமாளிக்க மாநிலங்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி நிலக்கரி விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் ஒன்றியய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், ‘தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை இருந்து  வருகிறது. நிலக்கரி விநியோகம் தடைபட்டுள்ளதால் மின்னுற்பத்தி  பாதிக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உடனடியாக  நீங்கள் இது விஷயத்தில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்  கொண்டுள்ளார். நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்கள் தவித்து வரும் நிலையில், வரும் ஒரு சில நாட்களில் உத்தரபிரதேசத்தில் மின் விநியோக நெருக்கடி மோசமாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், நிலக்கரி சப்ளை விரைவில் சீராக்கப்படும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒன்றிய எரிசக்தி அமைச்சர் காந்த் சர்மா தெரிவித்தார்.பீகார் எதிர்கட்சி தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிக்கையில், ‘பீகார் மாநிலத்தில் மின் விநியோக பாதிப்பு ஏற்படவுள்ளது. ஏற்கனவே மின் கட்டணம் அதிகமாக இருந்தபோதிலும், மாநில அரசின் நிர்வாக தோல்வியால் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

ஒடிசாவை சேர்ந்த உத்கல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி லிமிடெட் (யூசிபிஐ) வெளியிட்ட அறிக்கையில், ‘ஒடிசா அரசு சார்ந்த தொழில்களுக்கு போதுமான அளவு நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தற்போது நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடுமையான நெருக்கடியை தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘நிலக்கரி இருப்பு பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. அனல் மின் நிலையங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு 20 நிலக்கரி ரேக்குகளை கூடுதலாக அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘ராஜஸ்தானில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், வரும் ஓரிரு நாளில் அனல் மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, இரண்டு நாள் பயணமாக ெடல்லி சென்றுவிட்டு நேற்று பெங்களூரு திரும்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து, கர்நாடகத்திற்கு எந்த விதமான பற்றாக்குறையும் இன்றி நிலக்கரி வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தேன். இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறைக்கான நான்கு காரணங்களை ஒன்றிய மின்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில், ‘நாட்டில் நிலக்கரி இருப்பு குறைந்து வருவதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் தலைமையிலான துணைக் குழு வாரத்திற்கு இரண்டு முறை, நிலக்கரி இருப்பு நிலைமையை கண்காணித்து வருகிறது.
கொரோனா ஊரடங்குகிற்கு பின்னர் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்து வருவதால் மின்சாரம் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் முதல் நிலக்கரி சுரங்க பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நிலக்கரி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரிப்பால் இறக்குமதி நிலக்கரி சார்ந்த மின் உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போதுமான அளவு நிலக்கரி இருப்புகளை வைத்திருக்காததால், தற்போது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் தினசரி மின்சார நுகர்வு ஒரு நாளைக்கு 4 பில்லியன் யூனிட்களைத் தாண்டியுள்ளது. 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மின் தேவையை நிலக்கரி மூலமே கிடைக்கிறது. அதனால், நிலக்கரியை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் காலத்திற்கான மின் நுகர்வு 106.6 பில்லியன் யூனிட்டாகவும், அதே தற்போதைய காலகட்டத்தில் 124.2 பில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிலக்கரி சார்ந்த உற்பத்தி 2019ல் 61.91 சதவீதத்திலிருந்து 2021ல் 66.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்தில் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி விலை மார்ச்-2021  இல் 60/டன் டாலரில் இருந்து செப்டம்பரில் 160/டன் டாலராக உயர்ந்தது’ என்று தெரிவித்துள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதால், அதனை முறைப்படுத்துவதற்காக நிர்வாகக் குழு ஒன்றை ஒன்றிய மின்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அதன் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. தினசரி நிலக்கரி இருப்புகளை கண்காணித்தல், மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை மேம்படுத்துதல், இந்திய ரயில்வேயுடன் இணைந்து சப்ளையை உறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிலக்கரி இந்தியா லிமிடெட் (சிஐஎல்) மூலம் வரும் நாட்களில் நாளொன்றுக்கு 1.6 எம்டி அளவிற்கு நிலக்கரி சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More