மும்பை,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மராட்டியம் வந்தார். புனே விமான நிலையம் வந்த அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல், மந்திரி அதீதி தட்காரே, புனே மேயர் முரளிதர் மகோல் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் அவர் நேற்று ராய்காட்டில் சத்ரபதி சிவாஜி மன்னர் முடிசூடிய கோட்டைக்கு சென்றார். கோட்டையில் ஹெலிகாப்டரை இறக்க எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஜனாதிபதி, ரோப் காரில் சென்றார். அவர் கோட்டையில் உள்ள ஜக்தீஸ்வர் கோவில், சத்ரபதி சிவாஜியின் சமாதியையும் பார்வையிட்டார்.
ராய்காட் கோட்டையை பார்வையிட்ட பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “எனக்கும், அனைத்து இந்தியர்களுக்கும் ராய்காட் கோட்டை புனித தலமாகும்” என்றார். ராய்காட் கோட்டையை பார்வையிட்ட 2-வது ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஆவார்.
இதற்கு முன் 1985-ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜியானி சாயில் சிங் ராய்காட் கோட்டையை பார்வையிட்டு இருந்தாா்.