புதுடெல்லி: 2022-2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று தன்னிறைவு பொருளாதாரம் என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது; கொரோனா தொற்றுக்கு பின் புதிய உலகத்துக்கான செயல்முறை வெளிப்படத் தொடங்கி இருக்கின்றது. அதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஏற்கனவே தெரிகின்றது. இந்த உலகமே இந்தியாவை பார்க்கும் பார்வையில் மிகப்பெரிய மாற்றம் வரும். உலகளாவிய மக்கள், அதிகாரம் பெற்ற மற்றும் வலிமையான இந்தியாவை பார்க்க விரும்புகிறார்கள்.
நமது நாட்டை மிக வேகமாக முன்னோக்கி எடுத்துச் செல்வது மற்றும் பல்வேறு துறைகளில் வலிமையாக்குவது இன்றியமையாதது.. அரசியல் கோணங்களை தவிர்த்து, பட்ஜெட்டானது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இளைஞர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. எல்லையோர கிராமங்களில் வசிப்போர் இடம் பெயர்தல் என்பது தேசிய பாதுகாப்புக்கு நல்லது கிடையாது. எல்லையோரத்தில் அமைந்திருக்கும் துடிப்பான கிராமங்களை மேம்படுத்துவதற்கு பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கங்கை கரையோரத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.
விளையாட்டு துறைக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் அளித்துள்ளது. அதற்கான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கிராமங்களிலும் கண்ணாடி இழை இணைய கேபிள் வசதி பெறும். 5ஜி தொழில்நுட்பம் புதிய சகாப்தத்தை உருவாக்கும். பின்டெக் துறையில் டிஜிட்டல் கரன்சி திட்டம் புதிய வாய்ப்புக்களை உருவாக்கும். கடந்த 7 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்திய பொருளாதாரத்தை தொடர்ந்து விரிவுபடுத்துகின்றன. 8 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ1.10 லட்சம் கோடியாக இருந்தது. இன்று சுமார் ரூ.2.3 லட்சம் கோடியாக உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டானது முற்போக்கு, உள்கட்டமைப்பு, முதலீடு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கள் நிறைந்ததாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* பெண் எஜமானிகள்
பிரதமர் மோடி கூறுகையில், “கடந்த 7 ஆண்டுகளில் 3 கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டுள்ளது. இந்த வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயர்களில் உள்ளது. பெண்கள் எஜமானிகளாக்கப்பட்டு உள்ளனர். ஓரு ஏழைக்கு வீடு கிடைக்கும்போது அவருக்கு தைரியம் கிடைக்கிறது. இந்த நாட்டில் ஏராளமானோர், அரசியல் ஆதாயத்துக்காக ஏழைகளை பயன்படுத்துகின்றனர். ஜன்தன் கணக்கு ஏழைகளின் வாழ்க்கையை மாற்றும்போது ஒரு வீடு அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதை அனைவரும் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கு அரசு கட்டி தரும் வீடுகள் ஒருவகையில் அவர்களை லட்சாதிபதி ஆக்குகின்றன,” என்றார்.
* நாட்டை நாசமாக்கும் பட்ஜெட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா நேற்று அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அரசின் பட்ஜெட் நாட்டுக்கு பெரும் நாசத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. விவசாயிகள் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்திய பின்பும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லை. பிரதமர் மோடி நாட்டு மக்களை வார்த்தைகளால் ஏமாற்றி வருகிறார் என தெரிவித்தார்.