March 26, 2023 10:28 pm

அரசுக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! – அதிர்ந்தது கொழும்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயற்பாடுகள் இன்று பாதிக்கப்பட்டன.

முறையற்ற வரி விதிப்பினூடாக அரசு பொதுமக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்ட தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெற்றோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதற்கு இணையாக அரச, தனியார் துறை வைத்தியர்கள் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்று தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒரு பிரிவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

இதனிடையே, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டது.

இதனிடையே, புதிய வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள், கொழும்பு கோட்டை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாகக் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பு கோட்டையின் பல்வேறு வீதிகளில் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.

அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாக அமைதியான போராட்டங்கள் மற்றும் பேரணியை முன்னெடுக்க முடியும் என்று கோட்டை நீதிவான் திலின கமகே சுட்டிக்காட்டினார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயற்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கொழும்பின் பல்வேறு வீதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்டைப் பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

பௌத்தாலோக மாவத்தை, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, தேர்ஸ்டன் வீதி, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தை உள்ளிட்ட வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவானிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

இந்தகி கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதம நீதிவான் பிரசன்ன அல்விஸ், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, அநீதியான வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பால் நாட்டின் பல வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொழும்பு – ஹைட்பார்க்கில் பிரதான எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்றது.

போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளில் கலகம் அடக்கும் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்