September 22, 2023 4:45 am

அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்! – சந்திரிகா எச்சரிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.”
– இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.

நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்கிரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.

ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசில் உள்ளார்கள். ரணில் திருடுகின்றார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் திருடுகின்றார்கள்.

உதாரணத்துக்குச் சுகாதார அமைச்சரைப் பாருங்கள். அவரின் அமைச்சில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவரை அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலிருந்தும் அகற்ற வேண்டும். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான பிரேரணைகளைக் கொண்டு வர வேண்டும்.

ஊழல், மோசடியே நாட்டைப் பின்னுக்குத் தள்ளும். இவ்வாறான ஊழல், மோசடி வஞ்சகர்கள் அதிகாரத்தில் உள்ளார்கள்.

மக்கள் கோபமாக இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்ஷவின் விலகலுக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்