செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி குற்றப் பகுதி; மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு அனுமதி! – யாழ். நீதிமன்றம் கட்டளை

செம்மணி மனிதப் புதைகுழி குற்றப் பகுதி; மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு அனுமதி! – யாழ். நீதிமன்றம் கட்டளை

1 minutes read

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இதேநேரம், குறித்த பகுதி சட்டவிரோதமான – இரகசியமான புதைகுழியாக இருக்கலாம் என்றும், அடையாளப்படுத்தப்பட்ட பகுதியையும் தாண்டி குற்றப் பகுதி இருக்கலாம் என்றும் சட்ட மருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட இடத்தை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கைகளில் மூன்று விடயங்கள் இருவராலும் சுட்டிக்காட்டப்பட்டன.

“அகழ்வு நடைபெறும் இடத்தில் 1.6 மீற்றர் அடி ஆழத்திலேயே மனித எலும்பு எச்சங்களை அடையாளப்படுத்தக் கூடியதாக உள்ளது. குழப்பமான விதத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ காணப்படவில்லை.

இது சட்டவிரோதமான – இரகசியமான புதைகுழியாக இருக்கலாம். தற்போது அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 18 எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 5  எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பல மனித எலும்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தைத் தாண்டியும் குற்றப் பிரதேசம் எனச் சந்தேகிக்கப்படும் பிரதேசம் இருக்கலாம். இந்தநிலையில், இந்த மனிதப் புதைகுழியைத் தொடர்ச்சியாக அகழ வேண்டும்.” – என்று அவர்களின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியும் அகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் திருப்திப்படும் வரையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நீதி அமைச்சின் ஊடாக நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அத்துடன், தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாகத் தெரிவித்த நீதிவான், அவரே தொடர்ந்தும் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதியும் வழங்கினார்.

இதேசமயம், இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகள் நாளை சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More