செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு

2 minutes read

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளிலும், தமிழர் என்கிற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் அனைத்து பாகங்களிலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அரச படைகளாலும், துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமலாக்கப்படுள்ளனர். இந்தத் துயர் தோய்ந்த வரலாறு 1948ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. வகைதொகையற்ற கணக்கில் தமிழ் இளையவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்றோ, அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாத இலங்கை அரசு, இந்த விடயத்தில் பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகிறது.

விசாரணை என்கிற பெயரில் திருடனே குற்றவாளியை தேடும் படலத்தை அரசு அரங்கேற்றி வருகிறது. நீதி கோரும் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் குறித்த பலத்த எதிர்ப்பையும் அதிருப்தியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வெளிப்படுத்தியே வந்திருக்கிறோம்.

இப்போது ஆட்சிபீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஏனைய அரசுகளை விட மிகத் தந்திரோபாயமாக எமது விடயத்தை கையாள்வதை அவதானிக்கிறோம். தெற்கில் தமது சிங்கள இளைஞர்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழ் இளையோரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். எனவே தெற்கோடு கைகோர்த்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்கின்றனர்.

அடிப்படையில் அறமற்ற இந்த வாதம், எமது கண்ணீரை விலை பேசுகிறது. எமது பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு நாம் நட்ட ஈட்டையோ அல்லது அரச வேலை வாய்ப்புக்களையோ பெற்றுக்கொண்டு மரணச் சான்றிதழில் கையெழுத்திட தயாரில்லை. ஆனால் தெற்கு அதனை எப்போதோ செய்துவிட்டது. நாம் எமது பிள்ளைகள் எங்கே என்றே கேட்கிறோம். அதற்கான நீதியைத்தான் கோருகின்றோம்.

எமக்கு முன்னால் செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளைக் காட்டி, கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம். எனவே அரசு வழங்கும் மிகப்பெரிய நட்ட ஈட்டுத்தொகையை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதை நோக்கி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய எம்மை தள்ளிவிடும் உளவியல் போரை இந்த அரசு நடத்தி வருகிறது.

நீதி கோரி நீண்டகாலம் நாம் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இதுவரை 400க்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலே இறந்துவிட்டனர். அவர்களின் இறப்பின் பின்னர் காணாமலாக்கப்பட்டவரை தேடும் வீச்சும் அருகிவருகிறது.

இவ்வாறானதொரு நிலையில் தான் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசின் பொறிமுறைகளை நிராகரித்து சர்வதேச நீதியைக் கோரும் நிகழ்வாக இவ்வருட சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை அனுஷ்டிக்கவுள்ளோம். அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவினையும் எதிர்பார்த்திருக்கிறோம்.

அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்பதுடன் பொது மற்றும் சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.