செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வைர விழா காணும் பரந்தன் இந்து மகாவித்தியாலயம் – சிறப்புப் பதிவு | தமிழினி ஜெயகுமாரன் வைர விழா காணும் பரந்தன் இந்து மகாவித்தியாலயம் – சிறப்புப் பதிவு | தமிழினி ஜெயகுமாரன்

வைர விழா காணும் பரந்தன் இந்து மகாவித்தியாலயம் – சிறப்புப் பதிவு | தமிழினி ஜெயகுமாரன் வைர விழா காணும் பரந்தன் இந்து மகாவித்தியாலயம் – சிறப்புப் பதிவு | தமிழினி ஜெயகுமாரன்

2 minutes read

அதுவொரு கனாக்காலம் – பதிவு – 1

 

1978 தொடக்கம் 1991 வரையான காலம் எனது பாடசாலையின் மடி இன்னொரு தாயாக என்னையும் அரவணைத்திருந்த காலம். வைர விழாக்காணும் அதன் சேவையில், உலகமெலாம் சிதறிக்கிடக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தனது மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றி வைத்த பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது எனது பாடசாலை.

முத்துக்கள் கோர்த்திருந்த ஒரு சிலேட்டுப்பலகையும் கையுமாக, அம்மாவுக்கு பின்னால் பதுங்கியபடி எனது பாடசாலை வளாகத்தில் காலடி எடுத்த வைத்த முதல் நாளின் மங்கலான நினைவுகள் மனதில் விரிகிறது. அம்மாவின் கையிலிருந்த எனது கரங்களை வாஞ்சையுடன் வாங்கிக் கொண்ட செல்லையா ரீச்சரையும் அவருடைய பெரிய கொண்டையும் முகத்தின் மச்சத்தையும் மறக்கவே முடியாது.

முதலாம் வகுப்பு படிக்கும் போது ஒரு வாணி விழா மேடையில் பேசுவதற்காக ஒரு தாளில் எழுதித் தந்திருந்ததை பாடமாக்கி வைத்திருந்தேன். எனது பெயர் கூப்பிட்டதும், தனது முந்தானையால் எனது முகத்தை துடைத்து மேடையில் துாக்கி ஏற்றி விட்ட பத்மா ரீச்சர். நான் பேசி முடிந்ததும் மேடையிலிருந்த இறக்கி எனது நெற்றியில் முத்தமிட்ட அந்தக்கணம், அதன் பின்னர் நான் உரையாற்றிய எத்தனையோ பெரிய மேடைகளில் நிற்கும் போது கூட எனது நினைவுகளை உரசிச் சென்றதுண்டு.

மூன்றாம் வகுப்பு தமிழ்பாட நேரத்தில் “இன்னும் சத்தமாக வாசி… இன்னும் இன்னும்… வாயைத்திறந்து தமிழை உச்சரித்து உரத்து வாசிக்க வேண்டும்” எனக் கூறும் சிவலிங்கம் சேர், தமிழின் இனிமையை எமது நாவில் எப்படிப் புகுத்தினார் என்பதை இப்போதும் மலைப்போடு நினைத்துப் பார்க்கிறேன்.

எனது பாடசாலைதான் உலகத்தை தரிசிக்கும் முதற்களமாக இருந்தது. ஆசிரியர்கள் எமது கண்களாக இருந்தனர். அத்தனை பேரின் பெயர்களும் நினைவடுக்குகளில் இல்லை. ஆனாலும் அவர்களது அறிவின் கம்பீரத் தோற்றங்கள் எனது நெஞ்சத்தில் நிறைந்து நிற்கிறது. அவர்களை எப்போதும் எனது மனதால் பணிந்து போற்றுவேன்.

11255751_696839360441586_4453173239166078830_n

போரின் கொடூர கரங்களில் எனது பாடசாலை சிதைந்தழிந்து போன சந்தர்ப்பங்கள் ஓரிரண்டு அல்ல. என் உணர்வுகளில் கலந்த பாடசாலை வெறும் கற்குவியலாக கிடந்த காட்சிகளையும் கண்டு இதயத்தில் இரத்தம் சிந்தியிருக்கிறேன். எமது கண்களுக்கு முன்பாகவே எமது ஆசிரியர்களும், அதிபரும் கூட இரத்தம் சிந்திய காட்சிகளை எப்படி மறக்க முடியும்.

நினைவு கூருவதற்கும், பதிவு செய்வதற்கும் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. எமது விடலைப் பருவத்தின் கதைகளை சேகரித்து வைத்திருக்கும் பாடசாலையின் கல்லுக்கும் புல்லுக்கும் கூட எவ்வளவே கடமைப்பட்டுள்ளோம்.

உலகத்தின் எந்த உயரத்திற்கு சென்றாலும், எத்தனை சிறப்பு பெற்றாலும், வாழ்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும் அன்னையின் மடிச்சுகத்தில் காணும் நெருக்கம் எத்தனை அற்புதமோ அத்தனை அற்புதமானதுதான் “அ” எழுதிப்படித்த பள்ளிக்கும் மாணவனுக்குமான உறவு.

எனது பாடசாலையின் அறுபது ஆண்டு நிறைவில் அதன் விழுதுகள் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கும் அனைத்துப் பணிகளையும் நினைக்கும் போது மனம் பொங்குகிறது. ‘உன் தாய்க்கு நீ என்ன செய்தாய்’ என மனம் கேள்விகளால் நெருக்குகிறது.

வாழ்க என் தாயே! வளர்க உன் பணி! இன்னும் எத்தனையோ நுாற்றாண்டு வரலாறுகளைக் காண தாழ் பணிந்து வாழ்த்துக்கிறேன் தாயே!

 

நாளையும் தொடரும் ………

 

தமிழினி ஜெயகுமாரன்

பழைய மாணவி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.