ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக உறவு சீராக இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அந்நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் மீது 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்கா, மியன்மார், லாவோஸ் மற்றும் கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளின் பொருள்கள் மீது 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
அத்துடன், மலேசியப் பொருள்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வரிகளை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார். அவற்றை மீண்டும் விதிப்பது பற்றி நாடுகளுக்குத் தெரிவிக்கும் கடிதங்களின் முதல் தொகுப்பையே தற்போது டிரம்ப் அனுப்பிவருகின்றார்.
சம்பந்தப்பட்ட நாடுகள் தீர்வைகளுக்குப் பதிலடி கொடுத்தால், அமெரிக்காவின் பதிலடியும் தீவிரமாக இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.
இதேவேளை, ஏனைய நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்தால், வரிவிதிப்பை ஒத்திவைக்கத் தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி இணக்கமான தீர்வு காண தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. உற்பத்தித் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி, அதன் முக்கிய துறைகளில் வளர்ச்சி காண திட்டமிட்டுள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.