ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வாகனத்தை செலுத்தி பொதுமக்களை தாக்கத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எகிப்தைச் சேர்ந்தவர். மூவர் மொரோக்கோவைச் சேர்ந்தவர்களாகவும், மற்றொருவர் சிரியாவைச் சேர்ந்தவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தெற்கு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் நடைபெற திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எந்த கிறிஸ்துமஸ் சந்தையை இலக்காகக் கொண்டிருந்தனர் என்பது குறித்த தகவலை அவர்கள் வெளியிடவில்லை.
ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தைகள் கடந்த காலங்களிலும் தாக்குதல்களை சந்தித்துள்ளன. சமீபத்தில் 2024 டிசம்பரில் மெக்டபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் ஒருவர் காரை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னர், 2016ஆம் ஆண்டு தலைநகர் பெர்லினில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் கூட்டத்தின்மீது கனரக வாகனம் மோதப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ் சந்தைகளை நடத்தும் நிர்வாகங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளன. ஆனால் அதனுடன் தொடர்பான செலவுகளும் பெரிதும் உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, சில நகரங்களில் பாதுகாப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கிறிஸ்துமஸ் சந்தைகள் ரத்து செய்யப்படும் நிலையும் உருவாகியுள்ளது.