யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் உறுப்பு தானத்தின் மகத்துவத்தையும், உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பாரிய விழிப்புணர்வுப் பேரணி ஒன்று, நேற்று (13) சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை, வடக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் ஆரம்பமான இந்தப் பேரணி, பலாலி வீதி, நாவலர் வீதி, கே.கே.எஸ். வீதி மற்றும் வைத்தியசாலை வீதி வழியாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், மருத்துவபீட மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்வின் ஒரு முக்கிய அங்கமாக, இதுவரை மூளைச்சாவடைந்த நிலையில் தமது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி, பிறருக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒரு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, அக்கொடையாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட விசேட நினைவுப் பகுதி, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
உயிரிழந்த பின்னரும் தமது உறுப்புகளின் மூலம் பிறருக்கு வாழ்வளித்த அந்த உன்னதமான மனிதர்களின் தியாகத்தையும், மனிதநேயத்தையும் எக்காலமும் நினைவுகூரும் வகையில், இந்த நினைவுப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
