செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு ஹாரோ தமிழ் சமூகத்தின் வாகன நிறுத்தக் கட்டணப் பிரச்சினைக்குத் தீர்வு: நகர சபைக்குத் தமிழ்ச் சங்கம் நன்றி

ஹாரோ தமிழ் சமூகத்தின் வாகன நிறுத்தக் கட்டணப் பிரச்சினைக்குத் தீர்வு: நகர சபைக்குத் தமிழ்ச் சங்கம் நன்றி

1 minutes read

இங்கிலாந்து, தெற்கு ஹாரோவில் (Harrow) வசிக்கும் தமிழ்ச் சமூகத்தினர் கடந்த சில மாதங்களாகச் சந்தித்து வந்த வாகன நிறுத்தக் கட்டண விவகாரங்களுக்கு தற்போது சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது.

தெற்கு ஹாரோ பகுதியில் வார இறுதி நாட்களில் பொருட்கள் வாங்கவும், இதர சமூக நடவடிக்கைகளுக்காகவும் வரும் தமிழ் மக்கள், வாகன நிறுத்த விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, பலருக்கு வாகன நிறுத்த அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டமை உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து ஹாரோ தமிழ்ச் சங்கத்தின் (HTA) நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் குமாரசாமி இந்திரஜித் (ஜித் குமார்) பொதுவெளியில் குரல் கொடுத்தார். இது தொடர்பாக அவர் பேஸ்புக் மற்றும் டிக்டாக் தளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தன. அதனைத் தொடர்ந்து, ஹாரோ நகர சபையிடம் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ஹாரோ நகர சபைத் தலைவர் பால் ஆஸ்போர்ன் (Cllr Paul Osborn), பொதுப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் மூலோபாயத் தலைவர் எம்மா ஃபேஸி (Emma Phasey) மற்றும் நகர சபை அதிகாரி சுதேஷ் பாசி (Sudhessh Bhasi) ஆகியோர் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில், தனிப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, வழங்கப்பட்ட பல வாகன நிறுத்த அபராதச் சீட்டுகளை, ஹாரோ நகர சபை இரத்துச் செய்துள்ளது. தமிழ் சமூகத்தின் கவலைகளுக்குச் செவிசாய்த்து, உரிய நடவடிக்கை எடுத்ததற்காக ஹாரோ நகர சபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும், ஹாரோ தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

சமூகப் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான முறையில் நகர சபையிடம் கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளதாக ஹாரோ தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தெற்கு ஹாரோவில் வாகன நிறுத்த அபராதச் சீட்டு பெற்று, அதில் விதிவிலக்கான சூழல்கள் இருப்பதாகக் கருதுபவர்கள், அடுத்தகட்ட வழிகாட்டுதல்களுக்குத் தெற்கு ஹாரோவிலுள்ள திலீப் என்பவரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ் சமூகமாக ஒன்றிணைந்து ஹாரோ நகர சபையுடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவோம் என ஹாரோ தமிழ்ச் சங்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஹாரோ தமிழ் சமூகத்தின் வாகன நிறுத்தக் கட்டணப் பிரச்சினைக்குத் தீர்வு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.