இங்கிலாந்து நாட்டின் நலத்திட்ட அமைப்பில் (Welfare system) பெரும் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் சுமார் £50 பில்லியன் நிதியைச் சேமிக்கத் திட்டமிட்டுள்ளதாக சீர்திருத்தக் கட்சி (Reform UK) அறிவித்துள்ளது.
உழைக்கும் வயதில் உள்ளவர்களுக்கான தனிநபர் சுதந்திரக் கொடுப்பனவு (Pip – Personal Independence Payments) முறையை ரத்துச் செய்ய அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்குப் பதிலாக ‘சுகாதார பாதுகாப்பு உதவித்தொகை’ (Health Security Allowance) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.
மிகவும் தீவிரமான, நீண்டகால மற்றும் அதிக ஆபத்துள்ள பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே நேரடி பண உதவி வழங்கப்படும். ஏனையவர்களுக்கு, அவர்களின் ஊனத்தால் ஏற்படும் “உறுதிப்படுத்தப்பட்ட கூடுதல் செலவுகளை” ஈடுகட்ட உள்ளூர் கவுன்சில்கள் மூலம் உதவி வழங்கப்படும்.
ஊழியர்கள் உடல்நலக்குறைவால் விடுப்பில் இருக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனங்களே அதற்கான செலவை ஏற்க வேண்டும். ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் இதற்கென காப்பீடு எடுக்க வேண்டும். இதற்குப் பதிலாக, நிறுவனங்கள் செலுத்தும் தேசிய காப்பீட்டுப் பங்களிப்பை (NICs) குறைக்க கட்சி பரிந்துரைக்கிறது.
வேலைக்குத் திரும்ப விரும்புபவர்களுக்கு உதவும் வகையில், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) மற்றும் பிசியோதெரபி போன்றவற்றுக்காக ஆண்டுக்கு £1.85 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் அடங்கும்.
இந்நிலையில், இந்த அதிரடி மாற்றங்கள் சுமார் 2.89 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்களிடையே காணப்படும் பதற்றம், மனச்சோர்வு மற்றும் ADHD போன்ற பாதிப்புகளுக்கான நலத்திட்ட உதவிகளும் வயது வந்தோருக்கான புதிய முறைக்கு ஏற்ப மாற்றப்படும்.
சீர்திருத்தக் கட்சியின் இந்தத் திட்டத்துக்கு ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தொழிலாளர் கட்சி (Labour) இதனை “ஊனமுற்றோரின் ஆதரவைப் பறிக்கும் ஒரு கற்பனைப் பொருளாதாரம்” என்று விமர்சித்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி, இது கட்சித் தலைவர் நைஜல் ஃபரேஜ் மீதான நிதி முறைகேடு முறைப்பாடுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு “அரைகுறை கொள்கை” என்று கூறியுள்ளது.
தற்போதுள்ள நலத்திட்ட அமைப்பு “தற்கொலைக்கு சமமான இரக்கம்” என்று வர்ணித்துள்ள சீர்திருத்தக் கட்சி, இது குறித்த முழு விவரங்களை அடுத்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.