“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் எனவும், அத்தேர்தலில் அரசாங்கமே வெற்றி பெறும் எனவும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் 7ஆவது வட்டார சபையாக வேலணை பிரதேசத்துக்குட்பட்ட, நயினாதீவு வட்டார சபை அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
“அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அது ஒரு நல்ல விடயமாகும்.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியே மக்கள் எமக்கு ஆணையளித்தார்கள். எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன. இதில் சுமார் 3,000 சாட்சியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில் ஆராயும் நீதிபதிகள் ஓய்வு பெற்றால், மீண்டும் முதலிலிருந்தே சாட்சி விசாரணைகளை நடத்தவேண்டிய நிலை ஏற்படும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்குத் தற்போதும் அச்சம் நிலவுகிறது. அதனால்தான் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி அவர்கள் பேசி வருகிறார்கள்.
இனவாதம், மதவாதம் மற்றும் சிறைச்சாலைக் கலவரம் எனப் பல வழிகளில் முயன்று பார்க்கின்றனர். ஆனால், அவை எதுவுமே கைகூடவில்லை. தற்போது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கியாவது ஏதேனும் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள்.
அதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்திலோ தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
எமது மக்கள் 30 ஆண்டுகாலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். உறவுகள், உடமைகள் மற்றும் உயிர்கள் என அனைத்தையும் இழந்து, தற்போது தான் மீண்டும் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளோம்.
எனவே, எமது கடல் வளத்தை அழிப்பதற்குத் தமிழக மீனவர்களுக்கு இடமளிக்க முடியாது. தமிழகத்தில் நல்ல மீனவர்களும் உள்ளனர். ஆனால், கடல் கொள்ளையில் ஈடுபடும் சிலர்தான் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.
இந்நிலை நீடித்தால் எமது கடல் பகுதி பாலைவனமாகும் அபாயம் உள்ளது. எனவே, இது குறித்து தமிழக அரசிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படும். முதலாவது அதிகாரிகள் மட்டத்திலான பேச்சும், இரண்டாவது மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சும் நடத்தப்படும். தேவை ஏற்படின் தமிழக முதலமைச்சருடனும் பேசுவோம்.
இங்கிருந்து சென்று போட்டி போட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்திக்கின்றனர். ஆனால், எமது மீனவர்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. மாறாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமாம். மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும். அதில் நாங்களே வெற்றியும் பெறுவோம்” என்றார்.