அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை (24) சிரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுடன் கூடிய பல தசாப்த காலத்துப் பெயர்சூட்டலை இந்த நடவடிக்கை இரத்துச் செய்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இது மற்றொரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், முன்னதாக ‘அல்-நுஸ்ரா முன்னணி’ (al-Nusra Front) என்றும் தற்போது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (Hay’at Tahrir al-Sham – HTS) என்றும் அறியப்படும் அமைப்பை உலகளாவிய பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
இதற்கு இணங்க, அமெரிக்க நிதித்துறை அமைச்சகமும் பொருளாதாரத் தடைகளிலிருந்து நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசெம்பர் இல், HTS தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த பஷர் அல்-அசாத்தை (Bashar al-Assad) ஆட்சியில் இருந்து அகற்றினர்.
13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
“இன்றைய நடவடிக்கை சிரியாவில் கூடுதல் முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்” என்று நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
இந்த பொருளாதாரத் தடை நிவாரண நடவடிக்கைகள், அமெரிக்க ஜனாதிகதி டொனால்ட் டிரம்ப் சிரியாவிற்கு அளித்த வாக்குறுதிக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளன என்று நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இருப்பினும், உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், சிரியாவில் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் தங்களது உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க நிதித்துறை வலியுறுத்தியுள்ளது.