கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக புதிய தீர்வைகளை விதிப்பது தொடர்பான அறிவிப்பை கனடா இன்று வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தீர்வைகளுக்கு இணையாக ‘டொலருக்கு டொலர்’ என்ற அடிப்படையில் பதிலடி வரிகளை விதிக்கும் அணுகுமுறையில் இருந்து கனடா விலகக்கூடும் என கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, கனடிய தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளை இலக்கு வைத்து குறிப்பிட்ட பதிலடி நடவடிக்கைகளை முன்னெடுக்க கனடா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதனால் ஏற்கெனவே பதற்றமடைந்துள்ள அமெரிக்கா–கனடா வர்த்தக உறவுகள் மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தங்களது உள்நாட்டு தொழில்துறைகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அடுத்தடுத்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.