வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாது அற்ப சலுகைளுடன் குறித்த பைல்களை மூடுவதற்கு அரசாங்கம் செயற்படும் நிலையில், நாம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களால் மேற்கொள்ளப்படும் நீதி கோரும் மாநாட்டுக்கு முழுமையாக ஆதரவளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினம் ஆகும். உள்நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதியர் வெள்ளை வான்களிலும் அரச படைகளினால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். மேலும், இறுதி யுத்தத்தில் படைகளிடம் சரணடைந்தனர்.
இவர்கள் பற்றி உள்நாட்டில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அநுர அரசாங்கம் தேர்தல் வாக்குறுதியில் பல கதைகளை தெரிவித்தாலும் எதையும் நீதியாகச் செய்யவில்லை. இன்றைய சூழலில் அவர்கள் தாங்களா? பிள்ளைகளைக் கடத்தினோம் எனக் கேட்கும் முதிர்ச்சியற்று நழுவுகின்றனர். மாறாக இராணுவத்தினையும் ராஜபக்சாக்களையும் பாதுகாக்கும் உத்தியை கையாளுகின்றனர்.
அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடத்தை ஒன்றுக்கு அரசாங்கங்கள் மாறினாலும் பொறுப்புகூற வேண்டியது கட்டாயமானதாகும். இன்றுவரை நாட்டில் கடந்த கால நிதி ஊழல்களுக்கும் சிங்கள மக்களை பாதித்த பாடுகொலைகளுக்கும் விசாரணை செய்யும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான எந்தப் படுகொலைக்கும் கடத்தல்களுக்கும் விசாரணை செய்யவில்லை.
இப்படியான நிலையில் சர்வதேச விசாரணையினை முன்னிறுத்தி எமது தாய்மார் போராடுகின்றனர். அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை நிவர்த்திக்க பல்வேறுபட்ட நீதிக்குப் புறம்பான உபாயங்களை கையாண்டு சலுகை வழியில் எம்மை ஏமாற்ற நினைக்கின்றது. அரசாங்கம் தனக்கிருக்கின்ற அரச திணைக்களங்கள், ஆளணி, ஆற்றலை பயன்படுத்தி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை உண்மைக்குப் புறம்பான நிகழ்ச்சிநிரல்கள் வாயிலாக ஏமாற்றி அழைத்து காணாமலாக்கப்பட்டவர்களின் பைல்களை மூடுவதற்கு முயற்சிக்கின்றது. இந்நிலையில் தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்திற்கு நாம் சகலரும் ஒத்துழைக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.